Published : 19 Feb 2025 01:02 PM
Last Updated : 19 Feb 2025 01:02 PM
புதுடெல்லி: தேசிய பேரிடர் மீட்பு நிதியத்தின் கீழ் ஆந்திரப்பிரதேசம் உள்ளிட்ட ஐந்து மாநிலங்களுக்கு கூடுதலாக ரூ.1554.99 கோடி நிதி வழங்க மத்திய உள்துறை அமைச்சகம் ஒப்புதல் அளித்திருப்பதாக உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அமித் ஷா இன்று (பிப்.19) வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "பேரிடரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவாக மோடி அரசு ஒரு பாறை போல் நிற்கிறது. இன்று, உள்துறை அமைச்சகம் ஆந்திரப்பிரதேசம், நாகாலாந்து, ஒடிசா, தெலங்கானா மற்றும் திரிபுரா ஆகிய மாநிலங்களுக்கு தேசிய பேரிடர் நிவாரண நிதியின் கீழ் ரூ.1554.99 கோடியை கூடுதலாக வழங்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. மாநில பேரிடர் நிவாரண நிதிக்காக 27 மாநிலங்களுக்கு ரூ.18,322.80 கோடி ஏற்கனவே வழங்கப்பட்ட நிலையில், இந்த தொகை கூடுதலாக வழங்கப்பட்டுள்ளது" என தெரிவித்துள்ளார்.
தற்போது 5 மாநிலங்களுக்கு வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ள ரூ.1554.99 கோடியில், ஆந்திராவிற்கு ரூ.608.08 கோடியும், நாகாலாந்திற்கு ரூ.170.99 கோடியும், ஒடிசாவிற்கு ரூ.255.24 கோடியும், தெலங்கானாவிற்கு ரூ.231.75 கோடியும், திரிபுராவுக்கு ரூ.288.93 கோடியும் வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாக மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
தமிழகம், கேரளத்துக்கு அறிவிப்பு இல்லை.. கடந்த ஆண்டு தமிழகத்தில் ஃபெஞ்சல் புயல் கடும் சேதங்களை ஏற்படுத்தியிருந்தது. இதனை ஒட்டி புயல் நிவாரணமாக ரூ.37,000 கோடியை தமிழக அரசு கோரியிருந்தது. இந்நிலையில் மத்திய அமைச்சர் அமித் ஷாவின் அறிவிப்பில் தமிழகத்துக்கு எந்த ஒதுக்கீடும் இல்லை. இதேபோல் வயநாடு நிலச்சரிவு உள்ளிட்ட கடும் இயற்கை பேரிடர்களை எதிர்கொண்ட கேரளாவுக்கும் நிதி ஒதுக்கீடு சார்ந்து எந்த அறிவிப்பும் இடம்பெறவில்லை.
முன்னதாக நேற்று, தமிழகத்தில் ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட கடலூர், விழுப்புரம், கிருஷ்ணகிரி உட்பட 18 மாவட்டங்களின் விவசாயிகளுக்கு ரூ.498.8 கோடி நிவாரண நிதி வழங்க முதல்வர் உத்தரவிட்டிருந்தார். இதன்மூலம் 5 லட்சத்து 18,783 விவசாயிகள் பயன்பெறுவர். இந்த நிவாரணத் தொகை நேரடியாக விவசாயிகளின் வங்கிக் கணக்கில் ஓரிரு நாட்களில் வரவு வைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Loading comments...