Published : 14 Feb 2025 06:25 AM
Last Updated : 14 Feb 2025 06:25 AM
புதுடெல்லி: மணிப்பூரில் ஆளுநரின் பரிந்துரையை ஏற்று குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டுள்ளது. மாநிலம் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் பழங்குடி அந்தஸ்து கோரும் மைதேயி சமுதாய மக்களுக்கு எதிராக குகி, நாகா உள்ளிட்ட பழங்குடியின மக்கள் போர்க்கொடி உயர்த்தினர். இதன்காரணமாக கடந்த 2023-ம் ஆண்டு மே மாதம் மைதேயி, குகி சமுதாயங்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டது. மாநிலம் முழுவதும் கலவரம் வெடித்து இதுவரை 250 பேர் உயிரிழந்துள்ளனர். 1,500-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். 32 பேரை காணவில்லை. 5,000-க்கும் மேற்பட்ட வீடுகள் தீ வைத்து எரிக்கப்பட்டன. கோயில்கள், தேவாலயங்கள் சேதப்படுத்தப்பட்டன. சுமார் 65,000-க்கும் மேற்பட்டோர் இடம் பெயர்ந்தனர். இதில் பெரும்பாலானோர் நிவாரண முகாம்களிலேயே வசிக்கின்றனர். மாநிலம் முழுவதும் 11,000-க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன.
இரண்டரை ஆண்டுகளாகியும் மணிப்பூரில் இன்னமும் இயல்பு நிலை திரும்பவில்லை. மைதேயி, குகி சமுதாய மக்கள் அவ்வப்போது தொடர்ந்து மோதல்களில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த ஆண்டு மட்டும் 120-க்கும் மேற்பட்ட வன்முறை சம்பவங்கள் நடந்தன. இந்த சூழலில் கடந்த 10-ம் தேதி மணிப்பூர் சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத் தொடர் தொடங்க இருந்தது. இந்த கூட்டத்தொடரை ஆளுநர் அஜய் குமார் பல்லா திடீரென ரத்து செய்தார். சட்டப்பேரவையில் மொத்தம் 60 எம்எல்ஏக்கள் இருந்தனர். இதில் பெரும்பான்மையை நிரூபிக்க 31 எம்எல்ஏக்களின் ஆதரவு தேவை. ஆளும் பாஜகவுக்கு 32 எம்எல்ஏக்களின் ஆதரவு இருந்தது. ஆனால் குகி சமுதாயத்தை சேர்ந்த சில பாஜக எம்எல்ஏக்கள் முதல்வர் பிரேன் சிங்குக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தினர். அவருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரவும் திட்டமிடப்பட்டு இருந்தது.
இந்த சூழலில் கடந்த சில நாட்களுக்கு முன்பு முதல்வர் பிரேன் சிங் பதவியை ராஜினாமா செய்தார். மாநிலத்தின் தற்போதைய நிலைமை தொடர்பாக ஆளுநர் அஜய் குமார் பல்லா, குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவிடம் விரிவான அறிக்கையை தாக்கல் செய்தார். அதில் மணிப்பூரில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்செய்ய ஆளுநர் பரிந்துரை செய்திருந்தார். இதைத் தொடர்ந்து மணிப்பூரில் நேற்று குடியரசுத் தலைவர் ஆட்சி அமல் படுத்தப்பட்டது. இதுதொடர்பாக குடியரசுத் தலைவர் மாளிகை வெளியிட்டஅரசாணையில், ‘ஆளுநர் அளித்த அறிக்கை முழுமையாக ஆய்வு செய்யப்பட்டது. மணிப்பூரில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல் செய்ய வேண்டிய அவசியம் எழுந்திருப்பது தெளிவாகிறது. எனவே 356-வது பிரிவின்படி மணிப்பூரில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்படுகிறது. ஆட்சி, நிர்வாகத்தை ஆளுநர் மேற்கொள்வார்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவசர ஆலோசனை: மணிப்பூர் தலைநகர் இம்பாலில் உள்ள ஆளுநர் மாளிகையில் நேற்று ஆளுநர் அஜய் குமார் பல்லா தலைமையில் அவசர ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் சிஆர்பிஎஃப் மூத்த அதிகாரிகள் பங்கேற்றனர். மணிப்பூர் முழுவதும் மேற்கொள்ளப்பட்டு இருக்கும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆளுநரிடம், சிஆர்பிஎஃப் அதிகாரிகள் விரிவாக விளக்கம் அளித்தனர். ஆளுநரின் உத்தரவின்பேரில் மாநில காவல் துறை மற்றும் சிஆர்பிஎஃப் படை சார்பில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. குறிப்பாக மைதேயி, குகி பிரிவை சேர்ந்த கிளர்ச்சிக் குழுக்கள் கண்காணிப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டு உள்ளன. முன்னாள் முதல்வர் பிரேன் சிங் நேற்று கூறியதாவது: கடந்த 2023-ம் ஆண்டு மே மாதத்துக்கு பிறகு நடைபெற்ற வன்முறை சம்பவங்களால் சட்டம், ஒழுங்கு கடுமையாக பாதிக்கப்பட்டது. மாநில அரசால் நிலைமையை கையாள முடியவில்லை.
மணிப்பூர், மியான்மர் இடையே 398 கி.மீ. தொலைவுக்கு எல்லைப்பகுதி நீள்கிறது. இதனால் ஊடுருவல் அதிகரித்து வருகிறது. இந்த நேரத்தில் ஊடுருவலை தடுப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். குகி சமுதாய மக்களின் ஐடிஎல்எப் அமைப்பின் செய்தித் தொடர்பளர் கின்ஜா வுல்ஜாங் கூறும்போது, ‘‘இரு சமுதாயங்களும் இணைந்து வாழ முடியாது. குகி சமுதாய மக்கள் வசிக்கும் பகுதிகளை பிரித்து தனி மாநிலத்தை உருவாக்க வேண்டும். இதன்மூலம் மட்டுமே பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண முடியும்’’ என்று தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment