Published : 06 Mar 2025 05:19 AM
Last Updated : 06 Mar 2025 05:19 AM
பெங்களூரு: நடிகை ரன்யா ராவ் மீதான தங்கக் கடத்தல் வழக்கில் வருவாய் புலனாய்வு இயக்குநரக அதிகாரிகள் நேற்று பெங்களூருவில் உள்ள அவரது வீட்டில் சோதனை நடத்தினர். அதில் ரூ.2.67 கோடி ரொக்கப் பணமும், ரூ.2.06 கோடி மதிப்பிலான தங்கமும் சிக்கியுள்ளது.
கர்நாடக மாநிலம் சிக்கமகளூருவை சேர்ந்தவர் நடிகை ரன்யா ராவ்(32). கர்நாடக போலீஸ் டிஜிபி ராமச்சந்திர ராவின் வளர்ப்பு மகளான இவர் கன்னடம், தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழி திரைப்படங்களில் நடித்துள்ளார். தமிழில் நடிகர் விக்ரம் பிரபு நடித்த ‘வாகா’ திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்துள்ளார்.
இந்நிலையில், கடந்த திங்கள்கிழமை நள்ளிரவு நடிகை ரன்யா ராவ் துபாயில் இருந்து பெங்களூரு சர்வதேச விமான நிலையத்துக்கு வந்தார். அவர் 14.8 கிலோ தங்க நகையை மறைத்து எடுத்து வந்ததால் வருவாய் புலனாய்வு இயக்குநரக அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர். அவரிடம் விசாரித்த போது, தனது தந்தை ராமச்சந்திர ராவ் கர்நாடக போலீஸ் டிஜிபி என கூறினார். இருப்பினும் அதிகாரிகள் அவரை விசாரித்த போது தங்கம் கடத்தியது தெரியவந்தது.
இதையடுத்து அதிகாரிகள் அவரை பவுரிங் மருத்துவமனைக்கு அழைத்து சென்று, மருத்துவ பரிசோதனை மேற்கொண்டனர். பின்னர் பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் அவரை ஆஜர்படுத்தி, மார்ச் 18-ம் தேதிவரை காவலில் எடுத்துள்ளனர். இதைத் தொடர்ந்து அதிகாரிகள் ரன்யா ராவிடம் நேற்று 8 மணி நேரம் விசாரணை நடத்தினர்.
காப்பாற்றிய அதிகாரி யார்? - அப்போது, நடிகை ரன்யா ராவ் வணிக நோக்கத்துக்காக துபாயில் இருந்து தங்கம் கடத்தி வந்தேன் என்று கூறியதாக தெரிகிறது. 10-க்கும் மேற்பட்ட முறை துபாய் சென்று வந்த அவர், வரும்போதெல்லாம் பெல்ட், பை, உடைகளில் தங்கம் கடத்தி வந்ததாக கூறியுள்ளார். கடந்த 15 நாட்களில் 4 முறை அவர் துபாய் சென்று வந்துள்ளதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதையடுத்து அதிகாரிகள் ரன்யா ராவ் ஒவ்வொரு முறையும் துபாய் சென்று வந்தபோது எப்படி சோதனையில் இருந்து தப்பினார்? அவர் அப்போதெல்லாம் என்ன மாதிரியான உடைகளை அணிந்திருந்தார்? அவரை சோதனை செய்ய விடாமல் ஒவ்வொரு முறையும் விமான நிலையத்தில் அழைத்து சென்ற காவல்துறை உயர் அதிகாரி யார்? எவ்வித சோதனையும் இல்லாமல் விஐபிகள் செல்லும் பாதையில் இவரை அழைத்து சென்றது எப்படி என விசாரணையை முடுக்கிவிட்டுள்ளனர்.
கட்டுக்கட்டாக பணம்: இதனிடையே வருவாய் புலனாய்வு இயக்குநரக அதிகாரிகள் நேற்று பிற்பகலில் பெங்களூருவில் உள்ள நடிகை ரன்யா ராவின் வீட்டில் சோதனை நடத்தினர். சுமார் 4 மணி நேரம் நடந்த சோதனையில், அவரது வீட்டில் இருந்து ரூ.2.67 கோடி ரொக்கப்பணத்தை கைப்பற்றினர். இந்த பணம் கட்டுக்கட்டாக கட்டில் மெத்தைக்கு அடியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
அதேபோல ரகசிய லாக்கரில் வைக்கப்பட்டிருந்த ரூ.2.06 கோடி மதிப்பிலான தங்க நகைகளையும் பறிமுதல் செய்தனர். மேலும் ரூ.17 கோடி மதிப்பிலான சொத்துக்களின் ஆவணங்களையும் அதிகாரிகள் கைப்பற்றியதாக தெரிவித்துள்ளனர்.
தொடர்பு இல்லை: இதனிடையே நடிகை ரன்யா ராவின் தந்தை டிஜிபி ராமசந்திர ராவ், ‘‘எனக்கும் நடிகை ரன்யாராவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. எங்களுக்குள் எவ்வித பேச்சுவார்த்தையும் இல்லை. 4 மாதங்களுக்கு முன்பு ரன்யா ராவுக்கு பெங்களூருவை சேர்ந்த தொழிலதிபர் ஜதின் ஹுக்கேரியுடன் திருமணம் நடந்தது. அதன்பிறகு அவர் எங்களுடன் பேசுவதில்லை. அவருடைய கணவர் என்ன வேலை செய்கிறார் எனவும் தெரியாது. தங்கம் கடத்தியதாக வந்த செய்தி எனக்கு பெரும் அதிர்ச்சியையும் ஏமாற்றத்தையும் தந்தது. அவர் தவறு செய்திருந்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கலாம்” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment