Published : 11 Mar 2025 09:41 PM
Last Updated : 11 Mar 2025 09:41 PM

“இளைஞர்களிடம் ‘வன்முறை’ ஒரு போதையாக மாற வெப் சீரிஸ், சினிமாவுக்கு பங்கு...” - கேரள அமைச்சர் எச்சரிக்கை

படம்: மெட்டா ஏஐ

திருவனந்தபுரம்: “மாணவர்கள் உள்ளிட்ட இளைய தலைமுறையினரிடம் ‘வன்முறை’ ஒரு ‘போதை’யாக மாறியுள்ளது. அவர்களிடம் ஒருவிதமான கொடூர மனநிலை அதிகரித்துள்ளது” என்று கேரள மாநில கலால் துறை அமைச்சர் எம்.பி. ராஜேஷ் சட்டப்பேரவையில் பேசியது கவனம் ஈர்த்துள்ளது.

மது மற்றும் போதை பொருட்களால் சமூகத்தில் ஏற்படும் தீமைகள் குறித்து மாணவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த பள்ளிக் கல்வித் துறை மூலம் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்த கேள்விக்கு அமைச்சர் பதில் அளித்துப் பேசினார். மாநில பொதுக் கல்வித் துறை அமைச்சர் வி.சிவன்குட்டி சார்பாக பேசிய அமைச்சர் ராஜேஷ், "மாணவர்கள் மத்தியில் வன்முறை அதிகரிப்பதற்கு போதைப் பொருள்கள் மட்டுமே காரணம் இல்லை. இளைய தலைமுறையினரிடம் வன்முறையே ஒரு போதையாக மாறிவிட்டது. குழந்தைகளிடமும் கொடூர மனநிலை அதிகரித்துவிட்டது. வெப் சீரிஸ், சினிமா மற்றும் சமூக ஊடகங்களுக்கு அடிமையாதல் போன்ற பல விஷயங்களை இதற்கு காரணமாக சொல்லலாம்.

இந்தப் பிரச்சினைக்கு நாம் தீர்வு காண வேண்டும். அரசு இந்தப் பிரச்சினையை தீர்ப்பதற்கு அறிவியல் ரீதியிலான அணுகுமுறையை கடைபிடிக்கிறது. வன்முறை செயல்கள் அதிகரிப்பதற்கு மற்றொரு காரணம், அரசியல் சார்பற்றத் தன்மை. இதுபோன்ற வன்முறை செயல்களுக்கு பின்னால் பொறுப்பேற்க எந்த அமைப்பும் இல்லை. போதைப்பொருள் பயன்பாடு மற்றும் வன்முறைக்கு எதிரான விழிப்புணர்வு ஏற்படுத்தும் செயல்பாடுகளில் மாணவர்கள் மற்றும் இளைஞர் அமைப்புகளும் இணைத்துக் கொள்ளப்பட வேண்டும்.

பள்ளிகளில் கண்காணிப்பு குழுக்களை அமைத்தல், போதைப் பொருள்களால் ஏற்படும் விளைவுகள் குறித்த இலக்கிய படைப்புகளை உருவாக்கி அவற்றை மாணவர்களுக்கு விநியோகித்தல், பல்வேறு வகுப்புகளில் பாடப்புத்தகங்களில் அந்த இலக்கிய படைப்புகளைப் பயன்படுத்தி மாணவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துதல் என பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. முழு கல்வியாண்டுக்கும் அத்தகைய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன" என்று அமைச்சர் தெரிவித்தார்.

இதனிடையே, விளையாட்டுத் துறை அமைச்சர் வி.அப்துர்ரஹிமான், "போதை பொருள்கள் பயன்பாட்டுக்கு மாற்றாக விளையாட்டை முன்னிருத்தி வரும் மே 1-ம் தேதி முதல் மாநிலத்தில் ஒரு முழுமையான போதைப்பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வு பிரச்சாரத்தை விளையாட்டுத் துறை மேற்கொள்ள இருக்கிறது. இதன் வெற்றிக்கு அனைத்து பேரவை உறுப்பினர்களும் உதவிட வேண்டும்" என்று தெரிவித்தார்.

கேரளாவில் சமீப காலமாக இளைஞர்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் தொடர்புடைய வன்முறைச் சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில், அதன் உளவியல் பின்னணியில் சினிமாவை மையப்படுத்தி விவாதங்கள் வலுத்துள்ளது கவனிக்கத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x