Published : 13 Feb 2025 10:07 AM
Last Updated : 13 Feb 2025 10:07 AM
வாஷிங்டன்: அமெரிக்க உளவுத்துறை தலைவர் துளசி கப்பார்டை பிரதமர் நரேந்திர மோடி சந்தித்தார். தொடர்ந்து அவர் அதிபர் டொனால்டு ட்ரம்ப்பை சந்திக்கவுள்ளார்.
அமெரிக்காவுக்கு இரண்டு நாள் அரசு முறைப்பயணமாக சென்றுள்ள பிரதமர் மோடி வியாழக்கிழமை காலை வாஷிங்டன்னில் அமெரிக்க உளவுத் துறை இயக்குநர் துளசி கப்பார்டை சந்தித்தார். இது தொடர்பாக மோடி தாது எக்ஸ் பக்கத்தில், அமெரிக்க உளவுத்துறை தலைவர் துளசி கப்பார்டை நான் வாஷிங்கடன்னில் சந்தித்தேன். அவருடன் இந்திய - அமெரிக்க நட்புறவு குறித்து ஆலோசித்தேன். இந்தியாவுடனான நட்புறவைப் பேணுவதில் துளசி எப்போதுமே உறுதியாக இருப்பவர். அவர் ட்ரம்ப் அரசாங்கத்தில் முக்கியப் பொறுப்புக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளதற்காக வாழ்த்தும் தெரிவித்தேன்.” என்று குறிப்பிட்டுள்ளார்.
யார் இவர்? - 43 வயதான துளசி கப்பார்ட் அமெரிக்காவின் ஹவாய் மாகாணத்தில் இருந்து ஜனநாயக கட்சி சார்பில் 4 முறை எம்.பி.யாக தேர்வு செய்யப்பட்டவர். அமெரிக்காவின் முதல் இந்து எம்.பி. இவர் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர் அல்ல. கடந்த 1981-ல் அமெரிக்காவில் பிறந்தவர். அவரது குடும்பத்தினர் இந்து மதத்துக்கு மதம் மாறியுள்ளனர். அமெரிக்க ராணுவத்தில் பணியாற்றி உள்ளார்.
கடந்த 2022-ல் ஜனநாயக கட்சியில் இருந்து விலகினார். நடப்பு ஆண்டு அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சியை சேர்ந்த டொனால்ட் ட்ரம்புக்கு ஆதரவு தெரிவித்தார். தொடர்ந்து தேர்தல் பிரச்சாரத்தில் ட்ரம்புக்கு ஆதரவாக பேசினார். தனது பரப்புரையில் தற்போதைய துணை அதிபர் கமலா ஹாரிஸை விமர்சித்தார். அது ட்ரம்ப் வெற்றிக்கு உதவியது. இந்நிலையில், உளவுத்துறை இயக்குநராக அவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
அமெரிக்கா சென்றுள்ள மோடியின் முதல் சந்திப்பு முன்னதாக அமெரிக்கா சென்ற அவருக்கு அங்கு வாழும் இந்தியர்கள் உற்சாக வரவேற்பு நல்கினர். இதனை சுட்டிக்காட்டிய பிரதமர், “அத்தனை குளிருக்கும் இடையே இந்தியர்கள் இதமான வரவேற்பை நல்கினர். அவர்களின் சிறப்பான வரவேற்புக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.” என்று குறிப்பிட்டுள்ளார்.
இதற்கிடையில், வெளிநாட்டு ஊழல் நடைமுறை சட்டத்தை நிறுத்தி வைக்கும் நிர்வாக உத்தரவில் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கையெழுத்திட்டார்.
எப்சிபிஏ எனப்படும் வெளிநாட்டு ஊழல் நடைமுறைகள் சட்டத்தை நிறுத்தி வைப்பதற்கான நிர்வாக உத்தரவில் ட்ரம்ப் கையெழுத்திட்டுள்ளார். இது, அமெரிக்க நிறுவனங்களுக்கு பாதகமாக இருப்பதாகவும், புதிய சட்டத்தை உருவாக்கும்படியும் அட்டர்னி ஜெனரலுக்கு அவர் உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரதமர் மோடி அமெரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ள நிலையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்திய தொழிலதிபர் அதானி மீது அமெரிக்க நீதித்துறை குற்றச்சாட்டு பதிவு செய்துள்ள நிலையில் அவருக்கு ஆறுதல் அளிக்கும் விதமாக இந்த அறிவிப்பு வந்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Loading comments...