Published : 13 Feb 2025 12:07 PM
Last Updated : 13 Feb 2025 12:07 PM

‘காலத்தால் அழியாத சக்தி வாய்ந்த ஊடகம்’ - வானொலி நாளில் பிரதமர் மோடி நெகிழ்ச்சி

பிரதமர் மோடி | கோப்புப்படம்

புதுடெல்லி: உலக வானொலி நாளான இன்று (பிப்.13) அதன் முக்கியத்துவத்தை எடுத்துரைக்கும் விதமாக ‘உலகெங்கும் உள்ள மக்களை இணைக்கும் சக்தி வாய்ந்த ஊடகம்’ என்று பிரதமர் மோடி புகழ்ந்துள்ளார்.

இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், “உலக வானொலி நாள் வாழ்த்துகள். மக்களுக்கு தகவலை அளித்தல், உற்சாகமளித்தல், மக்களை இணைத்தல் என பலருக்கும் காலத்தால் அழியாத சக்திவாய்ந்த ஊடகமாக விளங்குகிறது. வானொலி உலகத்துடன் தொடர்புடைய அனைவரையும் நான் மனதாரப் பாராட்டுகிறேன். அதேுபோல் பிப்.23-ம் தேதி நடைபெற இருக்கும் மனதின் குரல் நிகழ்ச்சியில் உங்கள் கருத்துகளையும், அதற்கான உள்ளீடுகளையும் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.” என்று தெரிவித்துள்ளார்.

கடந்த 2014-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 3-ம் தேதி முதல் முதலாக ஒலிபரப்பப்பட்ட மனதின் குரல் நிகழ்ச்சி, அகில இந்திய வானொலி நிலையத்தில் ஒலிபரப்பாகும் நிகழ்ச்சிகளில் பரவலான மக்களால் விரும்பிக் கேட்கப்படும் ஒன்றாக உள்ளது. இதில், தேசிய மற்றும் சமூக முக்கியத்துவம் வாய்ந்த விஷயங்கள் குறித்து நாட்டுமக்களுடன் பிரதமர் மோடி உரையாடி வருகிறார்.

உலக வானொலி தினம் கடந்த 2011-ம் ஆண்டு யுனெஸ்கோ உறுப்பு நாடுகளால் அறிவிக்கப்பட்டது. பின்பு 2012-ம் ஆண்டு ஐக்கிய நாடுகள் பொதுச்சபையால் சர்வதேச தினமாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.

தகவல்கள், கலாச்சாரம் மற்றும் சமூக உரையாடல்களை உருவாக்குவதில் முக்கியமான தளமாக விளங்கும் வானொலியின் பங்கினை அங்கீகரிக்கும் விதமாக இந்த தினம் முதல்முதலாக பிப்.13ம் தேதி கொண்டாடப்பட்டது. தொலைக்காட்சி, ஸ்மார்ட் போன்களின் வளர்ச்சிக்கு மத்தியில், வெகுமக்கள் தொடர்பில வானொலி ஒரு தனித்துவமான பங்கினை வகித்து வருகிறது. அது மக்களுக்கு செய்திகள், பொழுதுபோக்கு மற்றும் கல்வியில் முக்கியமான ஆதாரமாக விளங்கி வருகிறது.

அதிலும் குறிப்பாக ‘கம்யூனிட்டி ரேடியோ’ எனப்படும் சமூக வானொலிகள், பிரதிநிதித்துவப்படுத்தப்படாத குரல்களை வெளியே கொண்டு வருவதிலும், காலநிலை மாற்றம் உள்ளிட்ட சமூக மற்றும் சுற்றுச்சூழல் பிரச்சினைகளில் விழிப்புணர்வினை ஏற்படுத்துகிறது.

சர்வதேச வானொலி தினம், இன்றும் நீடித்து வரும் வானொலியின் தேவை, உரையாடல்கள் உருவாக்குவதில் அதன் பங்கு, புவியியல் மற்றும் கலாச்சார எல்லைகளைக் கடந்து மக்களை ஒன்றிணைக்கும் அதன் திறனையும் நினைவூட்டுகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Loading comments...

 
x