Published : 12 Mar 2025 04:24 PM
Last Updated : 12 Mar 2025 04:24 PM
போர்ட் லூயிஸ்: இந்தியா - மொரிஷியஸ் இடையே 8 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி உள்ளன. அந்நாட்டின் மிக உயர்ந்த தேசிய விருதை பிரதமர் நரேந்திர மோடிக்கு, அந்நாட்டின் அதிபர் தரம்பீர் கோகுல் வழங்கினார்.
இரண்டு நாள் பயணமாக பிரதமர் நரேந்திர மோடி நேற்று மொரிஷியஸ் சென்றார். பயணத்தின் இரண்டாம் நாளான இன்று, அந்நாட்டின் முன்னாள் பிரதமர் பிரவிந்த் குமார் ஜக்நாத், எதிர்க்கட்சித் தலைவர் ஜார்ஜஸ் பியர் லெஸ்ஜோங்கார்ட் ஆகியோரைச் சந்தித்துப் பேசினார். இதனைத் தொடர்ந்து மொரிஷியஸ் பிரதமர் நவின்சந்திர ராம்கூலம் தலைமையிலான குழுவினருடன், பிரதமர் மோடி தலைமையிலான இந்திய குழு பேச்சுவார்த்தை நடத்தியது. இதையடுத்து பிரதமர் நரேந்திர மோடிக்கு மொரிஷியஸின் மிக உயரிய தேசிய விருதை, அதிபர் தரம்பீர் கோகுல் வழங்கினார்.
கனமழை பெய்து கொண்டிருந்த நிலையில், விருதைப் பெற்றுக்கொண்டு உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, "மொரிஷியஸின் மிக உயரிய தேசிய விருதை பெற்றதில் நான் மிகவும் பெருமைப்படுகிறேன். இதற்காக நன்றியுள்ளவனாக இருக்கிறேன். இது எனக்கு மட்டுமல்ல, இந்தியாவின் 140 கோடி இந்திய மக்களுக்கும் கிடைத்த மரியாதை. இது இந்தியாவிற்கும் மொரீஷியஸுக்கும் இடையிலான பல நூற்றாண்டுகள் பழமையான கலாச்சார மற்றும் வரலாற்று உறவுக்கு ஒரு மரியாதை" என தெரிவித்தார்.
இரு தரப்புக்கும் இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தையில் 8 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கைழுத்தாகின. இது குறித்து போர்ட் லூயிஸில் செய்தியாளர்களிடம் பேசிய இந்திய வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி, "8 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி உள்ளன. மொரிஷியஸில் புதிய நாடாளுமன்றக் கட்டிடம் கட்டுவதற்கு இந்தியாவின் ஆதரவை பிரதமர் மோடி அறிவித்தார்" என கூறினார்.
முன்னதாக, பிரதமர் மோடி செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர், "மொரிஷியஸ் நாட்டு மக்கள் அனைவருக்கும் 140 கோடி இந்தியர்களின் சார்பாக எனது தேசிய தின வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்தியாவுக்கும் மொரீஷியஸுக்கும் இடையிலான உறவு இந்தியப் பெருங்கடலால் மட்டுமல்ல, நமது பகிரப்பட்ட கலாச்சார மரபுகள் மற்றும் மதிப்புகளாலும் இணைக்கப்பட்டுள்ளது.
பொருளாதார மற்றும் சமூக முன்னேற்றப் பாதையில் நாம் ஒருவருக்கொருவர் பங்காளிகள். இயற்கை பேரிடராக இருந்தாலும் சரி, கோவிட் பேரிடராக இருந்தாலும் சரி, நாம் எப்போதும் ஒருவருக்கொருவர் ஆதரவளித்து வருகிறோம். பாதுகாப்பு, கல்வி, சுகாதாரம், விண்வெளி என ஒவ்வொரு துறையிலும் நாம் தோளோடு தோள் சேர்ந்து நடக்கிறோம்.
