Published : 21 Jul 2018 08:54 AM
Last Updated : 21 Jul 2018 08:54 AM
திருப்பதி ஏழுமலையானுக்கு ஒவ்வொரு ஆண்டும் மைசூர் மகாராஜாவின் நினைவாக, அவரது பிறந்த ஜன்ம நட்சத்தில், பல்லவோற்சவம் எனும் பெயரில் அரச ஹாரத்தி வழங்குவது ஐதீகமாக நடந்து வருகிறது.
மைசூர் மகாராஜா-1, திருப்பதி ஏழுமலையானின் தீவிர பக்தராவார். இவரது ஆட்சி காலத்தில், மூலவருக்கும், ஸ்ரீதேவி, பூதேவி மற்றும் மலையப்ப சுவாமி
களுக்கு பிளாட்டினம், கோமேதகம், தங்கம், வைரம் மற்றும் பொற்காசுகளை அவர் காணிக்கையாக வழங்கியுள்ளார். பிரம்மோற்சவ நாட்களில் சுவாமி திருவீதி உலா வரும் கருடன், யானை, குதிரை, முத்துப்பல்லக்கு, சர்வ பூபாலம் உள்ளிட்டவைகளும் மைசூர் மகாராஜாவால் காணிக்கையாக வழங்கப்பட்டவைதான். இன்றுவரை, சுவாமியின் கருவறை சன்னதியில் எரியும் நெய் விளக்குக்காக தினமும் 5 கிலோ பசு நெய் கைங்கர்யமும் மைசூர் மகாராஜா சமஸ்தானம் மூலமாகவே வழங்கப்பட்டு வருகிறது.
மேலும், இன்றுவரை, சுப்ரபாத சேவைக்குமுன், மைசூர் சமஸ்தானம் சார்பில் நவநீத ஹாரத்தி சுவாமிக்கு வழங்கப்படுகிறது. மேலும், தீபாவளி ஆஸ்தானம், உகாதி, ஆனிவார ஆஸ்தானம் போன்ற விஷேச நாட்களிலும் மைசூர் சமஸ்தான ஹாரத்தி வழங்கப்படுகிறது. இதனால், கடந்த 300 ஆண்டுகளாக மைசூர் மகாராஜா வாரிசுகள், கர்நாடக அரசு ‘பல்லவோற்சவம்' எனும் பெயரில் திருமலையில் உற்சவ மூர்த்திகளுக்கு கர்நாடக அரசு சார்பில் ஹாரத்தி எடுத்து வணங்கி வருகின்றனர்.
இந்த ஆண்டு, வரும் 23-ம் தேதி இவ்விழா நடத்தப்படுகிறது. அன்றைய தினம், உற்சவ மூர்த்திகளான தேவி, பூதேவி சமேத மலையப்ப சுவாமிகள், தங்க திருச்சி வாகனத்தில் 4 மாட வீதிகளில் பவனி வருவர். இதற்கு முன்பாக திருமலையில் உள்ள கர்நாடக சத்திரத்தில், உற்சவ மூர்த்திகளுக்கு கர்நாடக அரசு சார்பில் ஹாரத்தி கொடுத்து மரியாதை செலுத்தப்படும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT