Published : 15 Mar 2025 12:17 AM
Last Updated : 15 Mar 2025 12:17 AM

டெல்லியில் 59 வயது மகனுக்கு சிறுநீரக தானம் செய்து மறுவாழ்வு அளித்த 80 வயது தாய்

டெல்லியில் தர்ஷனா ஜெயின் என்கிற 80 வயது மூதாட்டி தனது 59 வயது மகனுக்கு சிறுநீரக தானம் அளித்து மறு வாழ்வு அளித்துள்ளார்.

வடமேற்கு டெல்லி ரோஹிணி பகுதியை சேர்ந்தவர் தொழிலதிபர் ராஜேஷ். இவருக்கு 2 ஆண்டுகளுக்கு முன் கடும் சிறுநீரக நோய் ஏற்பட்டதில் அவரது 2 சிறுநீரகங்களும் செயலிழந்தன. இதையடுத்து அவரது தாயாரும் மகனும் சிறுநீரக தானம் அளிக்க முன்வந்தனர். மருத்துவப் பரிசோதனையில் அவரது தாயாரின் சிறுநீரகம் பொருத்தமாக இருப்பதை மருத்துவர்கள் கண்டறிந்தனர்.

என்றாலும் ராஜேஷ் தயங்கினார். அம்மா வயதானவர், அவரது சிறுநீரகத்தை எடுப்பது குறித்து சமூகம் என்ன சொல்லும் என்று கவலைப்பட்டார். எனவே மாற்று அறுவை சிகிச்சை வேண்டாம் என முடிவு செய்தார்.

என்றாலும் காலப்போக்கில் ராஜேஷின் உடல்நிலை மோசமடைந்து, அவர் பலவீனம் அடைந்தார். ராஜேஷின் குடும்பத்தினர் அவரது முடிவை மறுபரிசீலனை செய்யுமாறு வற்புறுத்தினர். இறுதியில் மாற்று அறுவை சிகிச்சைக்கு ராஜேஷ் ஒப்புக்கொண்டார். இதையடுத்து டெல்லியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை நிபுணர் எச்.எஸ்.பட்யால் தலைமையிலான குழுவால் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

இதுகுறித்து மருத்துவர் எச்.எஸ்.பட்யால் கூறுகையில், “கடைசிக்கட்ட சிறுநீரக நோயுடன் போராடி வந்த ராஜேஷ் தொடர்ந்து டயாலிசிலிஸ் செய்து வந்தார். அவர் மாற்று சிறுநீரகம் பெறும் வாய்ப்பு மிகவும் குறைவாக இருந்தது. எனவே அவரது தாயார் தனது முதிர்ந்த வயதிலும் சிறுநீரக தானம் அளிக்க முன்வந்தார். முழுமையான பரிசோதனைக்கு பிறகு அவர் ஒரு பொருத்தமான நன்கொடையாளர் என்பதை கண்டறிந்தோம். வயதான நன்கொடையாளர்கள் சம்பந்தப்பட்ட அறுவை சிகிச்சையில் இது ஒரு அரிதான நிகழ்வாகும். இது நவீன மருத்துவத்தின் சாத்தியக்கூறுகளையும் ஒரு தாயின் உன்னத மனப்பான்மையையும் காட்டுகிறது. அவரது வயது ஒரு சவாலாக இருந்தபோதிலும், அறுவை சிகிச்சை வெற்றிகரமாக செய்யப்பட்டது.

அறுவை சிகிச்சைக்கு பிறகு நான்காவது நாளில் தர்ஷனா ஜெயினும் குணமடைந்த ஆறாவது நாளில் ராஜேஷும் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். எனவே ஒருவர் ஆரோக்கியமாக இருந்தால், அறுவை சிகிச்சைக்கு வயது ஒரு தடையாக இருக்காது" என்றார்.

ராஜேஷ் கூறுகையில், “எனது தாயார் முழுமையாக குணம் அடைவதை உறுதிசெய்ய 3 மாத ஓய்வில் இருக்குமாறு மருத்துவர் பரிந்துரைத்தார். என்றாலும் எனது தாயார் இப்போதே குணமடைந்து நலமாக உள்ளார்" என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x