Published : 13 Mar 2025 04:15 AM
Last Updated : 13 Mar 2025 04:15 AM
புதுடெல்லி: தேசிய கல்விக் கொள்கை விவகாரத்தில், தமிழக எம்.பி.க்கள் காட்டும் எதிர்ப்பு அநாகரீகமானது என மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் நாடாளுமன்றத்தில் கூறியதற்காக கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து அவர் தான் கூறியதை திரும்பபெற்றார்.
இந்த விவகாரத்தை நேற்று மக்களவையில் எழுப்பிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசியதாவது: அநாகரீமாக போராட்டம் நடத்துகிறீர்கள் என மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறியதற்காக திமுக எம்.பி.க்கள் போராட்டம் நடத்துகிறீர்கள். தர்மேந்திர பிரதான் கூறியதை திரும்ப பெற வைத்தார்கள். அவர்களிடம் பணிவுடன் ஒன்று கேட்க விரும்புகிறேன்.
ஒரு பிரபல மூத்த தலைவர் தமிழ் பற்றி கூறியதை இங்கு குறிப்பிட விரும்புகிறேன். அவருடைய பெயரை குறிப்பிட விரும்ப வில்லை. ஆனால் அவர் கூறியதை வாசிக்கிறேன். அவர் யார் என தமிழ் மொழியை அறிந்தவர்களுக்கு தெரியும். அவர் கூறியது கடந்த 1943-ம் ஆண்டு நவம்பர் 27-ம் தேதி வெளியான விடுதலை இதழில் வெளியிடப்பட்டது.
‘‘தமிழ் படித்தால் பிச்சை கூட கிடைக்காது. தமிழ் படித்தது பிச்சை எடுப்பதை தவிர உயிர் வாழ ஒன்றுக்கும் பயன்படவில்லை. இதற்காக செலவிட்ட காலத்தை வேறு துறையில் செலவிட்டிருந்தால், வாழ்வில் பயன் ஏற்பட்டிருக்கும்’’ என்பதை 100 ஆண்டுகளுக்கு முன்பு தமிழ் கற்ற ஒரு அனுபவ புலவர் கூறினார். தமிழை பற்றி எவ்வளவு இழிவாக அவர் கூறினார் என்பதற்கு இந்த ஒரு வரி போதும்.
ஆனால், அவரது போட்டோவை திமுக எம்.பி.க்கள் தங்கள் அறையில் வைத்து வழிபடுகிறீர்கள். ஆனால் அநாகரீகமாக போராட்டம் நடத்துகிறீர்கள் என அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறியதற்காக அவரை மன்னிப்பு கேட்க வேண்டும் என கூறுகிறீர்கள்.
அதே மூத்த தலைவர் துக்ளக் பொன்விழா ஆண்டு இதழில், ‘‘இந்த தமிழ் மொழியானது, காட்டுமிராண்டி மொழி என நான் ஏன் கூறுகிறேன்? என்று இன்று கோபித்துகொள்ளும் யோக்கியர்கள் யாரும் சிந்தித்து பேசுவதில்லை. வாய் இருக்கிறது என்று எதையாவது பேசி வயிறு வளர்ப்போம் என்பதை தவிர அறிவையோ, மானத்தையா, ஒழுக்கத்தையோ பற்றி சிறிது கூட சிந்திக்காமல் பேசிவருகிறார்கள். இப்படிபட்ட இவர்கள் போக்கு படியே சிந்தித்தாலும், தமிழ் மொழி 3000லிருந்து 4000 ஆண்டுகளுக்கு முந்தி ஏற்பட்ட மொழி என்பதை, தமிழன் பெருமைக்கு ஒரு சாதனமாய் கொண்டு பேசுகிறார்கள். நானும் தமிழ் காட்டுமிராண்டி மொழி என்பதற்கு அதையேதான் முக்கிய காரணமாக சொல்கிறேன். அன்றிருந்த மக்களின் நிலை என்ன? அவன் சிவனாக இருக்கட்டும், அகஸ்தியனாகட்டும், மற்றும் எவன்தான் ஆகட்டும். இவர்களை பற்றி தெரிந்துகொள்ள உனக்கு புத்தியில்லாவிட்டால், இத்தமிழை பற்றி பேச நீ தகுதி உடையவனா? இவர்களை பற்றியும், இவர்கள் வாழ்ந்த வாழ்க்கையையும் பற்றியும் நீங்கள் படிக்காமல் தமிழ் பழமையான என மொழி என கூறுகிறார்கள்.’’ என்றார்.
