Published : 15 Feb 2025 11:51 AM
Last Updated : 15 Feb 2025 11:51 AM

வருமான வரி மசோதாவை ஆராய மக்களவை தேர்வுக் குழு அமைப்பு

பைஜயந்த் ஜெய் பாண்டா

புதுடெல்லி: வருமான வரி மசோதா 2025-ஐ ஆராய்வதற்கான மக்களவையின் தேர்வுக் குழு வெள்ளிக்கிழமை (பிப்ரவரி 14, 2025) அமைக்கப்பட்டது. இதன் தலைவராக பாஜக எம்பி பைஜயந்த் ஜெய் பாண்டா நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்தக் குழுவில் ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணியை(என்டிஏ) சேர்ந்த 17 பேர் உட்பட 31 எம்.பி.க்கள் இருப்பார்கள். என்டிஏ எம்.பி.க்களில் பாஜகவைச் சேர்ந்த 14 பேரும், தெலுங்கு தேசம் கட்சி, ஜே.டி.(யு) மற்றும் சிவசேனாவைச் சேர்ந்த தலா ஒருவரும் உள்ளனர்.

எதிர்க்கட்சிகளில் காங்கிரஸைச் சேர்ந்த ஆறு பேர், சமாஜ்வாடி கட்சியைச் சேர்ந்த இரண்டு பேர் மற்றும் திமுக, டி.எம்.சி, சிவசேனா (யு.பி.டி), என்.சி.பி (எஸ்.பி) மற்றும் ஆர்.எஸ்.பி.யைச் சேர்ந்த தலா ஒருவரும் உட்பட 13 எம்.பி.க்கள் உள்ளனர்.

பாஜக சார்பில், பைஜயந்த் ஜெய் பாண்டா, நிஷிகாந்த் துபே, பி.பி. சவுத்ரி, பர்த்ருஹரி மஹ்தாப் மற்றும் அனில் பலுனி உள்ளிட்டோர் தேர்வுக்குழுவில் இடம் பெற்றுள்ளனர்.

எதிர்க்கட்சி எம்.பி.க்களில் காங்கிரஸைச் சேர்ந்த தீபேந்தர் சிங் ஹூடா, திரிணமூல் காங்கிரஸைச் சேர்ந்த மஹுவா மொய்த்ரா, என்.சி.பி (எஸ்.பி) கட்சியின் சுப்ரியா சுலே மற்றும் ஆர்.எஸ்.பியின் என்.கே. பிரேமச்சந்திரன் உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர்.

இந்த தேர்வுக்குழு புதிய வருமான வரி சட்ட மசோதாவை முழுமையாக ஆய்வு செய்யும். தேவைப்படும் பட்சத்தில் அதில் உரிய மாற்றங்களை செய்து, இதுதொடர்பான அறிக்கையை மக்களவையில் தாக்கல் செய்யும். மழைக்கால கூட்டத்தொடரின் முதல் நாளுக்குள் குழு தனது அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும். தற்போதைய பட்ஜெட் கூட்டத்தொடர் ஏப்ரல் 4 ஆம் தேதி முடிவடையும். மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை மூன்றாவது வாரத்தில் தொடங்கலாம்.

வியாழக்கிழமை மக்களவையில் மசோதாவை அறிமுகப்படுத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், வரைவுச் சட்டத்தை அவையின் தேர்வுக் குழுவுக்கு பரிந்துரைக்குமாறு சபாநாயகர் ஓம் பிர்லா பிர்லாவிடம் கேட்டுக்கொண்டார். இதையடுத்து தேர்வுக்குழுவை சபாநாயகர் ஓம் பிர்லா அமைத்துள்ளார்.

இந்த புதிய வருமான வரி சட்ட மசோதா குறித்து கருத்து தெரிவித்துள்ள நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், ‘தற்போதைய பழைய வருமான வரி (ஐ.டி.) சட்டத்தில் 800-க்கும் மேற்பட்ட பிரிவுகள் உள்ளன. தற்போது முன்மொழியப்பட்ட சட்டத்தில் 536 பிரிவுகள். 622 பக்கங்கள், 16 அட்டவணைகள் மட்டுமே உள்ளன. இது எளிதாக இருக்கும்’ என்று தெரிவித்துள்ளார்.

1961-ம் ஆண்டு பழைய வருமான வரி சட்டத்தை மாற்றுவதை இலக்காக கொண்டு புதிய மசோதா கொண்டுவரப்பட்டுள்ளது. இது 2026 ஏப்ரல் முதல் அமலுக்கு வரும் என தெரிகிறது. 60 ஆண்டுகளாக வருமான வரி சட்டத்தில் இருக்கும் ‘முந்தைய ஆண்டு’ என்ற சொல் நீக்கப்பட்டு, அதற்கு பதிலாக ‘வரி ஆண்டு’ என்பது சேர்க்கப்பட்டுள்ளது. ‘மதிப்பீட்டு ஆண்டு’ என்ற சொல்லும் நீக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x