Published : 15 Feb 2025 03:04 PM
Last Updated : 15 Feb 2025 03:04 PM

காசி தமிழ்ச் சங்கமம்: தமிழ்நாட்டிலிருந்து சென்றவர்களுக்கு வாரணாசியில் உற்சாக வரவேற்பு

வாரணாசி: காசி தமிழ்ச் சங்கமத்தின் 3-ம் ஆண்டு நிகழ்வுகளில் பங்கேற்பதற்காக தமிழ்நாட்டிலிருந்து சென்றவர்களுக்கு வாரணாசி ரயில் நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

காசி தமிழ்ச் சங்கம் 3.0-வில் பங்கேற்க தமிழ்நாட்டில் இருந்து மாணவர்கள், ஆசிரியர்கள், எழுத்தாளர்கள் அடங்கிய முதல் குழு வாரணாசிக்கு சென்றடைந்தது. மத்திய கல்வி அமைச்சகத்தின் முன்முயற்சியின் கீழ் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த நிகழ்வு, பிரதமர் நரேந்திர மோடியின் ஒரே பாரதம் உன்னத பாரதம் என்ற தொலைநோக்கு பார்வையின் ஒரு பகுதியாக, மூன்றாவது ஆண்டாக இந்த ஆண்டும் நடத்தப்படுகிறது. காசிக்கும் தமிழ்நாட்டிற்கும் இடையிலான காலத்தால் அழியாத பிணைப்புகளைக் கொண்டாடவும், நாகரிக இணைப்புகளை வலுப்படுத்தவுமான ஒரு உத்வேக முயற்சி இது பார்க்கப்படுகிறது.

வாரணாசி சென்றடைந்த தமிழகத்தைச் சேர்ந்தவர்களை, மத்திய அரசின் கல்வி அமைச்சகத்தின் செயலாளர் வினீத் ஜோஷி உள்ளிட்ட அதிகாரிகள் தமிழக குழுவினரை அன்புடன் வரவேற்றனர். வாரணாசி ரயில் நிலையத்தில், சிவப்பு கம்பளம் விரிக்கப்பட்டு, ஸ்வஸ்திகா மந்திரங்கள் முழங்க மலர் தூவி, மாலைகள் அணிவித்து முதல் குழுவினர் வரவேற்கப்பட்டனர். “வணக்கம் காசி” என்ற வாசகத்துடன் வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இன்றில் இருந்து 4 நாட்களுக்கு இந்த நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

வாரணாசியில் செய்தியாளர்களிடம் பேசிய இளம் பங்கேற்பாளர் ஒருவர், “இந்த வாய்ப்பு கிடைத்ததில் நான் அதிர்ஷ்டசாலியாக உணர்கிறேன். வட இந்தியாவுக்கும் தென்னிந்தியாவுக்கும் இடையிலான வரலாற்று உறவுகளை தெரிந்து கொள்ளும் நோக்கில் நான் நான்கு நாள் பயணமாக வந்துள்ளேன்.” என தெரிவித்தார்.

மற்றொரு மாணவி கூறுகையில், “மகா கும்பமேளாவில் நீராடுவது எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது. அயோத்திக்கு செல்வது எனது கனவு. இப்போது அதுவும் நனவாகப் போகிறது. இரண்டு பெரிய மாநிலங்களை இணைக்கும் இந்த அற்புதமான முயற்சிக்காக மத்திய அரசுக்கு மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.” என்று கூறினார்.

இந்த நான்கு நாள் பயணத்தில், தமிழக பிரதிநிதிகள் காசி விஸ்வநாதர் கோயில், அன்னபூர்ணா கோயில், நமோ காட், ராம்நகர், பனாரஸ் இந்து பல்கலைக்கழகம் (பிஎச்யு), ஹனுமன் படித்துறையில் உள்ள சுப்பிரமணிய பாரதியின் இல்லம் ஆகியவற்றைப் பார்வையிடுவார்கள். மகா கும்பமேளாவில் பங்கேற்று புனித நீராடுவதுடன், குழந்தை ராமரின் தரிசனத்திற்காக அயோத்திக்குச் செல்வார்கள். புனித யாத்திரையை முடித்துக் கொண்டு வாரணாசிக்குத் திரும்பி, பின்னர் அங்கிருந்து அவர்கள் தமிழ்நாட்டுக்குப் புறப்படுவார்கள்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Loading comments...

 
x