Published : 12 Jul 2018 12:22 PM
Last Updated : 12 Jul 2018 12:22 PM
நாடு முழுவதும் வெள்ளத்தால் பாதிப்பு ஏற்படக் கூடிய பகுதிகளில் மக்களுக்கு உதவிபுரிய காத்திருக்கும் தேசிய பேரிடர் மீட்பு மற்றும் நிவாரணப் படைகளை மத்திய உள்துறை இணை அமைச்சர் கிரண் ரிஜிஜூ ஆய்வு செய்தார்.
தேசிய பேரிடர் மீட்புப் படைகளை கிரண் ரிஜூஜூ சோதனையிட்டு வருகிறார். இன்று மும்பையில் உள்ள மண்டல மீட்பு மையத்தை மத்திய உள்துறை இணை அமைச்சர் கிரண் ரிஜிஜூ பார்வையிட்டார். இந்தப் பருவமழைக்கு தேசிய பேரிடர் மீட்புப் படையின் முன்னேற்பாடுகளின் தரத்தை அறிந்துகொள்ளவும் அவரது ஆய்வுப் பணிகள் அமைந்திருந்தன.
என்டிஆர்எப் உயரதிகாரிகள் பேரிழிவு ஏற்படும் சூழ்நிலைகளில் எந்த வகையான அபாயத்தையும் எதிர்கொள்ள தங்கள் திட்டமிட்ட முன்னேற்பாடுகளைப் பற்றி விளக்கினர்.
இதுகுறித்து மத்திய உள்துறை இணை அமைச்சர் கிரண் ரிஜிஜூ தனது ட்விட்டர் பதிவில், ''மும்பை மண்டலத்தைச் சார்ந்த என்டிஆர்எப் (தேசிய பேரிடர் மீட்புப் படை) மீட்பு நடவடிக்கை ஏற்பாடுகளை இன்று நான் ஆய்வு செய்தேன். நமது நாட்டுக்குள்ளும் அண்டை நாடுகளுக்குள்ளும் ஏற்படும் வெள்ளம் மற்றும் மற்ற தேசிய பேரிடர்களை சமாளிக்க தேவையான முழு ஆயத்தங்களோடும் பயிற்சியோடும் @NDRFHQ விளங்குகின்றது’’ என குறிப்பிட்டுள்ளார்.
மொத்தம் 96 குழுக்கள்
சவால்மிகுந்த வெள்ளம் பெருக்கெடுத்து பாதிப்பு ஏற்படுத்தும் 71 இடங்களில் தேவையான அவசர உதவிகள் புரிய, தேசிய பேரிடர் மீட்பு படையின் மொத்தம் 96 மீட்பு மற்றும் நிவாரணக் குழுக்களைச் சேர்ந்த 3000 பேர் நாடெங்கிலும் தயார் நிலையில் நிறுத்தப்பட்டுள்ளனர்.
ஏற்கெனவே 26 மண்டல மீட்பு மையங்களில் நிரந்தரமாக உள்ள 42 குழுக்கள் உள்ளன. அதுதவிர, தற்போது எப்பொழுது வேண்டுமானாலும் மழைவெள்ள பாதிப்புகள் ஏற்படும் என்ற நிலையிலுள்ள 45 இடங்களில் 54 மீட்பு மற்றும் நிவாரணக் குழுக்கள் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளன.
இந்த மண்டல மீட்பு மையங்கள் எந்தவொரு நிகழ்விற்கும் உடனடியாக பதிலளிப்பதற்கு மாநிலங்களின் பாதிப்புத்திறன் தன்மையின் படி அடையாளம் காணப்பட்டுள்ளன.
இதற்கிடையில், புதுடெல்லியில் எந்த நிமிடமும் தொடர்புகொள்ளத் தகுந்த 24x7 என்டிஆர்எப் கட்டுப்பாட்டு அறை நாட்டின் அனைத்து பகுதியிலுமுள்ள சூழ்நிலைகளைக் கண்காணித்து வருவதோடு அனைத்து அமைப்புளோடும் துறைகளுடனும் தொடர்பிலும் உள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT