Published : 28 Feb 2025 05:25 AM
Last Updated : 28 Feb 2025 05:25 AM
புனே: மகாராஷ்டிராவின் புனே பேருந்து நிலையத்தில் இளம்பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். இதில் தொடர்புடைய குற்றவாளியை போலீஸார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
கடந்த 25-ம் தேதி அதிகாலையில் மகாராஷ்டிராவின் புனே நகர் ஸ்வர்கேட் பேருந்து நிலையத்தில் 26 வயது இளம்பெண், சதாரா செல்லும் பேருந்துக்காக காத்திருந்தார். அப்போது இளம்பெண்ணை அணுகிய மர்ம நபர், எந்த ஊருக்கு செல்ல வேண்டும் என்று விசாரித்துள்ளார்.
அந்த பெண், சதாரா மாவட்டத்தின் பால்தானுக்கு செல்ல வேண்டும் என்று கூறியுள்ளார். பால்தான் செல்லும் பேருந்து மற்றொரு பிளாட்பாரத்தில் நிற்பதாக கூறிய மர்ம நபர், இளம்பெண்ணை தன்னுடன் அழைத்து சென்றுள்ளார்.
ஆள் நடமாட்டம் இல்லாத பிளாட்பாரத்தில் நின்றிருந்த குளிர்சாதன பேருந்தில் இளம்பெண்ணை, மர்ம நபர் ஏறச் சென்னார். அந்த பேருந்தில் இளம்பெண் ஏறி அமர்ந்ததும் பின்னால் சென்ற மர்ம நபர், அவரை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்துவிட்டு தப்பியோடிவிட்டார்.
இதன்பிறகு இளம்பெண் சொந்த ஊருக்கு திரும்பினார். தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து தோழியிடம் அவர் செல்போனில் கூறினார். தோழியின் அறிவுரைப்படி சில மணி நேரங்களுக்கு பிறகு இளம்பெண் புணே போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
இதுகுறித்து போலீஸ் துணை ஆணையர் ஸ்மார்டனா பாட்டீல் கூறியதாவது: இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த மர்ம நபர், முகக்கவசம் அணிந்துள்ளார். சிசிடிவி கேமராக்களை பல்வேறு கோணங்களில் ஆய்வு செய்து மர்ம நபரை கண்டுபிடித்துவிட்டோம். ராம்தாஸ் கடே (36) என்ற அந்த நபர் மீது திருட்டு, செயின் பறிப்பு உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. நடத்துநர் போன்று அவர் நடித்து இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். தப்பியோடிய ராம்தாஸ் கடேவை பிடிக்க 8 தனிப்படைகள் அமைக்கப்பட்டு உள்ளன. அவர் விரைவில் கைது செய்யப்படுவார். குற்றவாளியின் புகைப்படம் வெளியிடப்பட்டு உள்ளது. அவர் குறித்து தகவல் தெரிவிப்போருக்கு ரூ.1 லட்சம் பரிசு வழங்கப்படும் என்று அறிவித்துள்ளோம். குளிர்சாதன பேருந்தை தடயவியல் ஆய்வுக்கு அனுப்பி உள்ளோம். இவ்வாறு துணை ஆணையர் ஸ்மார்டனா பாட்டீல் தெரிவித்தார்.
மகாராஷ்டிர துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டே கூறும்போது, “பாலியல் வன்கொடுமை வழக்கை முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் நேரடியாக கண்காணிக்கிறார். குற்றவாளி விரைவில் கைது செய்யப்பட்டு சட்டத்தின் முன்பு நிறுத்தப்படுவார்" என்று தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment