Published : 29 Jul 2018 01:08 PM
Last Updated : 29 Jul 2018 01:08 PM
மகள் இறந்தால் என்ன, தன் மகளைப் போன்று இருக்கும் ஏழைச் சிறுமிகளின் கல்விக்காக உதவலாம் என்ற நல்ல சிந்தனையுடன் 45 ஏழை மாணவிகளுக்குக் கல்வி கட்டணத்தை அரசு ஊழியர் ஒருவர் செலுத்தியுள்ளார்.
கர்நாடக மாநிலம், கல்புர்கி மாவட்டம் மக்தம்புரா நகரைச் சேர்ந்தவர் பசவராஜ். இவர் அங்குள்ள எம்.பி.எச்எஸ் அரசு உயர்நிலைப்பள்ளியில் உதவியாளராகப் பணியாற்றி வருகிறார். இவரின் மகள் தனேஷ்வரி கடந்த ஆண்டு உடல்நலக் குறைவால் திடீரென்று இறந்துவிட்டார். இதனால், மிகுந்த சோகத்துடன் இருந்த பசவராஜ், தன் மகளின் நினைவாக ஏதேனும் நல்ல காரியங்கள் செய்ய நினைத்திருந்தார்.
தன் மகளுக்குத்தான் எந்தவிதமான கல்வியையும் கொடுக்க முடியாமல் போனது, ஆனால், தன் மகளின் வயதில் இருக்கும் சிறுமிகளுக்கு கல்வியைக் கொடுக்கலாம். ஏழை மாணவிகளின் கல்விக்கட்டணத்தை செலுத்தி அவர்களைக் கல்வி கற்க வைக்கலாம் என்ற முடிவுக்கு பசவராஜ் வந்தார்.
இதையடுத்து, இந்த ஆண்டு முதல் ஏழை மாணவிகளைத் தேடிப்படித்து கல்விக்கட்டணத்தை செலுத்தி அவர்களைத் தொடர்ந்து படிக்க உதவி செய்து வருகிறார். இதுவரை மொத்தம் 45 மாணவிகளின் கல்விக்கட்டணத்தை செலுத்தி அவர்களின் படிப்பை தொடர பசவராஜ் உதவியுள்ளார்.
இது குறித்து பசவராஜ் நிருபர்களிடம் கூறுகையில், என் மகளுக்கு என்னால் நல்ல கல்வியைக் கொடுக்க முடியவில்லை. ஆனால், என் மகள் இந்த உலகில் இல்லாவிட்டால் கூட என் மகளைப் போன்று இருக்கும் எத்தனையோ மகள்களுக்கு இனிமேல் கல்வியை என்னால் கொடுக்க முடியும். அதனால், ஏழை மாணவிகளைத் தொடர்புகொண்டு, அவர்களைக் கண்டுபிடித்து கல்விக்கட்டணத்தைச் செலுத்தி உதவி செய்து வருகிறேன் எனத் தெரிவித்தார்.
பசவராஜிடம் இருந்து உதவி பெற்ற பள்ளி மாணவி பாத்திமா கூறுகையில், நாங்கள் ஏழை குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். கல்விக்கட்டணத்தை செலுத்த முடியாமல் படிப்பை பாதியிலேயே நிறுத்த முடிவு செய்திருந்தோம். ஆனால் எங்களைத் தொடர்பு கொண்ட பசவராஜ் சார், எங்களுக்கு கல்விக்கட்டணத்தை செலுத்தி படிப்பைத் தொடர உதவியுள்ளார். அவரின் மகளின் ஆத்மா சாந்தி அடையநாங்கள் இறைவனிடம் வேண்டுவோம் எனத் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT