Published : 10 Mar 2025 03:37 PM
Last Updated : 10 Mar 2025 03:37 PM
ஜம்மு: ரம்ஜான் மாதத்தில், ஜம்மு காஷ்மீரின் குல்மார்க்கில் பேஷன் ஷோ நடத்தியது சமூக உணர்வுகளை புண்படுத்தக்கூடியது என்றும், இது குறித்து விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளதாகவும் முதல்வர் உமர் அப்துல்லா தெரிவித்துள்ளார்.
ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவையில் இது தொடர்பாக பேசிய ஜம்மு காஷ்மீர் அவாமி இத்தேஹாத் கட்சி சட்டமன்ற உறுப்பினர் (எம்.எல்.ஏ) குர்ஷித் அகமது ஷேக், “ரம்ஜான் காலத்தில், இதுபோன்ற ஒரு நிகழ்வை ஏற்பாடு செய்வது வெட்கக்கேடானது. இது நமது கலாச்சாரத்தின் மீதான நேரடித் தாக்குதல். இதை நாங்கள் கண்டிக்கிறோம். இதற்கு எதிராக முதல்வர் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்.” என்று கூறினார்.
இதே விவகாரம் தொடர்பாக பேசிய ஆளும் ஜம்மு-காஷ்மீர் தேசிய மாநாட்டுக் கட்சியின் (JKNC) சட்டமன்ற உறுப்பினர் தன்வீர் சாதிக், “இது நடந்திருக்கக்கூடாது. ஜம்மு-காஷ்மீர் சூஃபி துறவிகளின் இடம். சாதாரண சூழ்நிலைகளில் கூட, ஜம்மு-காஷ்மீரில் அரை நிர்வாண நிகழ்ச்சிகள் நடக்கக்கூடாது. இது ஏற்றுக்கொள்ளத்தக்கது அல்ல. உமர் அப்துல்லா (முதல்வர்) இந்த சம்பவத்தை அறிந்துகொண்டு அறிக்கை கோரியுள்ளார்; நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ளார்.” எனக் குறிப்பிட்டார்.
பாஜக சட்டமன்ற உறுப்பினர் பல்வந்த் சிங் மன்கோடியா பேசுகையில், "பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் மத்திய அரசு, ஜம்மு-காஷ்மீரில் இயல்பு நிலை திரும்ப வேண்டும் என்று விரும்புகிறார்கள். ஆகஸ்ட் 5, 2019 (பிரிவு 370 ரத்து செய்யப்பட்ட நாள்)க்குப் பிறகு, காஷ்மீரில் அமைதியான சூழல் ஏற்பட்டுள்ளது. உலகம் முழுவதும் உள்ள மக்கள், நாடு முழுவதும் உள்ள மக்கள் காஷ்மீருக்கு வருகை தர விரும்புகிறார்கள். ஆனால், சிலர் காஷ்மீரில் அமைதியையும் இயல்புநிலையையும் விரும்பவில்லை. எனவே இது சிலரின் பழைய பழக்கம், அவர்கள் எந்த காரணமும் இல்லாமல் பிரச்சினைகளை உருவாக்கி ஜம்மு-காஷ்மீரில் சூழ்நிலையை கெடுக்க முயற்சிக்கிறார்கள்.” என்று கூறினார்.
உறுப்பினர்களின் கருத்துக்கு பதில் அளித்துப் பேசிய முதல்வர் உமர் அப்துல்லா, “ஒரு பேஷன் ஷோ ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த பேஷன் ஷோவில் சில விஷயங்கள் சமூகத்தின் உணர்வுகளைப் புண்படுத்தியுள்ளன. ரம்ஜான் மாதத்தில் மட்டுமல்ல, ஆண்டின் எந்த நேரத்திலும் அது நடத்தப்பட்டிருக்கக்கூடாது. நாங்கள் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளோம். இந்த நிகழ்வு எந்தவொரு அரசாங்க தொடர்பும் இன்றி, அனுமதியும் இன்றி தனியாரால் ஏற்பாடு செய்யப்பட்டது. இதில், சட்டம் மீறப்பட்டிருந்தால் நாங்கள் கடுமையாக நடவடிக்கை எடுப்போம்.” என்று கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment