Published : 03 Mar 2025 05:17 AM
Last Updated : 03 Mar 2025 05:17 AM
சண்டிகர்: ஹரியானா காங்கிரஸ் பெண் நிர்வாகி ஹிமானி நர்வால் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு உள்ளார். பேருந்து நிறுத்தம் அருகே வீசப்பட்டிருந்த சூட்கேசில் இருந்து அவரது உடல் மீட்கப்பட்டது.
ஹரியானாவின் ரோத்தக், விஜய் நகர் பகுதியை சேர்ந்தவர் ஹிமானி நர்வால் (22). சட்டம் பயின்ற அவர், ஹரியானா மாநில காங்கிரஸில் இணைந்து தீவிரமாக பணியாற்றி வந்தார். முன்னாள் முதல்வர் பூபிந்தர் ஹுடாவின் ஆதரவாளராகவும் கட்சியின் இளம் நிர்வாகியாகவும் அவர் அறியப்பட்டார்.
கடந்த 2023-ம் ஆண்டு காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி நடத்திய பாரத ஒற்றுமை (பாரத் ஜோடோ) யாத்திரையில் ஹிமானி நர்வால் பங்கேற்றார். அப்போது ராகுலுடன் அவர் கைகோத்து நடந்து செல்லும் புகைப்படம், வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவின. இதன்காரணமாக கட்சியில் அவர் மேலும் பிரபலம் அடைந்தார்.
ஹிமானி நர்வாலின் தாயார் டெல்லியில் வசிக்கும் நிலையில் பாட்டியுடன் அவர் தங்கியிருந்தார். சில ஆண்டுகளுக்கு முன்பு பாட்டி உயிரிழந்த நிலையில் ஹிமானி தனியாக வீட்டில் வசித்து வந்தார். கடந்த மாதம் 14-ம் தேதி ஹிமானி தனது பிறந்த நாளை கொண்டாடினார். இதுதொடர்பான வீடியோ, புகைப்படங்களை சமூக வலை தளங்களில் வெளியிட்டார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு அவர் ஒரு திருமண விழாவில் பங்கேற்றார். அந்த விழாவில் அவர் நடனமாடிய வீடியோவையும் சமூக வலைதளங்களில் வெளியிட்டார். இதன்பிறகு அவரை காணவில்லை.டெல்லியில் தாய் வசிக்கும் நிலையில் ஹிமானியை யாரும் தேடவில்லை என்று கூறப்படுகிறது.
இந்த சூழலில் ஹரியானாவின் ரோத்தக் நகர் சம்பலா பேருந்து நிறுத்தம் அருகே நேற்று காலை ஒரு சூட்கேஸ் கேட்பாரற்று கிடந்தது. பொதுமக்களின் தகவலின்பேரில் போலீஸார் விரைந்து வந்து சூட்கேஸை திறந்து பார்த்தனர். அந்த சூட்கேசில் இருந்து ஹிமானி நர்வாலின் சடலம் மீட்கப்பட்டது. அவரது உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டு உள்ளது.
இதுகுறித்து போலீஸார் கூறியதாவது: மர்மமான முறையில் ஹிமானி நர்வால் கொலை செய்யப்பட்டு உள்ளார். சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் 25 கி.மீ. தொலைவு வரை உள்ள அனைத்து சிசிடிவி கேமராக்களையும் ஆய்வு செய்து வருகிறோம். 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டு உள்ளன. பேருந்து நிறுத்தம் அருகே சூட்கேசை வீசியது யார் என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தப்படுகிறது. ஹிமானியின் மூக்கில் இருந்து ரத்தம் வழிந்துள்ளது. அவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டாரா என்பது பிரேத பரிசோதனைக்கு பிறகே தெரியவரும். இவ்வாறு போலீஸார் தெரிவித்தார்.
காங். தலைவர்கள் மீது தாய் குற்றச்சாட்டு: ஹிமானி நர்வாலின் தாய் சவிதா கூறியதாவது: எனது மகள் கடந்த 28-ம் தேதி இரவு திருமண விழாவில் பங்கேற்க சென்றதால் செல்போனை சுவிட்ச் ஆப் செய்திருக்கலாம் என்று கருதினேன். தற்போது அவள் கொலை செய்யப்பட்டிருக்கிறாள். எனது மகளின் வளர்ச்சியை பிடிக்காத, காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சிலர் எனது மகளை கொலை செய்திருக்கலாம் என்று சந்தேகிக்கிறேன். பாரத ஒற்றுமை யாத்திரையின்போது ராகுல் காந்தியோடு இணைந்து ஸ்ரீநகர் வரை எனது மகள் பயணம் செய்தாள். எனது மகளின் கொலையில் தொடர்பு உடையவர்களை நீதியின் முன்பு நிறுத்த வேண்டும். இவ்வாறு சவிதா தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment