Published : 08 Mar 2025 05:20 AM
Last Updated : 08 Mar 2025 05:20 AM
உத்தரபிரதேசத்தில் ஹோலி பண்டிகை நாளில் வெள்ளிக்கிழமை தொழுகை நேரத்தை ஒத்திவைக்குமாறு முஸ்லிம்களுக்கு லக்னோ மவுலானா காலீத் ராஷீத் அறிவுறுத்தியுள்ளார்.
வட இந்தியாவின் முக்கிய பண்டிகையான ஹோலி, இந்த ஆண்டு மார்ச் 14-ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதே நாளில் ரமலான் மாதத்தின் புனித நாளான இரண்டாவது வெள்ளிக்கிழமையும் வருகிறது. இரண்டும் ஒரே நாளில் வருவது உ.பி. அரசுக்கு சவாலான சூழலை உருவாக்கி உள்ளது.
விடியலில் துவங்கும் ஹோலி பண்டிகை என்பது இந்துக்கள் ஒருவர் மீது ஒருவர் பல்வேறு வண்ணப் பொடிகளை தூவிக் கொண்டாடுவது ஆகும். இந்த கொண்டாட்டம் பகல் 1 மணி வரை தொடர்கிறது. வீடுகள் முன்பாக தெருக்களில் கொண்டாடும்போது அவ்வழியே வருவோர் மீதும் மகிழ்ச்சியில் வண்ணப்பொடியை தூவி விடுவதும் உண்டு. இதை விரும்பி ஏற்கும் முஸ்லிம்களுடன் விரும்பாத சிலரும் உண்டு.
இதன் காரணமாக சிலசமயம் மோதல்கள் நிகழ்ந்து மதக் கலவரம் வரை சென்ற வரலாறும் உள்ளது. எனவே இதனை மனதில் கொண்டும் இந்துக்களுடன் சகோதரத்துவத்தை பேணும் வகையிலும் வெள்ளிக்கிழமை தொழுகை நேரத்தை ஒத்தி வைக்குமாறு முஸ்லிம்களுக்கு லக்னோ மவுலானா காலீத் ராஷீத் நேற்று ஆலோசனை வழங்கியுள்ளார்.
இவர், முஸ்லிம்களின் பழம்பெரும் கல்வி நிறுவனமான ஃபிரங்கி மெஹலியின் மவுலானா ஆவர். மேலும் இந்திய இஸ்லாமிக் சென்டரின் தலைவரும் உ.பி.யின் ஷாயி இமாமும் ஆவார்.
இவர் வெளியிட்ட அறிக்கையில், "ரமலான் மாதத்தின் இரண்டாவது வெள்ளிக்கிழமையின் தொழுகை நேரம் மதியம் 12.45 மணி மற்றும் மதியம் 1 மணியிலிருந்து மதியம் 2 மணி வரை மாற்றப்பட்டுள்ளது. இந்நாளில் முஸ்லிம்கள் தொலைதூர மசூதிகளுக்கு செல்வதைத் தவிர்த்து, அருகிலுள்ள மசூதிகளிலேயே தொழுகை நடத்த வேண்டும். மேலும் இது விடுமுறை என்பதால்
அதிக கூட்டம் இருக்கலாம். எனவே வீடுகளிலேயே தொழுகைகளை முடிப்பதும் நல்லது” எனத் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Loading comments...