Published : 19 Feb 2025 09:52 AM
Last Updated : 19 Feb 2025 09:52 AM

நள்ளிரவு ‘சம்பவம்’ - தேர்தல் ஆணையர் நியமனம் மீது ராகுல் காந்தி கடும் அதிருப்தி ஏன்?

புதுடெல்லி: புதிய தலைமை தேர்தல் ஆணையர் நியமனம் விவகாரத்தில் காங்கிரஸ் முக்கியத் தலைவரும், மக்களவை எதிர்க்கட்சி தலைவருமான ராகுல் காந்தி தனது கடும் அதிருப்தியை பதிவு செய்துள்ளார்.

1950-ம் ஆண்டு இந்திய தேர்தல் ஆணையம் உருவாக்கப்பட்டது. ஆரம்ப காலத்தில் தலைமை தேர்தல் ஆணையரை மத்திய அரசு நியமித்து வந்தது. கடந்த 1989-ல் தலைமை தேர்தல் ஆணையரோடு கூடுதலாக 2 தேர்தல் ஆணையர்கள் நியமிக்கப்பட்டனர். 1990-ல் அப்போதைய வி.பி.சிங் அரசு, சட்டத்தில் திருத்தம் செய்து 2 தேர்தல் ஆணையர்கள் நியமனத்தை ரத்து செய்தார். அதன்பின் 1993-ல் ஆண்டில் நரசிம்ம ராவ் அரசு, சட்டத்தில் திருத்தம் செய்து மீண்டும் 2 தேர்தல் ஆணையர்களை நியமிக்க வழிவகை செய்தது.

அதன் தொடர்ச்சியாக, 2023-ம் ஆண்டு மார்ச் 2-ம் தேதி உச்ச நீதிமன்றத்தின் 5 நீதிபதிகள் அமர்வு முக்கிய தீர்ப்பை வழங்கியது. ‘பிரதமர், மக்களவை எதிர்க்கட்சி தலைவர், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஆகியோர் அடங்கிய உயர் நிலைக் குழு, தலைமை தேர்தல் ஆணையர், தேர்தல் ஆணையர்களை குடியரசுத் தலைவருக்கு பரிந்துரை செய்ய வேண்டும்’ என்று தீர்ப்பில் உத்தரவிடப்பட்டது.

இதைத் தொடர்ந்து, 2023-ம் ஆண்டு டிசம்பரில் தலைமை தேர்தல் ஆணையர், தேர்தல் ஆணையர்களை நியமிக்க வகை செய்யும் புதிய சட்டம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இதன்படி பிரதமர், மூத்த மத்திய அமைச்சர், மக்களவை எதிர்க்கட்சி தலைவர் அடங்கிய உயர்நிலைக் குழுவானது தலைமைத் தேர்தல் ஆணையர், தேர்தல் ஆணையர்களை நியமனம் செய்யும் என்று அறிவிக்கப்பட்டது.

புதிய சட்டத்தின் மூலம் தேர்வு குழுவில் இருந்து உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி நீக்கப்பட்டு, மூத்த மத்திய அமைச்சர் குழுவில் சேர்க்கப்பட்டார். இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு உள்ளது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வருகிறது.

தற்போது தலைமை தேர்தல் ஆணையராக ராஜீவ் குமாரும் தேர்தல் ஆணையர்களாக ஞானேஷ் குமார், சுக்பீர் சிங் சாந்து ஆகியோர் பணியாற்றி வந்தனர். இதில், தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் நேற்று ஓய்வு பெற்றார். அவருக்கு பதிலாக புதிய தலைமை தேர்தல் ஆணையர் மற்றும் புதிதாக தேர்தல் ஆணையரை நியமிப்பது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான குழு டெல்லியில் நேற்று முன்தினம் இரவு கூடியது.

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கூட்டத்தில் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில் புதிய தலைமை தேர்தல் ஆணையராக ஞானேஷ் குமாரை நியமிக்க முடிவு செய்யப்பட்டது. அப்போது எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி ஆட்சேபம் தெரிவித்தார். ‘தேர்வு குழு தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கிறது. உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு பிறகு முடிவு எடுக்கலாம்’ என்று அவர் கூறியதாகக் கூறப்படுகிறது.

இந்தச் சூழலில் நேற்று முன்தினம் நள்ளிரவில் வெளியிடப்பட்ட அரசாணையில், புதிய தலைமை தேர்தல் ஆணையராக ஞானேஷ் குமார் நியமிக்கப்பட்டிருப்பதாக அறிவிக்கப்பட்டது.

பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர் அமித் ஷா, எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பங்கேற்ற கூட்டத்தில் புதிய தேர்தல் ஆணையரை தேர்வு செய்ய 5 மூத்த ஐஏஎஸ் அதிகாரிகளின் பெயர்கள் பரிசீலிக்கப்பட்டன. இதற்கு ராகுல் காந்தி ஆட்சேபம் தெரிவித்தார்.

உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு பிறகு புதிய தேர்தல் ஆணையரை நியமிக்கலாம் என்று அவர் கூறினார். எனினும், குழுவின் பெரும்பான்மை உறுப்பினர்களின் (பிரதமர் மோடி, அமைச்சர் அமித் ஷா) முடிவின்படி ஹரியானா தலைமைச் செயலாளர் விவேக் ஜோஷி புதிய தேர்தல் ஆணையராக தேர்வு செய்யப்பட்டார்.

கடந்த 1989 ஹரியானா பேட்ச் ஐஏஎஸ் அதிகாரியான விவேக் ஜோஷி வரும் 28-ம் தேதி தலைமைச் செயலாளர் பதவியில் இருந்து ஓய்வு பெறுகிறார். மார்ச் 1-ம் தேதி அவர் தேர்தல் ஆணையராக பதவியேற்க உள்ளார். கடந்த 1966-ம் ஆண்டு மார்ச் 21-ம் தேதி உத்தர பிரதேசத்தில் விவேக் ஜோஷி பிறந்தார். அவருக்கு தற்போது 58 வயதாகிறது. வரும் 2031-ம் ஆண்டு அவர் பதவியில் நீடிப்பார்.

மற்றொரு தேர்தல் ஆணையர் சுக்பீர் சிங் சாந்து வரும் 2028-ம் ஆண்டு ஜூலை 6-ம் தேதி ஓய்வு பெற உள்ளார். எனவே ஞானேஷ் குமாருக்கு பிறகு தலைமை தேர்தல் ஆணையராக விவேக் ஜோஷியே பதவியேற்பார். வரும் 2029-ம் ஆண்டு மக்களவைத் தேர்தல் அவரது மேற்பார்வையில் நடைபெறும் என்று தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தெரிவித்தன.

இந்தப் பின்னணியில் எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், “தலைமைத் தேர்தல் ஆணையத்தின் புதிய தலைமைத் தேர்தல் ஆணையரை / ஆணையர்களைத் தேர்வு செய்யும் குழுவின் உறுப்பினர் என்ற வகையில் அதன் ஆலோசனைக் கூட்டத்தில் நான் எனது எதிர்ப்பை பிரதமரிடமும், உள்துறை அமைச்சரிடமும் தெரிவித்திருந்தேன்.

தேர்தல் ஆணையத்தின் தலைமைத் தேர்தல் அணையரையும், அதன் மற்ற ஆணையர்களையும் தேர்வு செய்வதில் நிர்வாகத் தலையீடு இருக்கக்கூடாது என்பதே சுதந்திரமான அந்த அமைப்பின் மிக அடிப்படை அம்சமாகும். இது தொடர்பான முந்தைய உச்ச நீதிமன்ற உத்தரவுகளும் இதை நிறுவியுள்ளன.

ஆனால், அதையும் மீறி, தேர்வுக் குழுவில் இருந்து தலைமை நீதிபதியையும் நீக்கிவிட்டு தலைமைத் தேர்தல் ஆணையரை நியமித்து மோடி அரசானது நமது தேர்தல் நடைமுறைகளின் நேர்மை மீது கோடிக் கணக்கான மக்களை கவலை கொள்ளச் செய்துள்ளது.

இந்த விவகாரத்தில், எதிர்க்கட்சித் தலைவராக, அம்பேத்கரின் கோட்பாடுகள் மற்றும் நம் தேசத்தை கட்டமைத்த தலைவர்களின் கோட்பாடுகளை நிலைநிறுத்துவது எனது கடமை என நான் கருதுகிறேன்.

நள்ளிரவில் பிரதமரும், உள்துறை அமைச்சரும் இணைந்து புதிய தலைமைத் தேர்தல் ஆணையர் தொடர்பான முடிவை எடுப்பார்கள் என்றால், அது மிகவும் அவமரியாதையான செயல். உச்ச நீதிமன்றம் தேர்தல் ஆணையர் நியமனம் தொடர்பான வழக்கை விரைவில் விசாரணைக்கு எடுக்கவுள்ள நிலையில் பிரதமர், உள்துறை அமைச்சர் எடுத்துள்ள இந்த முடிவு அவர்கள் வகிக்கும் பதவிக்கே அறமற்ற செய்கை.” என்று கடுமையாக விமர்சித்துள்ளார்.

இத்தனை சர்ச்சைகளுக்கும் இடையே, புதிய தலைமை தேர்தல் ஆணையராக ஞானேஷ் குமார் இன்று (புதன்கிழமை) காலை பதவியேற்றுக் கொண்டார்.

— Rahul Gandhi (@RahulGandhi) February 18, 2025

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Loading comments...

 
x