Published : 27 Feb 2025 01:48 PM
Last Updated : 27 Feb 2025 01:48 PM

தெலங்கானா சுரங்க இடிபாடு விபத்து: 6-வது நாளாக தொடரும் மீட்புப் பணிகள்

நாகர்னூல்: ஸ்ரீசைலம் இடதுகரைக் கால்வாய் சுரங்கப்பாதையில் ஏற்பட்ட இடிபாடுகளில் சிக்கியிருக்கும் 8 பணியாளர்களை மீட்கும் பணிகள் 6-வது நாளாக நீடித்து வருகிறது. இந்நிலையில் உள்ளே சிக்கியிருப்பவர்கள் இருக்கும் பகுதிக்குச் செல்ல தடையாக இருக்கும் இடிபாடுகளை அகற்றும் பணிகளில் துளைபோடும் இயந்திரங்கள் ஈடுபட்டிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதுகுறித்து நாகர்னூல் காவல் கண்காணிப்பாளர் வைபவ் கெய்க்வாட் கூறுகையில், “கேஸ் கட்டிங் இயந்திரம் ஏற்கனவே சுரங்கத்துக்குள் அனுப்பப்பட்டுவிட்டது. இரவில் அவர்கள் துளையிடும் பணிகளை மேற்கொண்டனர். நேற்றிரவே பணிகள் தொடங்கி விட்டன. உள்ளே சிக்கியிருப்பவர்களை இன்று சென்றடைய முடியுமா என்று நான் கூற முடியாது.” என்றார்.

முன்னதாக தெலங்கானா அமைச்சர் உத்தம் குமார் ரெட்டி நேற்று கூறுகையில், “சுரங்கத்துக்குள் விழுந்திருக்கும் இடிபாடுகள் கேஸ் கட்டிங் இயந்திரத்தின் மூலம் உடைக்கப்பட்டு அகற்றப்படும். பின்பு ராணுவத்தினர், கடற்படை, எலி வலை சுரங்கத் தொழிலாளர்கள் மற்றும் தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் உள்ளே சிக்கி இருப்பவர்களை மீட்க வேறு முக்கியமான முயற்சிகளை மேற்கொள்ளவார்கள்.” என்று தெரிவித்திருந்தார்.

மூத்த அரசு அதிகாரி ஒருவர் கூறுகையில், “ஸ்ரீசைலம் இடது கரை கால்வாய் சுங்கப்பாதை அமைக்கும் பணியில் சுமார் 800 பேர் பணிபுரிகிறார்கள். அவர்களில் 300 பேர் உள்ளூர்வாசிகள். மற்றவர்கள் ஜார்க்கண்ட், ஒடிசா மற்றும் உத்தரப் பிரதேசம் போன்ற மாநிலங்களில் இருந்து வந்த பணியாளர்கள்.

சுரங்கப் பாதை அமைக்கும் நிறுவனம் பணியாளர்களுக்கு குடியிருப்புகளையும் கட்டிக்கொடுத்துள்ளது. அங்கு விபத்துக்கு பின்பு ஒரு விதமான அச்ச சூழல் நிலவி வருகிறது. அவர்களில் சிலர் திரும்பிச் செல்லவும் விரும்பலாம். ஆனால் தொழிலாளர்கள் கூட்டமாக வெளியேறியதாக எங்களுக்குத் தகவல் இல்லை.” என்று தெரிவித்தார்.

இதனிடையே, ஸ்ரீசைலம் சுரங்கப்பாதை கட்டுமான பணியினை மேற்கொண்டு வரும் Jaypee குழுமத்தின் நிறுவனத் தலைவர் ஜெய்பிரகாஷ் கவுர் நேற்று கூறுகையில், “இதுபோன்ற கடினமான பணிகளை மேற்கொள்ளும் போது விபத்துக்கள் நடக்கவே செய்யும். உள்ளே சிக்கியிருப்பவர்களை பத்திரமாக வெளியே கொண்டுவர மீட்புக்குழுவினர் தங்களால் முடிந்த அனைத்தையும் செய்துவருகின்றனர்.” என்றார்.

முன்னதாக தெலங்கானா மாநிலம் நாகர்னூல் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீசைலம் இடது கரை கால்வாயில் கட்டப்பட்டு வரும் சுரங்காப்பாதையின் ஒரு பகுதி பிப்.22-ம் தேதி இடிந்து விழுந்தது. இந்த விபத்தில் 8 தொழிலாளர்கள் இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ளார்கள். இதில் இரண்டு பேர் இன்ஜினீயர், 2 ஆபரேட்டர்கள், நான்கு தொழிலாளர்களும் அடங்குவர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x