Published : 15 Mar 2025 04:53 PM
Last Updated : 15 Mar 2025 04:53 PM
டெர்கான் (அசாம்): காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் அசாம் அமைதியற்று இருந்தது என்றும், மாநிலத்தில் அமைதியை மீட்டெடுத்தவர் பிரதமர் நரேந்திர மோடிதான் என்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.
புதுப்பிக்கப்பட்ட லச்சித் பார்புகான் போலீஸ் அகாடமியை திறந்து வைத்து அமித் ஷா பேசினார். அப்போது அவர், "இந்தியாவின் துணிச்சலான மகனும், சிறந்த போர்வீரனுமான லச்சித் பார்புகான், முகலாயர்களை அசாமில் இருந்து விரட்டி அடித்தார். அவரது பெயரில் போலீஸ் அகாடமி அமைக்கப்பட்டிருப்பது நம் அனைவருக்கும் பெருமை சேர்க்கும் விஷயம்.
முகலாயர்களுக்கு எதிரான போரில் அசாமை வெற்றிக்கு அழைத்துச் சென்றவர் லச்சித் பார்புகன். ஆனால் இதற்கு முன் இங்கு ஆட்சியில் இருந்தவர்கள் அரசு பாடத்திட்டத்தில் அவருக்கு சரியான இடம் வழங்கவில்லை. லச்சித் பார்புகானின் வாழ்க்கை வரலாறு, அசாமில் மட்டுமே இருந்தது. ஆனால் இன்று அவரது வாழ்க்கை வரலாறு 23 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.
அசாமில் அமைதி நிலவ காங்கிரஸ் அனுமதிக்கவில்லை. ஆனால், மாநிலத்தில் அமைதியை நிலைநாட்டியவர் பிரதமர் நரேந்திர மோடி. மாநிலத்தில் மோடி உள்கட்டமைப்பை மேம்படுத்தினார். வடகிழக்கு மாநில இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உறுதி செய்தார்.
ஒரு காலத்தில் அசாம் காவல் துறையினர் பயிற்சிக்காக மற்ற மாநிலங்களுக்குச் செல்ல வேண்டியிருந்தது. ஆனால் பாஜக, அரசு கடந்த 8 ஆண்டுகளில் மிகப் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இன்று கோவா மற்றும் மணிப்பூரைச் சேர்ந்த 2,000 போலீசார் லச்சித் பார்புகான் போலீஸ் அகாடமியில் பயிற்சி பெற்றுள்ளனர்.
லச்சித் பார்புகானின் மரபால் ஈர்க்கப்பட்டு, இந்த போலீஸ் அகாடமியின் திட்டம் இரண்டு கட்டங்களாக செயல்படுத்தப்படுகிறது. இது நிறைவடைந்த பிறகு, இது அசாமில் மட்டுமல்லாமல், நாடு முழுவதிலும் நம்பர் 1 போலீஸ் அகாடமியாக இது மாறும்.
மோடி அரசு, அசாமில் பல அமைதி ஒப்பந்தங்களை ஏற்படுத்தி உள்ளது. இதன் விளைவாக, கடந்த 10 ஆண்டுகளில் 10,000-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் ஆயுதங்களை கைவிட்டு அசாமில் முக்கிய நீரோட்டத்தில் இணைந்துள்ளனர். மாநிலத்தில் அமைதி திரும்பியுள்ளது. அசாமில் ஒரு காலத்தில் கிளர்ச்சி, துப்பாக்கிச் சூடு மற்றும் பயங்கரவாதம் பற்றிப் பேசப்பட்டது. இன்று மிக நவீன குறைக்கடத்தித் தொழில் இங்கு அமைக்கப்பட உள்ளது.
அசாம் மக்கள் பாஜகவுக்கு அன்பு, உற்சாகம் மற்றும் ஆசீர்வாதங்களை வழங்கியுள்ளனர். பதிலுக்கு, பாஜக அசாமில் உண்மையான அமைதியைக் கொண்டு வந்து மிகப் பெரிய பணியை சாதித்துக் காட்டியுள்ளது.
அசாமில் உள்ள பாஜக அரசு சட்டம் ஒழுங்குக்குப் புதிய பலத்தை அளித்ததுள்ளது. தண்டனை விகிதம் 5% லிருந்து 25% ஆக உயர்ந்துள்ளது. இது விரைவில் தேசிய சராசரியை விட அதிகமாகும். முன்பு பயங்கரவாதத்திற்கு எதிராகப் போராடுவதற்கு மட்டுமே காவல் துறை இருந்தது, ஆனால் இன்று அது குடிமக்களின் உரிமைகளைப் பாதுகாக்க பாடுபடுகிறது" என தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Loading comments...