Published : 18 Feb 2025 12:51 AM
Last Updated : 18 Feb 2025 12:51 AM
மத வழிபாட்டுத் தலங்கள் சட்டம் தொடர்பான புதிய மனுக்களை விசாரணைக்கு ஏற்க முடியாது என்று உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது.
முன்னாள் பிரதமர் நரசிம்ம ராவ் ஆட்சிக் காலத்தில் கடந்த 1991-ம் ஆண்டு மத வழிபாட்டு தலங்கள் சட்டம் நிறைவேற்றப்பட்டது. இதன்படி நாடு சுதந்திரம் அடைந்த 1947-ம் ஆண்டுக்கு முந்தைய வழிபாட்டு தலங்கள் மீது யாரும் உரிமை கோர முடியாது என்று அறிவிக்கப்பட்டது.
இந்த சட்டத்தை ரத்து செய்யக் கோரி பாஜக மூத்த தலைவர் அஸ்வினி உபாத்யாயா உள்ளிட்டோர் உச்ச நீதிமன்றத்தில் மனுக்களை தாக்கல் செய்து உள்ளனர். மத வழிபாட்டு தலங்கள் சட்டத்தை முழுமையாக அமல்படுத்தக் கோரி மதுரா ஷாயி ஈத்கா மசூதி கமிட்டி, காங்கிரஸ், மார்க்சிஸ்ட் உள்ளிட்ட அமைப்பு, கட்சிகள் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு உள்ளன.
இந்த மனுக்கள் ஒரே வழக்காக விசாரிக்கப்படுகிறது.கடந்த 2020-ம் ஆண்டு முதல் விசாரணை நடைபெற்று வருகிறது. இதனிடையே மத வழிபாட்டு தலங்கள் சட்டத்துக்கு எதிராகவும் ஆதரவாகவும் உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்து மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு வருகின்றன.
இந்த சூழலில் தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா, நீதிபதி சஞ்சய் குமார் அமர்வு முன்பு வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா கூறியதாவது:
மத வழிபாட்டுத் தலங்கள் சட்டம் தொடர்பாக ஏராளமான மனுக்கள் தொடர்ந்து தாக்கல் செய்யப்பட்டு வருகின்றன. இந்த சட்டம் தொடர்பாக இனிமேலும் மனுக்களை தாக்கல் செய்ய வேண்டாம். புதிய மனுக்களை விசாரணைக்கு ஏற்க முடியாது. தற்போது 3 நீதிபதிகள் அமர்வு வழக்கை விசாரித்து வருகிறது. இன்றைய தினம் இரு நீதிபதிகள் மட்டுமே உள்ளோம். எனவே வழக்கு விசாரணை தள்ளி வைக்கப்படுகிறது. வரும் ஏப்ரல் முதல் வாரத்தில் மீண்டும் விசாரணை நடைபெறும். இவ்வாறு தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா தெரிவித்தார்.
மத வழிபாட்டுத் தலங்கள் சட்டம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் 7 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு உள்ளன. இவை தவிர நாடு முழுவதும் பல்வேறு நீதிமன்றங்களில் மத வழிபாட்டுத் தலங்கள் தொடர்பாக 18 வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதில் 10 வழக்குகள் மசூதி தொடர்பானவை.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Loading comments...