Published : 07 Mar 2025 05:05 AM
Last Updated : 07 Mar 2025 05:05 AM
பெங்களூரு: பெங்களூரு பாஜக எம்.பி.யும், பாஜக இளைஞர் அணி தலைவருமான தேஜஸ்வி சூர்யா தமிழகத்தை சேர்ந்த கர்னாடக சங்கீத பாடகி சிவஸ்ரீ ஸ்கந்த பிரசாத்தை நேற்று திருமணம் செய்துகொண்டார். பெங்களூருவில் நடந்த இந்த திருமணத்தில் பாஜக மூத்த தலைவர் பி.எல்.சந்தோஷ், தமிழக தலைவர் கே.அண்ணாமலை உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
பெங்களூருவை சேர்ந்த வழக்கறிஞரான தேஜஸ்வி சூர்யா பாஜக இளைஞர் அணியில் தீவிரமாக செயல்பட்டார். அவர் கடந்த 2019-ம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில் பெங்களூரு தெற்கு தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்டு வென்றார். இந்நிலையில், இவருக்கும் தமிழகத்தை சேர்ந்த கர்னாடக சங்கீத பாடகியான சிவ ஸ்கந்த பிரசாத்துக்கும் சில மாதங்களுக்கு முன்பு திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது. பரத நாட்டியமும் கற்றுள்ள சிவ ஸ்கந்தபிரசாத் சமூக வலைத்தளங்களில் லட்சக்கணக்கான ஃபாலோயர்களை கொண்டுள்ளார். பொன்னியின் செல்வன் - 2 படத்தில் ‘வீர ராஜ வீரா’ பாடலை கன்னடத்தில் பாடியுள்ளார்.
அயோத்தி ராமர்கோயில் திறப்பு விழாவின்போது இவர் ராமரைப் பற்றி பாடிய பாடலை பிரதமர் மோடி எக்ஸ் தளத்தில் பகிர்ந்து பாராட்டியுள்ளார். இந்நிலையில், தேஜஸ்வியும் சிவஸ்ரீயும் திருமணம் செய்துகொண்டு மண வாழ்க்கையில் அடியெடுத்து வைத்துள்ளனர். தேஜஸ்வி சூர்யாவும் சிவஸ்ரீ ஸ்கந்த பிரசாத்தும் நண்பர்களாக இருந்த நிலையில், நேற்று பெங்களூருவில் இருவரின் திருமணமும் நடைபெற்றது. இந்த திருமணத்தில் குடும்பத்தினர், உறவினர்கள், நெருங்கிய நண்பர்கள் மட்டும் பங்கேற்றனர். கர்நாடகாவை சேர்ந்த மத்திய அமைச்சர் வி. சோமண்ணா, பாஜக தேசிய பொதுச் செயலாளர் பி.எல்.சந்தோஷ், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, கர்நாடக பாஜக தலைவர் பி.ஒய்.விஜயேந்திரா உள்ளிட்டோர் பங்கேற்று, மணமக்களை வாழ்த்தினர். வரும் 9-ம் தேதி பெங்களூரு அரண்மனை மைதானத்தில் தேஜஸ்வி சூர்யா மற்றும் சிவ ஸ்கந்தபிரசாத் ஆகியோரின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெறுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Loading comments...