Published : 14 Mar 2025 05:08 AM
Last Updated : 14 Mar 2025 05:08 AM
சத்தீஸ்கர் மாநிலத்தில் 17 மாவோயிஸ்டுகள் நேற்று சரண் அடைந்தனர். இவர்களில் 9 பேர் ரூ.24 லட்சம் பரிசுத் தொகையுடன் தேடப்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இது குறித்து பிஜப்பூர் சீனியர் எஸ்.பி. ஜிதேந்திர குமார் யாதவ் கூறியதாவது: சத்தீஸ்கரின் பிஜப்பூர் மாவட்டத்தில் மாவோயிஸ்டுகள் 17 பேர் நேற்று சிஆர்பிஎப் போலீஸாரிடம் சரணடைந்தனர். இவர்களில் 9 பேர் மொத்தம் ரூ.24 லட்சம் பரிசுத் தொகையுடன் தேடப்பட்டவர்கள். மாவோயிஸ்ட் கொள்கைகளால் தாங்கள் ஏமாற்றம் அடைந்ததாக அவர்கள் தெரிவித்துள்ளனர். அப்பாவி பழங்குடியினரை மாவோயிஸ்ட் சீனியர் தலைவர்கள் தவறாக பயன்படுத்தியுள்ளனர். நக்சல் பாதிப்பு பகுதியில் கொண்டு வரப்பட்ட ‘உங்கள் நல்ல கிராமம்’ திட்டம் மாவோயிஸ்ட்களை ஈர்த்துள்ளது. அதனால் அவர்கள் சரணடைந்துள்ளனர்.
இவர்கள் அனைவரும் மாவோயிஸ்ட் இயக்கத்தில் பல்வேறு பொறுப்புகளில் இருந்தவர்கள். இவர்களில் தினேஷ் என்பவர் 26 வழக்குகளில் தேடப்படும் குற்றவாளி. இவரைப் பற்றி தகவல் தெரிவித்தால் ரூ.8 லட்சம் பரிசு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இவரது மனைவி ஜோதி பற்றி தகவல் தெரிவித்தால் ரூ.5 லட்சம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. சரணடைந்த 6 பேருக்கு தலா ரூ.1 லட்சம் பரிசு அறிவிக்கப்பட்டிருந்தது. இவர்களை சரணடைய செய்ததில் பாதுகாப்பு படையினரின் பங்கு மிக முக்கியமானது.
சரணடைந்த மாவோயிஸ்ட்களுக்கு தலா ரூ.25,000 நிதி உதவியுடன் மறுவாழ்வு திட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்தாண்டில் இதுவரை 65 மாவோயிஸ்ட்கள் சரணடைந்தனர். கடந்தாண்டில் 792 பேர் சரணடைந்தனர். இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment