Published : 04 Mar 2025 05:31 AM
Last Updated : 04 Mar 2025 05:31 AM
திருவனந்தபுரம்: இஸ்ரேலுக்குள் சட்ட விரோதமாக நுழைய முயன்ற போது ஜோர்டான் எல்லையில் வீரர்கள் சுட்டதில் கேரளாவைச் சேர்ந்தவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
கேரள மாநிலத் தலைநகர் திருவனந்தபுரம் பகுதியில் உள்ளது தம்பா. இங்கு ராஜீவ் காந்தி நகருக்கு அருகில் புதுவல் புரையிடம் பகுதியைச் சேர்ந்தவர் தாமஸ் கேப்ரியல் பெரைரா (47). இவரது உறவினர் எடிசன் (43). இவர்கள் ஆட்டோ ஓட்டுநர்கள். இவர்கள் இருவர் மற்றும் மேலும் 2 பேர் என மொத்தம் 4 பேர் இஸ்ரேலில் வேலை பார்க்க விரும்பியுள்ளனர். ஒரு ஏஜென்சி மூலம் அனைவரும் முதலில் ஜோர்டானுக்கு சுற்றுலா விசாவில் சென்றுள்ளனர்.
கடந்த பிப்ரவரி மாதம் 5-ம் தேதி ஜோர்டானுக்கு சென்றவர்கள், பிப்ரவரி 9-ம் தேதி வரை தங்களது குடும்பத்தினருடன் தொலைபேசியில் பேசி வந்துள்ளனர். அதன்பின் பிப்ரவரி 10-ம் தேதி ஜோர்டான் எல்லையில் மலைப்பாதை வழியாக 4 பேரும் இஸ்ரேலுக்குள் ஊடுருவ முயற்சி செய்துள்ளனர். ஆனால், ஜோர்டான் வீரர்கள் அவர்களைப் பார்த்ததும் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.
இதில் தாமஸ் கேப்ரியல் பரிதாபமாக உயிரிழந்தார். எடிசன் காலில் துப்பாக்கிக் குண்டு பாய்ந்துகாயம் அடைந்தார். அவருக்கு சிகிச்சை அளித்து ஜோர்டான் அரசு மீண்டும் இந்தியாவுக்கு நாடு கடத்தியுள்ளது. இத்தகவல்களை எடிசன் தெரிவித்துள்ளார். மற்ற இருவரும் ஜோர்டான் சிறையில் உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில் தாமஸ் கேப்ரியல் இறந்த விவகாரம் குறித்து அவரது குடும்பத்துக்கு ஜோர்டானில் உள்ள இந்திய தூதரகம் இமெயில் மூலம் தகவல் தெரிவித்துள்ளது. எனினும், அந்தத் தகவலை அவர்கள் இன்னும் பார்க்கவில்லை. இஸ்ரேலில் வேலை வாங்கித் தருவதாக கூறி ஜோர்டானுக்கு சுற்றுலா விசாவில் அவர்களை அனுப்பிய ஏஜென்சி பற்றிய தகவல் கிடைக்கவில்லை. ஏனெனில், தாமஸ் மற்றும் எடிசன் ஆகியோர் ஜோர்டான் செல்வதற்கு சில மணி நேரங்களுக்கு முன்னர்தான் அவர்கள் குடும்பத்தினரிடம் தகவல் தெரிவித்துள்ளனர். மேலும், போலி ஏஜென்சிக்கு எவ்வளவு பணம் கொடுத்தனர் போன்ற
விவரங்களும் தெரியவில்லை.
இந்நிலையில், வெளிநாடு களில் வாழும் கேரள மாநிலத்த வர்களுக்கு உதவிகள் செய்து வரும் ‘நார்கா ரூட்ஸ்’ அமைப்பிடம் தாமஸ் உடலை மீட்டுத் தரவேண்டும் என்று அவரது குடும்பத்தினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர். இதுகுறித்து நார்கா ரூட்ஸ் சிஇஓ அஜித் கோலசெரி கூறும்போது, ‘‘இது முதல் முறையாக நடக்கும் சம்பவம் அல்ல. இதுபோல் பலமுறை நடந்துள்ளது. வெளிநாடுகளுக்கு ஆட்களை அனுப்பி வைப்பதாக கூறும் பல ஏஜென்சிகளிடம் லைசென்ஸ் இருப்பதில்லை. இந்த விஷயத்தில் மக்கள்தான் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். இதுபோன்ற போலி ஏஜென்சிகளை ஒழிப்பதில் போலீஸாரின் பங்கு மிகப்பெரியது’’ என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Loading comments...