Last Updated : 14 Feb, 2025 09:53 AM

1  

Published : 14 Feb 2025 09:53 AM
Last Updated : 14 Feb 2025 09:53 AM

வாராணசியில் நாளை காசி தமிழ்ச் சங்கமம் 3.0 தொடக்கம்

கோப்புப்படம்

புதுடெல்லி: உத்தர பிரதேச மாநிலத்தில் பிரதமர் மோடியின் மக்களவை தொகுதி வாராணசி. இங்குள்ள காசி விஸ்வநாதர் கோயிலுக்கும் தமிழ்நாட்டுக்கும் இடையே ஆன்மிகம், கலாச்சார ரீதியாகப் பழங்காலம் முதலே தொடர்பு உள்ளது. அந்த தொடர்பை வலுப்படுத்த பிரதமர் மோடி கடந்த 2022-ம் ஆண்டு காசி தமிழ்ச் சங்கமம் நிழ்ச்சியை தொடங்கினார். இதன் 2-வது சங்கமம் 2023 டிசம்பரில் நடைபெற்றது. இந்த 2 சங்கமங்களுக்கும் தமிழ்நாட்டைச் சேர்ந்த பலர் மத்திய அரசின் செலவில் அழைத்துச் செல்லப்பட்டனர்.

இதன் தொடர்ச்சியாக காசி தமிழ்ச் சங்கமம் 3.0 (கேடிஎஸ் 3.0) நாளை வாராணசியில் தொடங்கு கிறது. இதை உ.பி. மாநில அரசு ஆதரவுடன் மத்திய கல்வித்துறை அமைச்சகம் நடத்துகிறது. பிரதமர் மோடி அமெரிக்க பயணம் மேற்கொண்டுள்ளதால், அவரால் காசி தமிழ்ச் சங்கமம் நிகழ்ச்சியை இந்த முறை தெடாங்கி வைக்க முடியவில்லை. நாளை மாலை நடைபெறும் கேடிஎஸ் 3.0 தொடக்க விழாவில் மத்திய அமைச்சர்கள் நிர்மலா சீதாராமன், கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான், இணை அமைச்சர் முருகன் மற்றும் உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர். இந்த நிகழ்ச்சி வரும் 25 வரை 10 நாட்கள் நடைபெறுகிறது.

இதில் தமிழகம் மற்றும் தேசிய அளவில் பல முக்கிய பிரிவினர் கலந்து கொண்டு அன்றாடம் உரை நிகழ்த்த உள்ளனர். இந்த பட்டியலில், பாரத் கியான் அமைப்பின் நிறுவனத் தம்பதிகள் டாக்டர்.டி.கே.ஹரி மற்றும் டாக்டர் பிரேமா ஹரி, காசி கும்பாபிஷேகம் எனும் நூலை வெளியிட்ட நகரத்தார் சமூகத் தலைவர்களில் ஒருவரான சுப்பு சுந்தரம் இடம் பெற்றுள்ளனர்.

இவர்களுடன், வாராணசியின் சங்கரா கண் மருத்துவமனை தலைவர் டாக்டர் வி.ரமணி, வேத விற்பன்னர் வேலுக்குடி உ.வே.கிருஷ்ணன் சுவாமி, தமிழகத்தின் பல சிவன் கோயில்களை புனரைமைத்து பராமரித்து வரும் கற்பகம் கல்வி அறக்கட்டளையின் ஆர்.வசந்த குமார் ஆகியோர் பங்கேற்கின்றனர்.

வரும் 21-ம் தேதி தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்து கொள்கிறார். இவர், கடந்த 2 காசி தமிழ்ச் சங்கம நிகழ்ச்சிகளிலும் முக்கிய பங்காற்றியர். 22-ம் தேதி கோவிலூர் மடத்தின் மடாதிபதி நாராயண ஞானதேசிக சுவாமி கலந்து கொள்கிறார். உச்ச நீதிமன்ற நீதிபதி ஆர்.மகாதேவன், 23-ம் தேதி பங்கேற்கிறார். பிப்ரவரி 24-ம் தேதி பிரபல ஜோதிடரும் கர்நாடக சங்கீத வித்வானுமான ஹரிகேச நல்லூர் வெங்கட்ராமன் பங்கேற்கிறார். பிப்ரவரி 25-ம் தேதி நிறைவு விழாவில் பிரதமர் மோடி பங்கேற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கங்கை கரைகளில் ஒன்றான நமோ காட்டில் ஒரு அரங்கு அமைத்து கேடிஎஸ் 3.0 நடைபெற உள்ளது. சில நிகழ்ச்சிகள் வாராணசியில் உள்ள பழமை வாய்ந்த பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்திலும் நடைபெற உள்ளது. தமிழ்நாட்டில் இருந்து ரயில்கள் மூலம் இதற்கு வருகை தருபவர்களை மகா கும்பமேளாவில் ஒரு இரவு தங்க வைக்கவும், அயோத்தி ராமர் கோயிலுக்கு அழைத்து செல்லவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் இருந்து சுமார் 2,400 பேர், மத்திய பல்கலைக்கழகங்களின் மாணவர்கள் 200 பேரும் இதில் கலந்து கொள்கின்றனர். காசி தமிழ்ச் சங்கமம் 3.0-ன் மூலக்கருத்தாக மகரிஷி அகஸ்திய முனி வைக்கப்பட்டுள்ளது. அகத்தியர் என்றழைக்கப்படும் இவர், காசி மற்றும் தமிழ் நாட்டுக்கு இடையில் சிறந்த இணைப்பாகக் கருதப்படுகிறார். இந்திய சித்த வைத்திய முறையை தோற்றுவித்தவர் அகத்தியர். அவரது பிறந்த நாளை தேசிய சித்த நாளாக டிசம்பர் 19-ம் கடைபிடிக்கப்படுவது நினைவுகூரத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Loading comments...

 
x