Published : 19 Feb 2025 01:36 PM
Last Updated : 19 Feb 2025 01:36 PM
புதுடெல்லி: அதானி குழுமங்களின் தலைவர் கவுதம் அதானி மற்றும் அவரது உறவினர் சாகர் அதானி மீதான சுமார் ரூ.2,200 கோடி லஞ்ச ஊழல் புகார் வழக்கில் அமெரிக்காவின் பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணையம், இந்தியாவின் உதவியை நாடியுள்ளது.
இதுகுறித்து, தனது புகாரை அதானிக்கு வழங்கும் நடைமுறைக்காக இந்தியாவின் சட்ட அமைச்சகத்தின் உதவியை நாடி இருப்பதாக நியூயார்க் நீதிமன்றத்தில் அமெரிக்க ஒழுங்குமுறை ஆணையம் தெரிவித்துள்ளது. நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில், "ஒழுங்குமுறை ஆணையம், ஹேக் சேவை மாநாட்டு ஒப்பந்தத்தின் கீழ் உதவி கோரியுள்ளது" என்று தெரிவித்துள்ளது. என்றாலும் இதுகுறித்து அதானி குழுமமோ அல்லது சட்ட அமைச்சகமோ உடனடியாக எந்தக் கருத்தும் தெரிவிக்கவில்லை.
பிரதமர் மோடியின் அமெரிக்க பயணத்துக்கு சில நாட்களுக்கு பின்பு இந்த விவகாரம் வெளியாகியுள்ளது. தனது அமெரிக்கப் பயணத்தின் போது அதிபர் ட்ரம்புடன் அதானி விவகாரம் குறித்து எதுவும் பேசவில்லை என்று பிரதமர் மோடி தெரிவித்திருந்தார். “இருநாடுகளின் தலைவர்களும் இதுபோன்ற தனிப்பட்ட விஷயங்களை ஒருபோதும் விவாதிப்பதில்லை.” என்று பிரதமர் தெரிவித்திருந்தார்.
இதனிடையே காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, கவுதம் அதானியின் ஊழலை, பிரதமர் மோடி மூடி மறைப்பதாக குற்றம்சாட்டியிருந்தார். இதுகுறித்து தனது எக்ஸ் பக்கதில் இந்தியில் வெளியிட்டுள்ள பதிவில், “இதுகுறித்து இந்தியாவில் கேள்வி கேட்டால் அதற்கான பதில் மவுனமே. நீங்கள் வெளிநாட்டில் கேள்வி கேட்டால் அதற்கான பதில் தனிப்பட்ட விஷயம்!. அமெரிக்காவிலும் அதானியின் ஊழலை பிரதமர் மோடி மூடி மறைத்திருக்கிறார்.“ என்று தெரிவித்துள்ளார்.
குற்றச்சாட்டு என்ன? முன்னதாக கடந்த ஆண்டு, அதானி மற்றும் அவரது உறவினர் சாகர் அதானி (அதானி கிரீன் எனர்ஜி செயல் இயக்குநர்), முன்னாள் சிஇஓ வினீத் ஜெயின் உள்ளிட்ட 7 பேர் மீது லஞ்சம் மற்றும் கடன் பத்திர மோசடி தொடர்பான தனித்தனி வழக்குகளில் அமெரிக்காவின் நியூயார்க் நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது.
2020-24 காலகட்டத்தில் அதிக விலைக்கு சூரிய ஒளி (சோலார்) மின்சாரம் வாங்கும் வகையில் விநியோக ஒப்பந்தங்களை பெறுவதற்காக தமிழகம், ஆந்திரா, ஜம்மு - காஷ்மீர், சத்தீஸ்கர், ஒடிசா மாநிலங்களில் அரசு அதிகாரிகளுக்கு அதானி குழுமம் ரூ.2,100 கோடி லஞ்சம் கொடுத்ததாகவும், இதை மறைத்து அமெரிக்க நிறுவனங்களிடம் முதலீடு பெற்றதாகவும் அதானி குழுமம் மீது நியூயார்க்கில் உள்ள புரூக்ளின் பெடரல் நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Loading comments...