Published : 14 Feb 2025 02:39 PM
Last Updated : 14 Feb 2025 02:39 PM
வாஷிங்டன்: பிரதமர் மோடி - அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் சந்திப்பில், பல்வேறு சுவாரஸ்யங்கள் நிறைந்துள்ளன. இரு நாடுகளுக்கும் இடையேயான நல்லுறவை புரிந்துகொள்வதைவிட, மோடி-ட்ரம்ப் நட்பை உலக நாடுகளுக்கு எடுத்துரைக்கும் வகையில் இந்த சந்திப்பு அமைந்துள்ளது எனலாம்.
அமெரிக்கா சென்றுள்ள இந்தியப் பிரதமர் மோடி, வெள்ளை மாளிகையில் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்பை சந்தித்தார். அப்போது, அவர்கள் இருவரும் வர்த்தகம், பயங்கரவாதம் மற்றும் பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் குறித்து விவாதித்தனர். அதில் ஒருவரை ஒருவர் பாராட்டிக் கொண்டனர், வாழ்த்துக் கூறி அன்பை வெளிப்படுத்திக் கொண்டனர்.
மோடி-ட்ரம்ப் இருவரின் சந்திப்பு, அமெரிக்கா மற்றும் இந்தியா ஆகிய இரு பெரிய நாடுகளுக்கு இடையிலான ராஜதந்திர உறவுகளை எடுத்துக்காட்டியது. அதோடு, இரு தலைவர்களுக்கும் இடையிலான நட்புறவை பிரதிபலித்தது. அமெரிக்க அதிபரிடம், மோடியை குறித்து பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டது. அப்போது அவர், “ பிரதமர் மோடி என்னைவிட சிறந்த சமரசப் பேச்சுவார்த்தையாளர்” (better negotiator) என்று ட்ரம்ப் புன்னகையுடன் கூறினார்.
பிரதமர் நரேந்திர மோடி வெள்ளை மாளிகைக்கு வந்தபோது, அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், அவரை கட்டியணைத்து, அன்புடன் வரவேற்று, “நாங்கள் உங்களை மிகவும் மிஸ் செய்தோம்” என்றார். பிரதமர் மோடியை வெள்ளை மாளிகையில் மீண்டும் பார்த்ததில் மகிழ்ச்சி அடைவதாகவும் ட்ரம்ப் கூறினார். அதோடு, “மோடி என்னுடைய சிறந்த நண்பர், நீண்ட காலமாக எங்களுக்குள் நல்ல உறவு உள்ளது.” என்றார்.
மேலும், பிரதமர் மோடிக்கு அந்நாட்டு அதிபர் டொனால்டு ட்ரம்ப் ஒரு சிறப்புப் பரிசை வழங்கினார். அந்தப் பரிசில், ‘பிரதமரே நீங்கள் சிறந்தவர்’ என்று எழுதி கையெழுத்திட்டுள்ளார். ‘Our Journey Together’ என்ற காபி டேபிள் புத்தகத்தில் தான் ட்ரம்ப் இவ்வாறு எழுதிக் கொடுத்துள்ளார். 320 பக்கங்களைக் கொண்ட இந்தப் புத்தகத்தில் 'ஹவுடி மோடி' (Howdy Modi) மற்றும் 'நமஸ்தே டிரம்ப்' (Namaste Trump) நிகழ்வுகளின் புகைப்படங்கள் இடம்பெற்றுள்ளன.
இந்திய-அமெரிக்க வர்த்தக உறவுகளின் முக்கியத்துவத்தை வலியுறுத்திய ட்ரம்ப், மோடியை ‘ஒரு பயங்கரமான மனிதர்’ (terrific man) என்று அறிமுகப்படுத்தினார். இருதரப்பு பேச்சுவார்த்தைகளுக்கு முன்னதாக, அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பிரதமர் நரேந்திர மோடியிடம், இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே சில அற்புதமான வர்த்தக ஒப்பந்தங்களை எதிர்பார்ப்பதாகக் கூறினார்.
பல்வேறு வர்த்தக வரிகளை குறைப்பது குறித்த பேச்சுவார்த்தைகளைத் தொடங்க இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ஒப்புக்கொண்டதாக ட்ரம்ப் கூறினார். பின்னர் ‘எங்கள் உறவு இதுவரை இல்லாத அளவுக்கு சிறப்பாக உள்ளது’ என்றும் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment