Published : 27 Jul 2018 03:00 PM
Last Updated : 27 Jul 2018 03:00 PM
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி எங்களைக் கட்டிப்பிடித்துவிடுவாரோ எனப் பயந்துபோய் இருக்கிறோம், கட்டிப்பிடித்துவிட்டால், எங்கள் மனைவிகள் எங்களை விவாகரத்து செய்துவிடுவார்கள் என்று பாஜக எம்.பி. நிஷிகாந்த் துபே கிண்டல் செய்துள்ளார்.
மத்திய அரசுக்கு எதிராகக் கடந்த 20-ம் தேதி நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டுவரப்பட்டு நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்பட்டது. அப்போது பேசிய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, “ என்னைச் சிறுவன் என்று பிரதமர் மோடி பேசினாலும், நான் அவர் மீது வெறுப்பு கொள்ளமாட்டேன் ” என்று கூறிவிட்டு, பிரதமரை நோக்கிச் சென்ற ராகுல், அவரைத் கட்டித்தழுவினார்.
மக்களவை நடந்து கொண்டிருந்தபோது, ராகுல் காந்தி திடீரென மோடியைக் கட்டித்தழுவிய நிகழ்வு பெரும் பரபரப்பாக அமைந்தது. இதற்கு காங்கிரஸ் தலைவர்கள் வரவேற்பு அளித்த போதிலும், பாஜகவினர் கிண்டல் செய்து வருகிறனர்.
இந்தச் சம்பவத்துக்கு பின் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி டெல்லியில் ஒரு நிகழ்ச்சியில் பேசுகையில், “எங்கு நான் கட்டிப்பிடித்துவிடுவேனோ என்ற பயத்தில், இப்போதெல்லாம் பாஜகவினர் என்னைக் கண்டால் 2 அடி பின்னோக்கிச் செல்கிறார்கள் ” என்று கிண்டல் செய்திருந்தார்.
அது மட்டுமல்லாமல், பாஜக எங்களுக்கு எதிர்க்கட்சிதான், ஆனால், வெறுப்புணர்ச்சியுடன் எந்த விஷயத்துக்கும் போராடமாட்டோம். அன்பால் போராடுவோம் என்று ராகுல் தெரிவித்தார்.
ராகுல் காந்தியின் பேச்சுக்குப் பதில் அளிக்கும் வகையில், ஜார்கண்ட் எம்.பி. நிஷிகாந்த் துபே கிண்டலடித்துள்ளார். அவர் அளித்த பேட்டியில், “காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியைப் பார்த்தால் இப்போது எங்களுக்குப் பயமாக இருக்கிறது. திடீரென எங்களை ராகுல் காந்தி கட்டிப்பிடித்துவிட்டது தெரிந்தால், எங்கள் மனைவிகள் எங்களை விவாகரத்து செய்துவிடுவார்கள். அதுமட்டுமல்லாமல், நமது நாட்டில், அரசியலமைப்புப் பிரிவு 377 இன்னும் நீக்கம் செய்யப்படவில்லை. ஒருவேளை ராகுல் காந்திக்கு திருமணம் நடந்துவிட்டால், நாங்கள் அவரைக் கட்டிப்பிடிப்போம் “ எனத் தெரிவித்துள்ளார்.
அரசியலமைப்புச் சட்டம் 377 பிரிவு என்பது இயற்கைக்கு மாறாக மனிதர்கள் உறவு கொள்ளுதலாகும். ஒரே பாலினத்தைச் சேர்ந்தவர்கள் திருமணம் செய்யவோ, பாலுறவு கொள்ளவோ தடைவிதிக்கும் சட்டமாகும். அவ்வாறு செய்தால், குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்படும். இந்த சட்டப்பிரிவை நீக்கக்கோரி வழக்கு தொடரப்பட்டு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT