Published : 03 Jul 2018 07:43 AM
Last Updated : 03 Jul 2018 07:43 AM
இ
ந்தியாவில் உயர் கல்வித் துறையில் மிக முக்கிய மாற்றம் நிகழ இருக்கிறது. பல்கலைக்கழக மானியக் குழு கலைக்கப்படுகிறது; ‘இந்திய உயர்கல்வி ஆணையம்’ என்கிற புதிய அமைப்பு கொண்டுவரப்படுகிறது. புதிய ஆணையத்துக்கான 14 பக்க வரைவு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இந்த மாற்றம் குறித்து பொதுமக்கள் தங்களின் ஆலோசனைகளை 'reformofugc@gmail.com' என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு ஜூலை 7 வரை அனுப்பி வைக்கலாம்.
பல்கலைக்கழக மானியக் குழு சட்டம் 1956 நீக்கப்பட்டு இந்திய உயர் கல்வி ஆணையம் கொண்டுவரப்படுகிறது. ‘தேசிய முக்கியத்துவம்’ வாய்ந்த நிறுவனம் என்று நாடாளுமன்றம், சட்டப்பேரவைகளில் அடையாளம் காணப்பட்ட நிறுவனங்கள் மற்றும் ‘நிகர் நிலை’ பல்கலைக்கழகங்களுக்கு இந்தச் சட்டம் பொருந்தாது - அம்சம் 1(2). இந்த ஆணையத்துக்கு, ஒரு தலைவர், ஒரு துணைத் தலைவர் மற்றும் 12 உறுப்பினர்கள் இருப்பார்கள்.
பயன்தக்கதாக இந்த மாற்றம் இருக்க வேண்டுமெனில், உயர்கல்வி ஆணையம், வேலை வாய்ப்புக்கான படிப்புகளைக் கண்டறிந்து ஒவ்வோர் ஆண்டும் அதன் அடிப்படையிலேயே இடங்கள் நிரப்பப்படுவதை உறுதி செய்தல் வேண்டும். ‘தர மேம்பாடு’, ‘தரநிலை அறிதல்’ என்கிற பெயரில் கல்வி நிறுவனங்களை வகைப்படுத்துவதை விடவும், அடுத்த 4 அல்லது 5 ஆண்டுகளில் எந்தப் படிப்பு, நல்ல ‘எதிர்காலம்’ தரும் என்பதைக் கணித்து, கணக்கிட்டு, அதன்படியே பாடங்களைத் தொடங்கினால், சாமான்யர்களுக்கு, குறிப்பாக இளைஞர்களுக்கு, நமது கல்வி முறையின் மேல் நம்பிக்கை பிறக்கும்.
ஆணையம் அங்கீகரிக்காமல் எந்தக் கல்வி நிறுவனமும் புதிதாக பட்டம் / பட்டயம் தொடர்பான ஆரம்ப கட்ட செயல்களில் கூட இறங்க முடியாது என்கிறது வரைவுச் சட்டம். இந்த நிபந்தனை, ஆணையத்தின் அதிகாரத்தை பறை சாற்றுவதாக இருக்கிறதே அன்றி, புதிய படிப்புகளின் தேவை மற்றும் மேம்பாடு குறித்த அக்கறையின் வெளிப்பாடாகத் தென்படவில்லை.
வரைவுச் சட்டத்துக்கு சற்று வெளியே, ஆனால் ஆணையம், கவனத்தில் கொள்ள வேண்டிய அம்சம் - தொழிற்கல்விப் பயிற்சியில் பணித்திறன் மற்றும் நிபுணத்துவம் கூட்டுதல். பொறியியல் கல்லூரிகளில் பேராசிரியர்களாக உள்ளவர்கள், பொறியியல் படித்த, பொறியியல் சொல்லித் தருகிற ஆசிரியர்களாக இருக்கின்றனர்; மற்றபடி அவர்கள் பொறியாளர்கள் அல்லர். அதாவது, பொறியியல் பேராசிரியர்களில் பலருக்கும், ஒரு பொறியாளராகப் பணியாற்றிய, ‘கள அனுபவம்’ சற்றும் இல்லை. பிறகு எப்படி இவர்களால் ‘பணித்திறன்’ வளர்வதற்கு பயிற்சி அளிக்க முடியும்....?
பாடம் சொல்லித் தந்து தேர்வில் கேள்விகளுக்கு பதில் எழுத வைக்கிற பணி வேறு; மாணவர்களை, பொறியியல் தொழில் நுட்பத்துக்குத் தயார் செய்தல் முற்றிலும் வேறு. இந்த வேறுபாட்டை, உயர்கல்வி ஆணையம் உணர்ந்துள்ளதா? ஆம் எனில், கற்பித்தலில் என்ன மாற்றங்களைச் செய்யத் தயாராக உள்ளது...? இப்போதைக்கு எதுவும் இல்லை. கேட்டால், புதிய ஆணையம் ‘ஆலோசித்து’ முடிவெடுக்கும் எனலாம். அதுவும் சரிதான். ஆனால், கொள்கை ரீதியாக ஏதேனும் சில ‘திசைகாட்டி’களை ஆணையத்தின் வரைவு அறிக்கை குறிப்பிட்டு இருக்கலாம்.
உதாரணத்துக்கு, பொறியியல் கல்லூரிகளில் பேராசிரியர் பணிக்கான வயது வரம்பு. வெகு வேகமாக மாறி வருகிற தொழில் நுட்பத் துறையில், பொறியாளராக அனுபவம் இல்லாத ஒருவர், சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்பு படித்ததை வைத்து, இன்றைய இளைஞர்களுக்கு ‘புதிதாக’ என்ன கற்றுத் தர முடியும்....? ஒரு சில ஆண்டுகளாவது பொறியாளர் அனுபவம் கொண்டவர்கள்தாம் பேராசிரியர்களாக வர முடியும் என்கிற நிபந்தனையை பரிட்சார்த்த முறையில் முயற்சித்துப் பார்க்கலாமே....!
பாதுகாப்புத் துறையில் களப் பணியில் ஈடுபட்டு இருக்கிறவர்களுக்கு 15 ஆண்டுகளில் பணி ஓய்வு அளிக்கப்படுகிறது. அது போலவே, தொழிற்படிப்புகளுக்கான பயிற்றுநர், அதிகபட்சம் 20 ஆண்டுகள் வரை மட்டுமே அப்பணியில் நீடிக்கலாம் என வரையறுக்கலாம். இதனால் அப்போதைக்கு அப்போது களத்தில் இருந்து கல்லூரிக்கு வருகிற பயிற்றுநர்கள் கிடைப்பார்கள். நவீனத் தொழில் நுட்பம் அறிந்த பணிச்சூழலுக்கு பரிச்சயப்பட்ட ஆசிரியர்கள் மூலம்தான் ‘பணித்திறன்’ மேம்பாட்டுக்கு வழிகாட்ட முடியும்.
இது போன்ற பார்வையும் அணுகுமுறையும் ஆணையத்துக்கு வாய்த்தால், உயர்கல்வியில் ஆரோக்கியமான மாற்றம் ஏற்படும். புதிய ஆணையம், புதிய திசையில் பயணிக்கப் போகிறதா...? அல்லது, பல்கலைக்கழக மானியக் குழுவைப் போலவே, பத்தாம் பசலித்தனமான பார்வையைக் கொண்டு செயல்படப் போகிறதா....? இந்த வினாவுக்கான விடையில் இருக்கிறது - உயர்கல்வி ஆணையத்தின் வெற்றியும் தோல்வியும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT