Published : 15 Feb 2025 05:50 AM
Last Updated : 15 Feb 2025 05:50 AM
சட்டவிரோதமாக அமெரிக்காவில் தங்கியிருந்த 119 இந்தியர்கள் இன்று மற்றும் நாளை பஞ்சாபின் அமிர்தசரஸ் வழியாக தாயகம் வந்தடைய உள்ளனர்.
இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது: அமெரிக்காவில் உரிய ஆவணங்கள் இன்றி தங்கியிருந்த 119 இந்தியர்கள் விமானப் படைக்கு சொந்தமான 2 விமானங்களில் நாடு கடத்தப்படுகின்றனர். இந்த 2 விமானங்கள் 119 இந்தியர்களையும் ஏற்றிக்கொண்டு பிப்ரவரி 15 மற்றும் பிப்ரவரி 16-ம் தேதி இரவு 10.05 மணிக்கு பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் உள்ள குரு ராம் தாஸ் சர்வதேச விமான நிலையத்தை வந்தடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அமெரிக்காவிலிருந்து நாடு கடத்தப்படுபவர்களில் அதிகபட்சமாக 67 பேர் பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்தவர்கள். இதனைத் தொடர்ந்து ஹரியாணா (33), குஜராத் (8), உத்தர பிரதேசம் (3), மகாராஷ்டிரா (2), கோவா (2), ராஜஸ்தான் (2) இமாச்சல் மறறும ஜம்மு-காஷ்மீர் (தலா ஒருவர் ) ஆகிய மாநிலங்களைச் சேர்ந்தவர்களும் அமெரிக்காவிலிருந்து இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்டுள்ளனர். இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்தனர்.
அமெரிக்காவில் ஆவணங்கள் இல்லாமல் தங்கிய 104 இந்தியர்களை ஏற்றிக் கொண்டு வந்த முதல் விமானம் பிப்ரவரி 5-ல் இதே விமான நிலையத்தை வந்தடைந்தது. தற்போது, இரண்டாவது முறையாக அமெரிக்க விமானங்கள் இந்தியர்களை ஏற்றிக்கொண்டு அமிர்தசரஸ் விமான நிலையத்தை வந்தடைய உள்ளன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Loading comments...