Published : 09 Mar 2025 01:39 AM
Last Updated : 09 Mar 2025 01:39 AM
சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி, மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, மத்திய அமைச்சர் அமித் ஷா உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு தனது எக்ஸ் பதிவில், “சர்வதேச மகளிர் தினத்தில் அனைவருக்கும் வாழ்த்துகள். இன்று பெண்களின் சாதனைகள் மற்றும் பங்களிப்புகளை நாம் கொண்டாடுகிறோம். பெண்களின் உரிமைகள், சமத்துவம், அதிகாரமளித்தல் ஆகியவற்றை வலுப்படுத்த ஒருங்கிணைந்த முயற்சிகள் மேற்கொள்ளவும் நாம் தீர்மானிக்கிறோம். நமது சகோதரிகளும் மகள்களும் தடைகளை உடைத்து புதிய எல்லைகளை தொட்டு வருகின்றனர்.
பெண்கள் பல்வேறு துறைகளில் புதிய பாதைகளை அமைக்கும்போது யாரும் பின்தங்கிவிடாமல் இருப்பதை உறுதிசெய்து, அவர்களின் பயணத்தில் அவர்களுக்கு ஆதரவளிப்பதாக நாம் உறுதி அளிப்போம்.
பெண்களும் சிறுமிகளும் மற்றும் தங்கள் கனவுகளுக்காக அச்சமின்றி செயல்படக்கூடிய பாலின சமத்துவ உலகத்தை நாம் ஒன்றாக உருவாக்க முடியும்” என்று கூறியுள்ளார்.
மகளிர் தினத்தையொட்டி பிரதமர் நரேந்திர மோடி குஜராத்தின் நவ்சாரி மாவட்டத்தை சேர்ந்த மகளிர் சுய உதவிக் குழுவினருடன் கலந்துரையாடினார். குஜராத் முதல்வர் பூபேந்திர படேல், மத்திய ஜல்சக்தி துறை அமைச்சர் சி.ஆர்.பாட்டீல் ஆகியோர் அப்போது உடனிருந்தனர். இந்நிகழ்ச்சியில் குஜராத் அரசின் 2 திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கிவைத்தார்.
முன்னதாக பிரதமர் மோடி தனது மகளிர் தின வாழ்த்துச் செய்தியில், "மகளிர் தினத்தில் நமது பெண் சக்திக்கு நாங்கள் தலைவணங்குகிறோம்! பெண்களுக்கு அதிகாரம் அளிப்பதற்காக எங்கள் அரசு எப்போதும் பாடுபட்டு வருகிறது. இது எங்கள் திட்டங்களில் பிரதிபலிப்பதை காணலாம். நான் உறுதி அளித்தபடி இன்று எனது சமூக ஊடக கணக்குகளை பல்வேறு துறைகளில் முத்திரை பதித்த பெண்கள் நிர்வகிப்பார்கள்" என்று கூறினார்.
உள்துறை அமைச்சர் அமித்ஷா தனது வாழ்த்துச் செய்தியில், “பல நூற்றாண்டுகளாக நமது நாகரிகம் முன்னேற்றம் அடையவும் வெற்றி பெறவும் பெண் சக்தி அதிகாரம் அளித்துள்ளது. பிரதமர் மோடி, 'பெண்கள் தலைமையில் வளர்ச்சி' என்ற தனது தொலைநோக்குப் பார்வை மூலம், அவர்களின் வரலாற்று அந்தஸ்தை மீட்டெடுத்துள்ளார். பெண்மையை மையமாக கொண்டு தேசத்தை கட்டியெழுப்பி வருகிறார். இந்த உன்னதமான முயற்சியில் நமது பயணத்தை விரைவுபடுத்த இந்த நாள் புதிய உத்வேகம் அளிக்கட்டும்” என்று கூறியுள்ளார்.
மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி தனது வாழ்த்துச் செய்தியில், “பெண்கள் நமது சமூகத்தின் முதுகெலும்பு. அவர்களின் வலிமை, விடாமுயற்சி, குரல் ஆகியவை நமது நாட்டின் எதிர்காலத்தை வடிவமைக்கின்றன. இந்த சர்வதேச மகளிர் தினத்தில், ஒவ்வொரு பெண்ணும் தனது எதிர்காலத்தை வடிவமைக்கவும், கனவையும் துரத்தவும், புதிய உச்சத்தை அடையவும் அனைத்து தடைகளையும் உடைக்க உங்களுடன் மற்றும் உங்களுக்காக நான் நிற்கிறேன்” என்று கூறியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment