Published : 21 Feb 2025 06:49 PM
Last Updated : 21 Feb 2025 06:49 PM
புதுடெல்லி: இந்தியாவில் 'வாக்கு சதவீதத்தை அதிகரிக்க' அமெரிக்க அரசு 21 மில்லியன் டாலர் நிதியளித்ததாகக் கூறப்படும் செய்திகள் மிகவும் கவலை அளிக்கின்றன என்று வெளியுறவுத் துறை தெரிவித்துள்ளது.
டெல்லியில் செய்தியாளர்களிடம் வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால், “நிதியுதவி தொடர்பாக அமெரிக்க அரசு நிர்வாகத்தால் வெளியிடப்பட்ட தகவல்களை நாங்கள் பார்த்தோம். இவை மிகவும் கவலையளிக்கின்றன. இது இந்தியாவின் உள் விவகாரங்களில் வெளிநாட்டு தலையீடு ஏற்படுவதற்கான வாய்ப்பைக் குறிக்கின்றது. தொடர்புடைய துறைகள் மற்றும் நிறுவனங்கள் இது தொடர்பாக விசாரித்து வருகின்றன. இப்போதைக்கு இது தொடர்பாக பேசுவது பொருத்தமாக இருக்காது” என தெரிவித்தார்.
காஷ்மீர் குறித்த துருக்கி அதிபர் எர்டோகனின் கருத்து குறித்து கேள்விக்கு பதில் அளித்த ரந்தீர் ஜெய்ஸ்வால், "இதுபோன்ற ஆட்சேபனைக்குரிய கருத்துகளை நாங்கள் நிராகரிக்கிறோம். துருக்கி தூதரிடம் நாங்கள் கடுமையான எதிர்ப்பை பதிவு செய்துள்ளோம். இந்தியாவின் பிராந்திய ஒருமைப்பாடு மற்றும் இறையாண்மை குறித்த இத்தகைய தேவையற்ற கருத்துகள் ஏற்றுக்கொள்ள முடியாதவை. ஜம்மு - காஷ்மீர் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி. ஜம்மு - காஷ்மீர் மக்களுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருப்பது, இந்தியாவுக்கு எதிராக எல்லை தாண்டிய பயங்கரவாதத்தைப் பயன்படுத்தும் பாகிஸ்தானின் கொள்கைதான். அதை அவர் கூறி இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்” என கூறினார்.
மேலும் அவர், “ஐந்தாம் தலைமுறை போர் விமானங்களை இந்தியாவுக்கு வழங்குவது தொடர்பான கொள்கையை அமெரிக்கா மறுபரிசீலனை செய்து வருவதாக இந்திய - அமெரிக்க கூட்டு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. செய்தியாளர் சந்திப்பின்போது எஃப்-35 விமானங்கள் குறித்தும் அதிபர் ட்ரம்ப் குறிப்பிட்டிருந்தார். ஐந்தாம் தலைமுறை போர் விமானத்துக்கான முறையான கையகப்படுத்தல் செயல்முறை இன்னும் எங்கள் தரப்பில் தொடங்கப்படவில்லை.
ஜோகன்னஸ்பர்க்கில் நடந்த ஜி20 வெளியுறவு அமைச்சர்கள் கூட்டத்தின்போது வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், ரஷ்யாவின் வெளியுறவு அமைச்சரை சந்தித்தார். அவர்கள் இந்தியா - ரஷ்யா இருதரப்பு உறவுகளின் அனைத்து அம்சங்களையும் இயல்பாக விவாதித்தனர். மேலும், உக்ரைன் போர் தொடர்பான சமீபத்திய முன்னேற்றங்கள் குறித்தும் அவர்கள் விவாதித்தனர். தொடர்ந்து தொடர்பில் இருக்க ஒப்புக்கொண்டனர்.
கேஐஐடி (KIIT) பல்கலைக்கழகத்தில் நேபாள மாணவியின் துயர மரணத்தால் நாங்கள் மிகவும் வருத்தமடைந்துள்ளோம். எங்கள் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம். நாட்டில் உள்ள அனைத்து சர்வதேச மாணவர்களின் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வுக்கு இந்திய அரசு அதிக முன்னுரிமை அளிக்கிறது. சம்பவம் வெளிப்பட்டதில் இருந்து ஒடிசா அரசுடனும், கேஐஐடி அதிகாரிகளுடனும் வெளியுறவு அமைச்சகம் தொடர்ந்து தொடர்பில் உள்ளது. நேபாள அதிகாரிகளுடனும் நாங்கள் நெருங்கிய தொடர்பைப் பேணி வருகிறோம்" என தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Loading comments...