தமிழ் காட்டுமிராண்டி மொழி என மீண்டும் மீண்டும் கூறியவரை இவர்கள் வழிபடுகிறார்கள்? அவரைத்தான் திராவிட இயக்கத்தின் அடையாளம் என்கிறார்கள். இவர்களின் கபட நாடகத்தை பாருங்கள். தமிழை நேசிப்பவர்கள் என கூறுபவர்கள், தமிழ் காட்டுமிராண்டி மொழி என கூறியவரை எப்படி வழிபடுகின்றனர்?
அதே நபர் , ‘‘தமிழ் அறிஞர்களை ஆயுள் முழுவதும் சிறையில் அடைக்க வேண்டும். சமூக முன்னேற்றத்துக்கு இவர்கள் எதுவும் செய்யாததால் அவர்களை தூக்கிலிட வேண்டும். தமிழை நேசித்தவர்களுக்கு இவர்களின் பங்களிப்பு எதுவும் இல்லை’’ என்று கூறினார். இது கடந்த 1967-ம் ஆண்டு மார்ச் 16-ம் தேதி வெளியான விடுதலை இதழில் வெளியிடப்பட்டுள்ளது. இத்தகைய தலைவரை வழிபடுவதுதான் திாவிட மாடல்.
மேலும், அவர் கடந்த 1967-ம் ஆண்டு நடைபெற்ற உலக தமிழ் மாநாட்டில் பங்கேற்றவர்களை முட்டாள்கள் என கூறினார். இதெல்லாம் அவரின் பொன்னான வார்த்தைகள். தமிழை கற்பது எதற்கும் உதவாது, பிச்சை எடுக்க கூட உதவாது என கூறினார்.
இதற்கெல்லாம் எதிர்ப்பு தெரிக்காமல், தமிழை நேசிப்பாதக கூறும் இவர்கள் இந்தியை திணிப்பதாக கூறுகிறார்கள். தமிழை கற்க வேண்டும் என்றுதான் புதிய கல்விகொள்கை கூறுகிறது. ஆனால், இவர்கள் இந்தியை ய திணிப்தாக கற்பனை செய்து கொண்டு, தமிழ்நாட்டில் தவறாக அரசியல் குழப்தை ஏற்படுத்தி, தமிழக குழந்தைகள் கல்வி கற்கும் உரிமையை மறுக்கிறார்கள். தமிழ் காட்டுமிராண்டி மொழி என கூறியவரை வழிபடுகிறார்கள்.
இதையெல்லாம் நான் நாடளுமன்றத்தில் எடுத்து சொல்வேன் என்ற பயம் காரணமாக, தமிழக எம்.பி.க்கள் நாடாளுமன்றத்தை விட்டு ஓடிவிட்டனர். ஆனால், இவர்கள் இதை டி.வி.யில் பார்ப்பார்கள் என எனக்கு தெரியும். தமிழ்நாட்டு மக்களும் இதை டி.வி.யில் பார்ப்பார்கள். இவர்களின் நடிப்பை எடுத்துரைக்க வேண்டும். பிரதமர் மோடி கொண்டுவந்துள்ள புதிய கல்வி கொள்கை ஏழை, எளிய மக்களுக்கு உதவியாக இருக்கும் என நான் தமிழக மக்களுக்கு கூற விரும்புகிறேன். இவ்வாறு நிர்மலா சீதாராமன் கூறினார்.
