Published : 13 Mar 2025 06:48 PM
Last Updated : 13 Mar 2025 06:48 PM
புதுடெல்லி: எலான் மஸ்கின் ஸ்டார்லிங்க் நிறுவனத்துடன் ஏர்டெல், ஜியோ நிறுவனங்கள் வணிக ஒப்பந்தங்கள் செய்து கொண்டதன் பின்னணியில் அரசியல் உள்ளதாக காங்கிரஸ் கட்சியின் ஊடகப் பிரிவு பொதுச் செயலாளரும், அக்கட்சியின் மூத்த தலைவருமான ஜெய்ராம் ரமேஷ் குற்றம்சாட்டியுள்ளார்.
இது குறித்து அவர் இன்று வெளியிட்ட கருத்து: “எலான் மஸ்குக்கு சொந்தமான ஸ்டார்லிங்க் நிறுவனம் இந்தியாவுக்குள் நுழைய கடந்த காலங்களில் எதிர்ப்புக் குரல் எழுப்பியதில் ஜியோ, ஏர்டெல் நிறுவனங்களுக்கு முக்கிய பங்கு உண்டு. ஆனால், தற்போது அந்த நிறுவனங்கள் அனைத்து ஆட்சேபனைகளையும் மறந்து ஸ்டார்லிங்க் நிறுவனத்துடன் உடன்படிக்கை செய்து கொண்டுள்ளன.
குறிப்பாக, 12 மணி நேரத்துக்குள்ளாக ஏர்டெல், ஜியோ ஆகிய நிறுவனங்கள், ஸ்டார்லிங்கிடம் செயற்கைகோளில் இருந்து நேரடியாக இணைய சேவையை பெறுவதற்கான ஒப்பந்தங்களை உருவாக்கியுள்ளன. இதன் முழு பின்னணியில் அரசியல்தான் உள்ளது.
எலான் மஸ்க் மூலமாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பிடம் பிரதமர் மோடி நல்ல பெயர் வாங்க வேண்டும் என்பதற்காகவே ஸ்டார்லிங்க் சேவையில் இணைய வேண்டும் என ஏர்டெல், ஜியோ நிறுவனங்களுக்கு அழுத்தம் தரப்பட்டுள்ளது. இதன்மூலம் ட்ரம்ப்பின் விருப்பமானவர்கள் பட்டியலில் சேர்ந்து விடலாம் என்பது பிரதமர் மோடியின் எண்ணமாக உள்ளது. ஆனால், இதில் பல கேள்விகள் அடங்கியுள்ளன.
அந்தக் கேள்விகளில் மிகவும் முக்கியமானது தேசிய பாதுகாப்பு தொடர்பானது. தேசிய பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்படும்போது இணைய இணைப்பை இயக்க அல்லது துண்டிக்க யாரிடம் அதிகாரம் இருக்கும் ? ஸ்டார்லிங்க் நிறுவனத்திடமா அல்லது இந்திய நிறுவனங்களிடமா என்பதை தெளிவுபடுத்த வேண்டும்.
மேலும், செயற்கைக்கோள் அடிப்படையில் இணைப்பு வழங்கும் பிற நிறுவனங்களுக்கு எதன் அடிப்படையில் இந்தியாவில் நுழைய அனுமதி கிடைக்கும் என்பன போன்ற கேள்விதான் இந்தியாவில் டெஸ்லா உற்பத்தி குறித்தும் உள்ளது” என்று ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Loading comments...