Published : 12 Mar 2025 05:38 PM
Last Updated : 12 Mar 2025 05:38 PM
புதுடெல்லி: நெஞ்சு வலி மற்றும் உடல்நலக் குறைவு காரணமாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அனுமதிக்கப்பட்ட குடியரசு துணைத் தலைவர் ஜக்தீப் தன்கர் இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.
இது தொடர்பாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிவிப்பில், "குடியரசு துணைத் தலைவர் ஜகதீப் தன்கர், இதயம் தொடர்பான நோய் காரணமாக மார்ச் 9, 2025 அன்று அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனத்தில் (எய்ம்ஸ்) அனுமதிக்கப்பட்டார். தற்போது, திருப்திகரமான முறையில் குணமடைந்ததை அடுத்து அவர், டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் இருந்து இன்று (மார்ச் 12, 2025) டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். அடுத்த சில நாட்களுக்கு போதுமான அளவு ஓய்வு எடுக்குமாறு அவர் அறிவுறுத்தப்பட்டுள்ளார்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜக்தீப் தன்கர் நெஞ்சு வலி மற்றும் உடல்நலக்குறைவு காரணமாக கடந்த ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 2 மணியளவில் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதயவியல் துறைத் தலைவர் ராஜீவ் நராங்க் கண்காணிப்பில் தீவிர சிகிச்சை பிரிவில் (சிசியு) அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. அவருக்கு வெற்றிகரமாக ஸ்டென்ட் பொருத்தப்பட்டதாகவும், உடல்நிலை சீராக இருப்பதாகவும் அன்றைய தினமே தகவல் வெளியாகியது.
குடியரசு துணைத் தலைவரின் உடல்நிலை குறித்து அறிந்து கொள்வதற்காக மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஜெ.பி.நட்டா ஞாயிற்றுக்கிழமை எய்ம்ஸ் மருத்துவமனைக்குச் சென்று நேரில் விசாரித்தார். அதனைத் தொடர்ந்து பிரதமர் நரேந்திர மோடியும், டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு நேரில் சென்று குடியரசு துணைத் தலைவரின் உடல்நிலை குறித்து விசாரித்தார். இது குறித்து தனது எக்ஸ் பக்கத்தில், "எய்ம்ஸ் மருத்துவமனைக்குச் சென்று குடியரசு துணைத் தலைவர் ஜக்தீப் தன்கரின் உடல்நிலை குறித்து விசாரித்தேன். அவர் நல்ல உடல்நலத்தைப் பெறவும், விரைவில் குணமடையவும் பிரார்த்திக்கிறேன்" என்று பிரதமர் மோடி பதிவிட்டிருந்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment