Published : 22 Feb 2025 11:59 AM
Last Updated : 22 Feb 2025 11:59 AM

இந்திரா காந்தி குறித்து சட்டப்பேரவையில் சர்ச்சை கருத்து: ராஜஸ்தான் காங்., எம்எல்ஏ.,க்கள் தர்ணா

ஜெய்ப்பூர்: நாட்டின் முதல் பெண் பிரதமரும், முன்னாள் பிரதமருமான இந்திரா காந்தி குறித்து பாஜக அமைச்சர் சர்ச்சைக்குரிய வகையில் தெரிவித்த கருத்தைக் கண்டித்து ராஜஸ்தான் காங்கிரஸ் எம்எல்ஏ.,க்கள் தர்ணாவில் ஈடுபட்டனர். நேற்று விடிய விடிய சட்டப்பேரவையில் உள்ளிருப்புப் போராட்டத்தில் அவர்கள் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. தற்போது அவர்கள் தர்ணாவை தொடர்கின்றனர்.

ராஜஸ்தான் மாநிலத்தில் முதல்வர் பஜன் லால் ஷர்மா தலைமையிலான பாஜக ஆட்சி நடைபெறுகிறது. ராஜஸ்தான் சட்டப்பேரவையில் நேற்று ‘லக்பதி தீதி’ திட்டம் குறித்து விவாதம் நடைபெற்றது. அப்போது ராஜஸ்தான் சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறையின் அமைச்சரான அவினாஷ் கெலாட், முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி குறித்து சர்ச்சைக்குரிய விதத்தில் பேசினார். இதற்கு எதிர்க்கட்சியான காங்கிரஸ் கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்தது. அமைச்சரின் கருத்தை அவைக்குறிப்பில் இருந்து நீக்க வேண்டும் என்று காங்கிரஸ் எம் எல் ஏக்கள் கோரினர். ஆனால் சபாநாயகர் அந்தக் கோரிக்கையை ஏற்கவில்லை. இதனால் சட்டப்பேரவையில் கடும் அமளி ஏற்பட்டது. இதைத் தொடர்து காங்கிரஸ் மாநிலக் கட்சித் தலைவர் கோவிந்த் சிங் தோதாஸ்ரே உள்பட 6 காங்கிரஸ் எம்எல்ஏக்கள் இடைநீக்கம் செய்யப்பட்டனர்.

இந்நிலையில் இந்திரா காந்தி குறித்த சர்ச்சைக் கருத்தை அவைக் குறிப்பில் இருந்து நீக்க வேண்டும் என்று கோரியும், தாங்கள் இடைநீக்கம் செய்யப்பட்டது அநீதி என்பதை வலியுறுத்தியும் 6 காங்கிரஸ் எம்எல்ஏ.,க்கள் உள்பட எம்எல்ஏ.,க்கள் பலரும் சட்டப்பேரவைக்குள் விடிய விடிய உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். தற்போதும் தர்ணாவை தொடர்கின்றனர்.

இது குறித்து இன்று (சனிக்கிழமை) செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த எதிர்க்கட்சித் தலைவர் டிக்காராம் ஜுல்லி, “நாங்கள் அமைதி காக்க தயாராகவே இருக்கிறோம். எங்களது கோரிக்கை ஒன்றே ஒன்று தான். இந்திரா காந்தி குறித்து சர்ச்சைக் கருத்தை அவைக் குறிப்பில் இருந்து சபாநாயகர் நீக்க உத்தரவிட வேண்டும். அவர்கள் அதைச் செய்யத் தயாராக இல்லை. அவர்களின் தவறை மறைக்க எங்கள் மீது குற்றத்தை சுமத்த முயல்கின்றனர். நாங்கள் அமளியில் ஈடுபட்டதற்கும், தர்ணா செய்வதற்கும் காரணம் இல்லாமல் இல்லை. ஆனால் எதிர்க்கட்சிகள் என்றாலே தர்ணா செய்யும், அமளியில் ஈடுபடும், அவை நடவடிக்கைகளை முடக்கும் என்ற பிம்பத்தை ஏற்படுத்தவே பிரச்சினையை எங்கள் பக்கம் திசை திருப்புகின்றனர்.” என்றார்.

முன்னதாக சட்டப்பேரவையில் பேசிய பாஜக அமைச்சர் அவினாஷ் கெலாட், முந்தைய காங்கிரஸ் ஆட்சியின்போது மகளிர் தங்கும் விடுதி திட்டத்துக்கு இந்திரா காந்தியின் பெயர் சூட்டப்பட்டதை விமர்சித்துப் பேசியிருந்தார். அவருடைய அந்தப் பேச்சை அவைக் குறிப்பில் இருந்து நீக்கக் கோரியே காங்கிரஸ் எம்எல்ஏக்கள் தர்ணாவில் ஈடுபட்டு வருகின்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Loading comments...

 
x