Last Updated : 03 Jul, 2018 08:21 AM

 

Published : 03 Jul 2018 08:21 AM
Last Updated : 03 Jul 2018 08:21 AM

ஒரே நேரத்தில் நாடாளுமன்றத்துக்கும் சட்டப்பேரவைகளுக்கும் தேர்தல்; பிரதமரின் சுதந்திர தின உரையில் முடிவு தெரியும்: பாஜக வட்டாரங்கள் தகவல்

நாடாளுமன்ற மக்களவை மற்றும் மாநிலங்களின் சட்டப்பேரவைகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடக்குமா? இல்லையா? என்ற கேள்வி பெரிதாக எழுந்துள்ளது. இதற்கான விடை பிரதமர் நரேந்திர மோடியின் ஆகஸ்ட் 15, சுதந்திர தின உரையில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சுதந்திர தினத்தன்று பிரதமர் மோடி செங்கோட்டையில் நிகழ்த்தும் வழக்கமான உரையில் அரசின் முக்கிய முடிவுகளை அறிவித்து வருகிறார். இதில் அவர் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவதற்கான இறுதி முடிவை அறிவிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த மாதம் டெல்லியில் நடைபெற்ற நிதி ஆயோக் கூட்டத்தில் பிரதமர் மோடியுடன் தெலங்கானா மாநில முதல்வர் கே.சந்திரசேகர ராவ் சந்தித்து பேசினார். அதற்கு அடுத்த சிலதினங்களில் அவர் ஹைதராபாத்தில் நடத்திய அமைச்சரவை கூட்டத்தில், ’எந்த நேரமும் தேர்தல் வரலாம். நாம் அதற்கு தயாராக இருக்க வேண்டும்’ என எச்சரித்துள்ளார். தெலங்கானாவின் சட்டப்பேரவைக்கு கடந்தமுறை மக்களவையுடன் சேர்த்தே தேர்தல் நடைபெற்றது. எனவே, மக்களவை தேர்தலை முன்கூட்டியே நடத்தும் வாய்ப்புகளும் இருப்பதாகக் கணிக்கப்பட்டு உள்ளது.

இதற்கு முன்பாக மத்தியபிரதேசம், சத்தீஸ்கர், ராஜஸ்தான் மற்றும் மிசோராம் ஆகிய 4 மாநிலங்களின் தேர்தல் டிசம்பரில் நடைபெற உள்ளது. மிசோராமில் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. இந்த நான்கு மாநில தேர்தல் முடிவுகளின் தாக்கம் மக்களவை தேர்தலில் ஏற்படுவது வழக்கமாக உள்ளது. இந்த தாக்கத்தை தவிர்க்க நான்கு மாநிலங்களுடன் வேறு சில மாநிலங்களையும் சேர்த்து மக்களவைக்கான தேர்தல் ஒரே நேரத்தில் நடத்தும் வாய்ப்புகளும் தெரிகின்றன.

இது குறித்து ‘இந்து தமிழ்’ வசம் பாஜகவின் தேசிய நிர்வாகிகள் வட்டாரங்கள் கூறும்போது, ‘ராஜஸ்தான், மத்தியபிரதேசம், சத்தீஸ்கருடன் மத்தியிலும் எங்கள் ஆட்சிக்கு எதிரான அலை வீசத் துவங்கி உள்ளது. இதனால், அவற்றுடன் சேர்த்து மக்களவைக்கும் முன்கூட்டியே தேர்தல் நடந்தால் எங்களுக்கு பலன் கிடைக்கும். இதன் மீதான இறுதி முடிவு அடுத்த மாதம் பிரதமரின் சுதந்திர தின உரையில் தெரிந்து விடும்’ எனத் தெரிவித்தன.

ஏற்கனவே ஆந்திரா, ஒடிஸா மற்றும் தெலங்கானாவிற்கு மக்களவையுடன் இணைந்து கடந்த சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றது. ஒரே சமயத்தில் தேர்தல் அறிவிக்கப்பட்டால், பாஜக ஆளும் மாநிலங்களான ஜார்கண்ட், ஹரியாணா மற்றும் மகாராஷ்டிராவும் அதில் இணையும் வாய்ப்புகள் உள்ளன. பாஜக ஆதரவில் உள்ள பிஹாரிலும் தேர்தலை நடத்த ஐக்கிய ஜனதா தளம் தலைவர் நிதிஷ்குமார் தயாராக உள்ளார்.

அனைத்துக் கட்சிக் கூட்டம்

நாடாளுமன்றம் மற்றும் சட்டப்பேரவைகளுக்கான தேர்தல்களை ஒரே நேரத்தில் நடத்துவது குறித்து முக்கிய அரசியல் கட்சிகளுடன் சட்ட ஆணையம் வரும் 7 மற்றும் 8 ஆகிய தேதிகளில் ஆலோசனை நடத்தவுள்ளது. டெல்லியில் வரும் 7 மற்றும் 8 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ள இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்று கருத்து தெரிவிக்குமாறு பாஜக, காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட ஏழு தேசியக் கட்சிகளுக்கும், 59 மாநிலக் கட்சிகளுக்கும் சட்ட ஆணையம் கடிதம் எழுதியுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x