Published : 12 Mar 2025 05:18 PM
Last Updated : 12 Mar 2025 05:18 PM

“எனக்கு 8 மொழிகள் தெரியும்” - மும்மொழிக் கொள்கைக்கு ஆதரவாக சுதா மூர்த்தி கருத்து

புதுடெல்லி: “எனக்கு மொழிகளைக் கற்றறியப் பிடிக்கும். எனக்கு 8 மொழிகள் தெரியும். என்னைப் போல் குழந்தைகளாலும் நிறைய மொழிகளைக் கற்றுக் கொள்ள முடியும்” என்று மாநிலங்களவை எம்.பி. சுதா மூர்த்தி மும்மொழிக் கொள்கைக்கு ஆதரவாகப் பேசியுள்ளார்.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாம் பகுதி கடந்த 10-ஆம் தேதி தொடங்கியது. அன்றைய தினம் மக்களவையில் பேசிய திமுக எம்பி தமிழச்சி தங்கபாண்டியன், பிஎம் ஸ்ரீ திட்டத்தின் கீழ் தமிழகத்துக்கு ஒதுக்கப்பட வேண்டிய ரூ.2 ஆயிரம் கோடியை மத்திய அரசு விடுவிக்க வேண்டும் என்று வலியுறுத்தி பேசினார். இதற்கு தர்மேந்திர பிரதான் பதில் அளித்துக் கொண்டிருந்தபோது, அவரது கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக எம்பிக்கள் அவையின் மையப் பகுதிக்கு வந்து கோஷங்களை எழுப்பினர். தொடர்ந்து பதில் அளித்துக் கொண்டிருந்த தர்மேந்திர பிரதான், ஒரு கட்டத்தில் திமுக எம்.பி.,க்கள் நாகரிகமற்றவர்கள் என்றும் தமிழக மாணவர்களுக்கு அநீதி இழைப்பவர்கள் என்றும் கடுமையாக விமர்சித்தார்.

இதனைத் தொடர்ந்து மக்களவையில் கடும் அமளி ஏற்பட்டது. திமுக எம்.பி.யின் கனிமொழியின் எதிர்ப்பை அடுத்து தர்மேந்திர பிரதான் தனது கருத்தைத் திரும்பப் பெறுவதாகக் கூறினார். வருத்தமும் தெரிவித்தார். ஆனாலும் நேற்று இரண்டாவது நாளாகவும் திமுக எம்.பி.க்கள் இவ்விவகாரத்தில் தர்மேந்திர பிரதானுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து நாடாளுமன்ற வளாகத்தில் போராட்டம், அவைக்குள் முழக்கம் எனத் தொடர்ந்தனர்.

இதற்குப் பதிலளித்துப் பேசிய தர்மேந்திர பிரதான், “திமுக நாடாளு​மன்ற உறுப்​பினர்​களும், முதல்வர் ஸ்டா​லினும் எவ்​வளவு பொய்​களை அடுக்​கி​னாலும் உண்மை ஒரு நாள் வெளிவந்தே தீரும். தமிழ்​நாட்டு மக்​களின் ஏராள​மான பிரச்​சினை​களுக்கு திமுக தீர்வு காணவேண்​டி​யுள்​ளது. அதனை திசை திருப்​பும் உத்​தி​யாகவே மொழி குறித்த பிரச்சினையை அது கையில் எடுத்​துள்​ளது” என்று கூறினார்.

இவ்வாறாக பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாம் பாகம் தொடங்கியதிலிருந்து மும்மொழிக் கொள்கைப் பிரச்சினை பெரிதாகிவரும் சூழலில், மாநிலங்களவை எம்.பி. சுதா மூர்த்தி இன்று (புதன்கிழமை) அளித்த ஊடகப் பேட்டியில், “எனக்கு எப்போதுமே பல மொழிகளைக் கற்றுக் கொள்வதில் நம்பிக்கை உண்டு. எனக்கு 7, 8 மொழிகள் தெரியும். அதனால் எனக்கு மொழிகளைப் படிப்பதில் ஆர்வமுண்டு. குழந்தைகளும் அவ்வாறே ஆர்வத்துடன் மொழிகளைப் பயில்வார்கள்” என்று கூறினார். சுதா மூர்த்தி மத்திய அரசின் மும்மொழிக் கொள்கைக்கு ஆதரவாகப் பேசியுள்ளது விவாதத்துக்கு வழி வகுத்துள்ளது.

கார்த்தி சிதம்பரம் கருத்து - இதற்கிடையில், மும்மொழிக் கொள்கை குறித்து அளித்தப் பேட்டியில், “தமிழகம் இரு மொழிக் கொள்கையில் உறுதியாக இருக்கிறது. ஆங்கிலமும், தமிழும் போதும். ஆங்கிலம் எங்களை வர்த்தக, அறிவியல் உலகத்துடன் இணைக்கிறது. தமிழ் எங்களின் கலாச்சார அடையாளத்தைப் பாதுகாக்கிறது. யாரேனும் மூன்றாவது மொழியை கற்க விரும்பினால், அது அவர்களின் சொந்த விருப்பம். அதை கட்டாயமாக்குவதில் எந்தத் தேவையும் இல்லை. மூன்றாவதாக ஒரு மொழியை எங்கள் மீது திணிப்பது என்பது ஏற்றுக் கொள்ள முடியாதது. மத்திய அரசு அதன் கொள்கைகளை அமல்படுத்துவதில் கொஞ்சமேனும் நெகிழ்வுத் தன்மையோடு இருக்க வேண்டும்” என்றார் கார்த்தி சிதம்பரம் எம்.பி.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Loading comments...

 
x