அப்போதே சர்ச்சை: தமிழ் காட்டுமிராண்டி மொழி என தெரிவிக்கப்பட்ட கருத்துக்கு 1967-ம் ஆண்டே எதிர்ப்பு கிளம்பியது. அப்போதைய மதுரை பல்கலைக்கழக துணைவேந்தராக இருந்த மீனாட்சி சுந்தரம் இந்த கருத்தை ஏற்கவில்லை. ஈரோடு வாசவி கல்லூரியில் வாசவி தமிழ் மன்றத்தை திறந்து வைத்த அவர், நூலகத்தை மாணவர்கள் நன்கு பயன்படுத்த வேண்டும் என கேட்டுக் கொண்டார்.
‘‘உலக தமிழ் மாநாட்டுக்கு செலவு செய்யும் பணம் வீண்’’ என தெரிவிக்கப்பட்டது குறித்து கருத்து தெரிவித்த சர்வதேச தமிழ் ஆராய்ச்சி கழகத்தில் 1968-ம் ஆண்டு பொது செயலாளராக இருந்த சேவியர் எஸ் தானி நாயகள் கூறுகையில், ‘‘ இது அந்த தலைவரின் தனிப்பட்ட கருத்து. காட்டுமிராண்டி என்பது பழமையான மற்றும் நாகரிகம் அற்ற நபரை குறிக்கிறது’’ என்றார்.
அப்போதைய முதல்வர் அண்ணாதுரை கூறுகையில், ‘‘ தமிழில் ராமாயணம், மகாபாரதம் போன்ற இதிகாசங்கள் மட்டுமே இருந்தன. அதில் அந்த தலைவருக்கு நம்பிக்கையில்லை. அதனால் அவ்வாறு கூறியுள்ளார்’’ என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT ( 3 Comments )
பெரியாரை விடுங்க... அவர் ஒரு சமயம் காட்டுமிராண்டி மொழி என்றார்... மறு சமயம், தமிழ் எழுத்துக்களை சீர்படுத்தினார். விமர்சிக்கவும் செய்தார், சீர்தூக்கவும் செய்தார். ஆனா, உங்களவா... ஆரம்பம் முதல் முடிவு பரியந்தம்... தமிழை நீச பாஷை என்றார்களே... அவர்களை என்ன செய்ய போகின்றீர்கள்? சேவிக்க போகின்றீர்களா?
6
1
Reply
சீமானை உசுப்பிவிட்டவ்ர்களால் இவரும் பேசுவதற்காக பணிக்கப்பட்டிருக்கிறார்- அதனை நாடாளுமன்றத்தில் சம்பந்தமேஇல்லாமல் பேசுவதுமட்டுமே கேள்விக்குறியது. மறைந்த ஈவேரா அவர்கள்அப்படி கூறியது உண்மை என்றாலும், எந்த காரணத்திற்காக காட்டுமிராண்டி மொழி எனகூறினார் என்பதை ஆய்வாளர்கள்தான் கூறவேண்டும் - நீஷர் பாஷை (இழிந்தோர், அறிவில்லாதவர் ) என்று கூறியதை எப்படி எடுத்துக்கொள்ள - அப்படி சொன்னவரையும் கூட வழிபடுவதை எப்படி எடுத்துக்கொள்ள - பழங்காலதமிழில் புராணங்களில் மூடபக்தி -தமிழையும் கடவுளரையும் இணைத்து எழுதியிருப்பதையும் காலத்துக்கு ஏற்ப அறிவியல் சொற்கள் உருவாகாதது குறித்தும் எண்ணி கூறப்பட்டிருக்கலாம். காட்டுமிராண்டி மொழி என சொல்லியும் அதை பெரிதாக பெரும்பான்மையான தமிழர் கண்டுகொள்ளவில்லையே ஏன் - தற்போதுதானே அரசியலுக்காக குறிப்பிட்ட சிலரால் பெரிதாக்கபடுகிறது.. ஈவேரா அவர்கள் எடுத்துக்கொண்ட கொள்கைகளை விமர்சித்து, அவர் தவறானவர் என விதைத்து -நீர்த்து போகச்செய்யும் முன்னெடுப்பு என்றுமட்டுமே எண்ணத்தோன்றுகிறது. பெரும்பான்மையோர் எண்ணங்களை மாற்றுவது மிகக்கடினம்.
6
1
Reply