Published : 15 Feb 2025 05:53 AM
Last Updated : 15 Feb 2025 05:53 AM

அமெரிக்காவின் எப்-35 போர் விமானங்கள் மூலம் இந்திய விமானப்படையின் திறன் அதிகரிக்கும்

அமெரிக்க தயாரிப்பான எப்-35 போர் விமானங்கள் இந்திய விமானப்படையில் இணையும்போது, அதன் திறன் பல மடங்கு அதிகரிக்கும்.

பிரதமர் மோடி அமெரிக்காவில் அந்நாட்டு அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பை சந்தித்து பேசினார். இரு தரப்பு பேச்சுவார்த்தைக்குப்பின் பேட்டியளித்த அமெரிக்க அதிபர் ட்ரம்ப், இந்தியாவுக்கு எப்-35 போர் விமானங்கள் விற்கப்படும் என அறிவித்தார். இந்த போர் விமானம் சூப்பர்சோனிக் வேகத்தில் எதிரிகளின் ரேடாரில் சிக்காமல் பறக்கும் திறன் உடையது. இந்த விமானத்தின் விமானி அறையில் மற்ற போர் விமானங்களில் உள்ளது போன்ற கருவிகள், திரைகள் இருக்காது. ஹெல்மட்டில் பொருத்தப்பட்டுள்ள திரையிலேயே அனைத்து தகவல்களையும் அறிய முடியும். இதில் அதிக எடையுள்ள குண்டுகளை ஏற்றிச் செல்ல முடியும்.

அமெரிக்காவின் லாக்கீட் மார்டின் நிறுவனம் தயாரிக்கும் எப்-35 போர் விமானங்கள் தற்போது அமெரிக்க விமானப்படை, கடற்படை மற்றும் நேட்டோ அணியில் இடம்பெற்றுள்ள இஸ்ரேல் மற்றும் ஜப்பானிடம் மட்டுமே உள்ளன. எப்-35 விமானத்தில் ஏ,பி,சி என 3 ரகங்கள் உள்ளன. இதில் எப்-35ஏ வழக்கமாக மேலெழும்பி தரையிறங்கக் கூடியது. இதன் விலை 80 மில்லியன் டாலர். எப்-35 பி ரகம் குறுகிய ஓடு பாதையில் பறந்து செங்குத்தாக தரையிறங்கும் திறன் படைத்தது. இதன் விலை 115 மில்லியன் டாலர். எப்-35 சி ரக விமானம் போர் கப்பல்களில் தரையிறங்க கூடியது. இதன் விலை 110 மில்லியன் டாலர்.

இந்த விமானத்தின் விலையும் அதிகம், பராமரிப்பு செலவும் அதிகமாக இருக்கும். இந்த விமானம் ஒரு மணி நேரம் பறந்தாலே 36,000 டாலர் செலவு ஏற்படும். பெங்களூரில் நடைபெற்ற ஏரோ இந்தியா 2025 விமான கண்காட்சியிலும், அமெரிக்காவின் எப்-35 போர் விமானங்கள் பங்கேற்று பார்வையாளர்களை மிகவும் கவர்ந்தன.

எதிரி நாட்டு ரேடாரில் சிக்காமல் பறக்கும் தொழில்நுட்பத்துடன் கூடிய போர் விமானங்கள்தான் இந்திய விமானப்படையின் தற்போதைய தேவை. அதை அமெரிக்காவின் எப்-35 போர் விமானங்கள் நிறைவேற்றி, இந்திய விமானப்படையின் திறனை மேம்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Loading comments...

 
x