Published : 05 Mar 2025 05:21 AM
Last Updated : 05 Mar 2025 05:21 AM
தரவுப் பாதுகாப்பு என்ற பெயரில் தகவல் அறியும் உரிமை சட்டத்தை மத்திய அரசு பலவீனப்படுத்துகிறது என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே குற்றம் சாட்டியுள்ளார்.
இதுகுறித்து 'எக்ஸ்' தளத்தில் கார்கே நேற்று வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: ஒருபுறம், தவறான தகவல்களை அளிப்பதில் இந்தியா கடந்த பல ஆண்டுகளாக முதலிடத்தில் உள்ளது. மறுபுறம், காங்கிரஸ் கூட்டணி அரசு கொண்டு வந்த தகவல் அறியும் உரிமை சட்டத்தை (ஆர்டிஐ) தரவுப் பாதுகாப்பு என்ற பெயரில் பலவீனப்படுத்த மோடி அரசு முனைப்புடன் உள்ளது.
ரேஷன் கார்டு பட்டியல்கள், நூறுநாள் வேலை திட்ட தொழிலாளர்கள், பொதுநலத் திட்ட பயனாளிகள், வாக்காளர் பட்டியல், அரசு வங்கிகளில் கடன் வாங்கிய பிறகு அதனை திரும்ப செலுத்தாமல் நாட்டை விட்டு வெளியேறியவர்கள் என பொதுத்துறை தொடர்பான தகவல் எதுவாக இருந்தாலும் அது பொதுவெளியில் மக்களுக்கு கிடைப்பது அவசியம்.
ஆனால் மோடி அரசு தரவுப் பாதுகாப்பு என்ற பெயரில் ஆர்டிஐ-யை பலவீனப்படுத்துகிறது. இதனால் அத்தகையோர் பெயர்கள் இனி வெளியிடப்படாது.
காங்கிரஸ் செயல்படுத்திய ஆர்டிஐ-யில் ஏற்கெனவே தனியுரிமை பாதுகாப்பு அம்சங்கள் உள்ளன, அதேநேரத்தில் பயனாளி பட்டியல்கள் அல்லது நிதி முறைகேடுகளில் ஈடுபட்டோர் விவரங்கள் வெளியிடப்படுவதை இது தடுக்கக்கூடாது.
ஆர்டிஐ-யை பலவீனப்படுத்த காங்கிரஸ் அனுமதிக்காது. நாங்கள் தெருக்களில் இருந்து நாடாளுமன்றம் வரை தொடர்ந்து குரல் எழுப்புவோம். மக்களின் உரிமைகளை பாதுகாக்க இந்த சர்வாதிகார அரசை எதிர்த்துப் போராடுவோம். இவ்வாறு கார்கே கூறியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Loading comments...