Published : 07 Mar 2025 12:50 AM
Last Updated : 07 Mar 2025 12:50 AM
எஸ்டிபிஐ கட்சிக்கு எதிரான சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கில் சென்னை உட்பட நாடு முழுவதும் 12 இடங்களில் அமலாக்கத் துறை அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினர். இதில் பல்வேறு ஆவணங்களை கைப்பற்றியுள்ளனர்.
கடந்த 2009-ம் ஆண்டில் எஸ்டிபிஐ (இந்திய சமுதாய ஜனநாயக கட்சி) நிறுவப்பட்டது. இது டெல்லியை தலைமையிடமாக கொண்டு செயல்படுகிறது. இக்கட்சி, தடை செய்யப்பட்ட 'பாப்புலர் பிரன்ட் ஆப்' இந்தியா (பிஎப்ஐ) அமைப்பின் அரசியல் பிரிவாக கருதப்படுகிறது.
இந்நிலையில் பிஎப்ஐ அமைப்பின் சட்டவிரோத பணத்தை பயன்படுத்தியதாக எஸ்டிபிஐ கட்சியின் தேசிய தலைவர் எம்.கே.ஃபைஸியை (55) அமலாக்கத் துறை கடந்த திங்கட்கிழமை கைது செய்தது. அவரை 6 நாட்கள் தங்கள் காவலில் எடுத்து விசாரித்து வருகிறது.
இந்த கைது நடவடிக்கைக்கு பிறகு, பிஎப்ஐ – எஸ்டிபிஐ இடையே இயல்பான உறவு இருப்பதாகவும் எஸ்டிபிஐ மூலமாக பிஎப்ஐ குற்றச் செயல்களில் ஈடுபடுவதாகவும் அமலாக்க துறை குற்றம் சாட்டியது.
முன்னதாக நீதிமன்றத்தில் அமலாக்கத் துறை முன்வைத்த வாதத்தில், “பிஎப்ஐ-யின் அரசியல் பிரிவுதான் எஸ்டிபிஐ. பிஎப்ஐ அமைப்பிடம் இருந்து நிதி பெறுவதுடன் அதன் கட்டுப்பாட்டில் எஸ்டிபிஐ உள்ளது. ஒரு அமைப்பில் இருப்பவர் மற்றொரு அமைப்பிலும் உறுப்பினராக இருப்பார். ஒரு அமைப்பின் சொத்து மற்றொரு அமைப்பால் பயன்படுத்தப்படும்" என்று தெரிவித்தது.
இந்நிலையில் பைஸியிடம் நடத்திவரும் விசாரணையின் தொடர்ச்சியாக நாடு முழுவதும் 12 இடங்களில் அமலாக்கத்துறை நேற்று சோதனை நடத்தியது.
டெல்லியில் எஸ்டிபிஐ தலைமையகம் உட்பட 2 இடங்கள், கேரளாவில் திருவனந்தபுரம், மலப்புரம், ஆந்திராவில் நந்தியால், ஜார்க்கண்டில் பாகூர், மகாராஷ்டிராவில் தானே மற்றும் பிற மாநிலங்களில் பெங்களூரு, சென்னை, கொல்கத்தா, லக்னோ, ஜெய்ப்பூர் என 12 இடங்களில் இந்த சோதனை நடைபெற்றது.
சென்னையில் சோதனை: சென்னை மண்ணடி இப்ராஹிம் தெருவில் எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைமை அலுவலகம் அமைந்துள்ளது.
இங்கு நேற்று காலை 4 கார்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் வந்தனர். 10-க்கும் மேற்பட்ட துப்பாக்கி ஏந்திய சிஆர்பிஎப் வீரர்கள் பாதுகாப்புடன் அதிரடி சோதனையை நடத்தினர்.
இந்த சோதனை தொடர்பான தகவல் பரவியதும், கட்சித் தொண்டர்கள் ஏராளமானோர் அங்கு குவிந்தனர். மேலும், சோதனை நடைபெறும் கட்சி அலுவலகத்துக்குள் செல்ல முயன்றனர். அவர்களை சிஆர்பிஎப் வீரர்கள தடுத்து நிறுத்தினர். இதையடுத்து அவர்கள் அமலாக்கத் துறைக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். இதனால், அப்பகுதியில் நேற்று பரபரப்பு நிலவியது.
இந்த சோதனையில் பல்வேறு முக்கிய ஆவணங்களை அமலாக்கத்துறை அதிகாரிகள் கைப்பற்றியதாக கூறப்படுகிறது. எனினும் சோதனை முழுமையாக நிறைவடைந்த பிறகே முழு விவரமும் வெளியிட முடியும் என அமலாக்கத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
மத்திய அமைச்சர் விளக்கம்: இந்த சோதனை குறித்த கேள்விக்கு மத்திய சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் கிரண் ரஜிஜு நேற்று கூறுகையில், “அமலாக்க துறையின் அனைத்து நடவடிக்கைகளும் சில உண்மைகள் மற்றும் புள்ளிவிவரங்கள் அடிப்படையிலானவை. அது பற்றி நான் கருத்து கூறமுடியாது.
சட்டவிரோத செயல்களுக்கு எதிராக எடுக்கப்படும் எந்தவொரு நடவடிக்கையையும், அது பிஎப்ஐ அல்லது வேறு எந்த அமைப்பாக இருந்தாலும், அதனை மத கண்ணோட்டத்தில் பார்க்க கூடாது.
யார் குற்றம் செய்திருந்தாலும் சட்டவிதிகளின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும். அவர் எந்த சமூகத்தை சேர்ந்தவர் என்ற அடிப்படையில் அல்ல. எனவே விசாரணை அமைப்புகள் தங்கள் பணியை செய்கின்றன. அதுபற்றி நான் கருத்து கூற விரும்பவில்லை” என்றார்.
அமலாக்க துறையின் குற்றச்சாட்டுகளை எஸ்டிபிஐ மறுத்துள்ளது. தன்னை ஒரு சுதந்திர அமைப்பாக எஸ்டிபிஐ கூறுகிறது. எஸ்டிபிஐ-க்கு கேரளா, கர்நாடகா உள்ளிட்ட தென் மாநிலங்களின் பல்வேறு பகுதிகளில் அதிக செல்வாக்கு இருப்பதாக விசாரணை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Loading comments...