Published : 14 Feb 2025 02:17 PM
Last Updated : 14 Feb 2025 02:17 PM

‘‘சீன எல்லைப் பிரச்சினையில் உதவத் தயார்’’ - ட்ரம்ப்பின் கருத்தும் இந்தியாவின் எதிர்வினையும்

வாஷிங்டன்: சீனா உடனான எல்லை பிரச்சினையில் இந்தியாவுக்கு உதவ தயார் என டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்திருந்த நிலையில், அந்த உதவியை இந்தியா தவிர்த்துள்ளது.

வெள்ளை மாளிகையில் பிரதமர் நரேந்திர மோடியுடன் இணைந்து நேற்று (வியாழக்கிழமை) செய்தியாளர்களிடம் பேசிய அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், "சீனா உலகின் மிக முக்கியமான ஒரு நாடு. சீனாவுடன் நாம் (அமெரிக்கா) மிகச் சிறந்த உறவைக் கொண்டிருக்கப் போகிறோம் என்று நான் நினைக்கிறேன். கோவிட் வரை நான் சீன அதிபர் ஜி ஜின்பிங்குடன் நன்றாகப் பழகினேன். சீனா உலகின் மிக முக்கியமான நாடு என்று நான் நினைக்கிறேன்.

சீன எல்லையில் இந்தியா எதிர்கொள்ளும் மோதல்கள் மிகவும் கொடூரமானவை. அவை தொடர்ந்து நடக்கும் என்று நினைக்கிறேன். நான் உதவ முடிந்தால், மிகவும் மகிழ்ச்சியுடன் உதவத் தயார். ஏனென்றால் அது நிறுத்தப்பட வேண்டும்," என்று தெரிவித்திருந்தார்.

ட்ரம்ப்பின் உதவியை இந்தியா மறைமுகமாக ஏற்க மறுத்துள்ளது. இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய இந்திய வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி, "எங்கள் அண்டை நாடுகளுடன் எங்களுக்கு என்ன பிரச்சினைகள் இருந்தாலும், அந்தப் பிரச்சினைகளைக் கையாள்வதில் நாங்கள் எப்போதும் இருதரப்பு அணுகுமுறையையே கடைப்பிடித்து வருகிறோம்" என்று தெரிவித்தார்.

ரஷ்யா-உக்ரைன் மோதலை முடிவுக்குக் கொண்டுவருவதில் சீனா முக்கிய பங்கு வகிக்க முடியும் என்றும் ட்ரம்ப் கூறினார். “தலைவர்களைப் பொறுத்தவரை, நாங்கள் மிகவும் நெருக்கமாக இருந்தோம் என்று நினைக்கிறேன். மேலும், சீனா உலகில் மிக முக்கியமான பங்கு வகிக்கிறது என்று நான் நினைக்கிறேன். உக்ரைன் மற்றும் ரஷ்யாவுடனான இந்தப் போரை முடிவுக்குக் கொண்டுவர அவர்கள் எங்களுக்கு உதவ முடியும் என்று நான் நினைக்கிறேன்,” என்று ட்ரம்ப் தெரிவித்தார்.

உலகின் மிக முக்கிய சக்திகளுக்கு இடையேயான ராஜதந்திர ஒத்துழைப்பு மகிவும் முக்கியத்துவம் வாய்ந்தது என தெரிவித்த ட்ரம்ப், "இது நீண்ட காலமாக நடந்து வருகிறது. சீனா, இந்தியா, ரஷ்யா, அமெரிக்கா என நாம் அனைவரும் ஒத்துப்போக முடியும் என்று நான் நம்புகிறேன். இது மிகவும் முக்கியமானது," என்று குறிப்பிட்டார்.

பிரதமர் நரேந்திர மோடியை வெகுவாக புகழ்ந்த டொனால்ட் ட்ரம்ப், "அவர் (பிரதமர் மோடி) என்னை விட மிகவும் கடினமான பேச்சுவார்த்தையாளர். மேலும் அவர் என்னை விட மிகச் சிறந்த பேச்சுவார்த்தையாளர். இதில் போட்டி கூட இல்லை. மோடி எனது சிறந்த நண்பர். அவர் ஒரு அற்புதமான மனிதர். இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் சில அற்புதமான வர்த்தக ஒப்பந்தங்களை நாங்கள் செய்யப் போகிறோம். எங்கள் உறவு இதுவரை இருந்ததிலேயே சிறந்தது என்று நான் நினைக்கிறேன்” என்று தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Loading comments...

 
x