Published : 05 Mar 2025 05:31 AM
Last Updated : 05 Mar 2025 05:31 AM
உத்தர பிரதேச மாநிலம் வாராணசியில் பழம்பெரும் கல்வி நிறுவனமான பனாரஸ் இந்து பல்கலைக்கழகம் உள்ளது. இதன் வளாகத்தில் இந்திய பொருளாதார அளவீட்டு சங்கத்தின் 59-வது மாநாடு நடைபெற்றது.
இதில் முக்கிய விருந்தினராக பங்கேற்ற மத்திய அரசின் நிதி ஆயோக் துணைத் தலைவர் சுமன் பெரி பேசியதாவது: நாடு முழுவதும் உள்ள நகரங்களில் கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தைப் பாதுகாத்து நவீன வளர்ச்சியை செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கு வாராணசியின் வளர்ச்சி ஒரு முன்மாதிரியாக இருக்கும். இதன் வளர்ச்சியைப் பின்பற்றி இதர நகரங்களிலும் வளர்ச்சித் திட்டங்களை அமல்படுத்தினால், இந்தியா 2047-க்குள் வளர்ந்த நாடாக மாறும்.
12 ஆண்டுகளுக்கு முன்பு, வாராணசியில் வளர்ச்சி என்பதை கற்பனை செய்வதே ஒரு பெரிய விஷயமாக இருந்தது. நான் இரண்டாவது முறையாக இந்த நகருக்கு வந்தபோது, வளர்ச்சியுடன் பாரம்பரியமும், கலாச்சாரமும் இங்கு பாதுகாக்கப்படுவதைக் கண்டேன். இப்போது இந்நகரை முன்மாதிரியாக வைத்து நாடு முழுவதும் செயல்படுத்த ஒரு திட்டம் வகுக்கப்படுகிறது. வாராணசியின் பனாரஸ் இந்து பல்கலைக்கழகம் அறிவின் தலைநகராக விளங்குகிறது. இது மனித மூலதனத்தை உற்பத்தி செய்யும் ஒரு பெரிய தொழிற்சாலை. இந்த அடிப்படையில், இந்தியாவை மேம்படுத்த ஒரு பிரச்சாரம் நடத்தப்படுகிறது.
மகா கும்பமேளாவின் பக்தர்களும் இதற்கு மனிதகுலத்தின் மூலதனமாகி உள்ளனர். எனவே, வாராணசி கண்டுள்ள வளர்ச்சியின் மூலம் நம் நாட்டை மேம்படுத்த முடியும். நிதி ஆயோக், மாநிலங்களுக்கு உள்ளூர் உணவுக்காக குரல் கொடுக்கவும், அவர்களின் உள்ளூர் தயாரிப்புகளுக்கான அடையாளத்தை உருவாக்கவும் வாய்ப்பளிக்கிறது. வளர்ந்த இந்தியாவை உருவாக்குவதற்கான நோக்கங்களை உறுதி செய்யும் வகையில் அரசுக்கு கொள்கை ஆவணங்களை பரிந்துரை செய்வதே எங்கள் வேலை.
வளர்ந்த இந்தியாவை உருவாக்க, ஒவ்வொரு ஆண்டும் மொத்த உள்நாட்டு உற்பத்தி 6.5 முதல் 7.5 சதவீதம் வரை வளர வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
உ.பி.யின் புராதன நகரமான வாராணசியை மாற்றி அமைக்க அங்கு ஆட்சி செய்த பல கட்சிகளின் முதல்வர்கள் முயன்றனர். எனினும், அவர்களால் அந்நகரின் ஒரு சாலையைக் கூட விரிவாக்கம் செய்ய முடியவில்லை. இச்சூழலில் அந்த தொகுதியின் எம்.பி.யாக 2024-ல் தேர்ந்தெடுக்கப்பட்டது முதல் பிரதமர் நரேந்திர மோடி, வாரணசியின் வளர்ச்சியில் நேரடியாகக் கவனம் செலுத்தி வருகிறார். இங்கு கடந்த மூன்று ஆண்டுகளில் மட்டும் ரூ.50,000 கோடியில் வளர்ச்சித் திட்டங்கள் அமல்படுத்தப்பட்டுள்ளன. மேலும், பல வளர்ச்சித் திட்டங்கள் முழுமையாகும் நிலையில் உள்ளன. இதற்கான நிர்வாகப் பணியை வாராணசி மாவட்ட ஆட்சியரும் தமிழருமான் எஸ்.ராஜலிங்கம் முன்னின்று செய்து வருவது நினைவுகூரத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Loading comments...