Published : 14 Mar 2025 05:14 PM
Last Updated : 14 Mar 2025 05:14 PM

காந்தியின் கொள்ளுப் பேரன் துஷார் காந்தியை கைது செய்ய பாஜக, ஆர்எஸ்எஸ் வலியுறுத்தல் - பின்னணி என்ன?

கேரள பாஜக தலைவர் முரளிதரன் | கோப்புப் படம்

திருவனந்தபுரம்: ஆர்எஸ்எஸ் மற்றம் பாஜக குறித்த தனது கருத்தை திரும்பப் பெற மறுக்கும் காந்தியின் கொள்ளுப் பேரன் துஷார் காந்தியை கைது செய்ய வேண்டும் என்று அந்த அமைப்புகள், கேரள அரசை வலியுறுத்தியுள்ளன.

கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகில் உள்ள நெய்யாற்றின்கரையில் மறைந்த காந்தியவாதி பி.கோபிநாதன் நாயரின் சிலையை காந்தியின் கொள்ளுப் பேரன் துஷார் காந்தி நேற்று முன்தினம் திறந்து வைத்தார். விழாவில் உரையாற்றிய அவர், ​​பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ்ஸை கேரளாவுக்குள் நுழைந்த "ஆபத்தான மற்றும் நயவஞ்சக எதிரிகள்" என்று குறிப்பிட்டார். மேலும் அவர், ஆர்எஸ்எஸ்ஸை "விஷம்" என்றும் கூறியிருந்தார்.

இதையடுத்து நிகழ்ச்சி முடிவடையும் தருணத்தில் அங்கு வந்த ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜக தொண்டர்கள், துஷார் காந்திக்கு எதிராக முழக்கமிட்டனர். ஆர்எஸ்எஸ் அமைப்புக்கு எதிரான கருத்தை திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்தினர். இந்நிலையில், இந்தச் சம்பவம் தொடர்பாக கொச்சி அருகே உள்ள ஆலுவாவில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் பேசிய துஷார் காந்தி, "அந்த விஷயங்களை நான் ஒருமுறை சொல்லிவிட்டேன். அவற்றைத் திரும்பப் பெறுவதிலோ அல்லது மன்னிப்பு கேட்பதிலோ எனக்கு நம்பிக்கை இல்லை.

இந்தச் சம்பவம் துரோகிகளைத் தொடர்ந்து அம்பலப்படுத்துவதற்கான எனது உறுதியை வலுப்படுத்தியுள்ளது. இது சுதந்திரப் போராட்டத்தை விட அவசியமான ஒரு போராட்டம். இப்போது நமக்கு ஒரு பொதுவான எதிரி, ஆர்எஸ்எஸ். அவர்கள் அம்பலப்படுத்தப்பட வேண்டியவர்கள். எனது கொள்ளுத் தாத்தாவைக் கொன்றவர்களின் சந்ததியினரான இவர்கள், மகாத்மா காந்தியின் சிலைக்குச் சென்று, அவர்கள் 'வழக்கமாகச் செய்வது போல்' அதன் மீது துப்பாக்கியால் சுடுவார்களே என்று கவலைப்படுகிறேன்" என தெரிவித்தார்.

இதனிடையே, நெய்யாற்றின்கரையில் துஷார் காந்திக்கு எதிராக பாஜக நடத்திய போராட்டத்தில் பேசிய முன்னாள் மத்திய அமைச்சரும், பாஜக தலைவருமான வி.முரளிதரன், "துஷார் காந்தி பல ஆண்டுகளாக மகாத்மா காந்தியின் பெயரை 'பணமாக்க' முயற்சித்து வருகிறார். சிலை திறப்பு விழாவுக்கு அவரை அழைத்தவர்களுக்கு அவரது பின்னணி தெரியாது. காந்தி என்ற பெயர் இருப்பதால், தேசப் பிதாவுக்குக் கிடைக்கும் மரியாதை துஷார் காந்திக்கு கிடைக்காது. பாஜக அளித்துள்ள புகாரின் அடிப்படையில் துஷார் காந்தியை கைது செய்ய வேண்டும்" என வலியுறுத்தினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Loading comments...

 
x