கடந்த 10 ஆண்டுகளில் நமது உறவுகளில் பல புதிய பரிமாணங்களைச் சேர்த்துள்ளோம். வளர்ச்சி ஒத்துழைப்பு மற்றும் திறன் மேம்பாட்டில் புதிய மைல்கற்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்தியா-மொரிஷியஸ் இடையேயான உறவை 'மேம்படுத்தப்பட்ட மூலோபாய கூட்டாண்மை' என்ற அடுத்த நிலைக்கு உயர்த்த பிரதமர் நவீன் சந்திர ராம்கூலமும் நானும் முடிவு செய்துள்ளோம். மொரிஷியஸில் புதிய நாடாளுமன்றக் கட்டிடத்தைக் கட்டுவதில் இந்தியா ஒத்துழைக்கும். இது மொரிஷியஸுக்கு ஜனநாயகத்தின் தாயிடமிருந்து கிடைக்கும் ஒரு பரிசாக இருக்கும்.
சமூக மேம்பாட்டுத் திட்டங்களில் 50 கோடி மொரிஷியஸ் ரூபாய் மதிப்புள்ள புதிய திட்டங்கள் தொடங்கப்படும். அடுத்த ஐந்து ஆண்டுகளில் மொரீஷியஸைச் சேர்ந்த 500 அரசு ஊழியர்கள் இந்தியாவில் பயிற்சி பெறுவார்கள். உள்ளூர் நாணயத்தில் பரஸ்பர வர்த்தகத்தை நிர்ணயிப்பதற்கும் நாங்கள் ஒப்புக்கொண்டுள்ளோம்.
நமது உறவுகளுக்கு கடல்சார் பாதுகாப்பு மிக முக்கியமானது. சுதந்திரமான, திறந்த, பாதுகாப்பான இந்தியப் பெருங்கடல் நமது பகிரப்பட்ட முன்னுரிமையாகும். பாதுகாப்பு ஒத்துழைப்பும் கடல்சார் பாதுகாப்பும் நமது மூலோபாய கூட்டாண்மையின் ஒரு முக்கிய பகுதியாகும். மொரீஷியஸின் பிரத்யேக பொருளாதார மண்டலத்தைப் பாதுகாப்பதில் முழு ஒத்துழைப்பை வழங்க நாங்கள் உறுதிபூண்டுள்ளோம்.
உலகளாவிய தெற்குப் பகுதியானாலும் சரி, இந்தியப் பெருங்கடலாக இருந்தாலும் சரி, ஆப்பிரிக்கக் கண்டமாக இருந்தாலும் சரி, மொரிஷியஸ் எங்களது முக்கியமான கூட்டாளியாகும். மொரீஷியஸ் மக்கள் இந்தியாவில் சார் தாம் யாத்திரை மேற்கொள்வது எளிதாக்கப்படும். இது நமது கலாச்சார மற்றும் ஆன்மீக உறவுகளை வலுப்படுத்தும்.
பொருளாதார மற்றும் சமூக முன்னேற்றப் பாதையில் நாம் ஒருவருக்கொருவர் பங்காளிகள். கடந்த 10 ஆண்டுகளில் நமது உறவுகளில் பல புதிய பரிமாணங்களைச் சேர்த்துள்ளோம். வளர்ச்சி ஒத்துழைப்பு மற்றும் திறன் மேம்பாட்டில் புதிய மைல்கற்கள் அமைக்கப்பட்டுள்ளன.
மக்களிடையேயான உறவுகள் நமது கூட்டாண்மைக்கு ஒரு வலுவான அடித்தளத்தை உருவாக்குகின்றன. டிஜிட்டல் சுகாதாரம், ஆயுஷ் மையங்கள், திறன் மேம்பாடு மற்றும் இயக்கம் ஆகியவற்றில் ஒத்துழைப்பு மேம்படுத்தப்படும். மனித மேம்பாட்டுக்காக செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்த நாங்கள் இணைந்து செயல்படுவோம்" என தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Loading comments...