Published : 11 Feb 2025 05:42 AM
Last Updated : 11 Feb 2025 05:42 AM

ஆம் ஆத்மியும் காங்கிரஸும் ஒன்றையொன்று அழிக்க போராடின: உத்தவ் சிவசேனா கட்சி கருத்து

இண்டியா கூட்டணிக் கட்சிகளான ஆம் ஆத்மி, காங்கிரஸ் இடையிலான பிளவு, டெல்லி தேர்தலில் பாஜகவின் மகத்தான வெற்றிக்கு வழிவகுத்தது என்று சிவசேனா (உத்தவ்) கட்சி கூறியுள்ளது.

டெல்லி சட்டப்பேரவை தேர்தலில் 48 இடங்களை கைப்பறிய பாஜக, அர்விந்த் கேஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சியை ஆட்சியில் இருந்து அகற்றியது. காங்கிரஸ் கட்சியும் தொடர்ந்து மோசமான தோல்வியை தழுவியது.

இதுகுறித்து சிவசேனா (உத்தவ்) கட்சி தனது 'சாம்னா' நாளிதழில் கூறியிருப்பதாவது: டெல்லியில், ஆம் ஆத்மியும் காங்கிரஸும் ஒன்றையொன்று அழிக்கப் போராடின, இது பிரதமர் மோடி, அமைச்சர் அமித் ஷாவுக்கு விஷயங்களை எளிதாக்கியது. இது தொடர்ந்தால், ஏன் கூட்டணிகளை உருவாக்க வேண்டும்?

டெல்லி தேர்தல் பிரச்சாரத்தில் ஆம் ஆத்மியும் காங்கிரஸும் பரஸ்பரம் கடுமையாக விமர்சனம் செய்தன. எதிர்க்கட்சிகள் இடையே இதேபோன்ற பின்னடைவு கடந்த ஆண்டு மகாராஷ்டிராவிலும் ஏமாற்றத்தை அளித்தது. டெல்லி தேர்தல் முடிவுகளில் இருந்து எதிர்க்கட்சிகள் பாடம் கற்கத் தவறினால், அது மோடி மற்றும் அமித் ஷாவின் எதேச்சதிகார ஆட்சியை வலுப்படுத்தும்.

கடந்த ஆண்டு ஹரியானாவிலும் இதுபோன்ற நிலைமை ஏற்பட்டது. அங்கு பாஜக வெற்றி பெற்றது. காங்கிரஸ் கட்சிக்குள் உள்ள சில சக்திகள் ராகுல் காந்தியின் தலைமையை வலிவற்றதாக மாற்ற விரும்புகின்றனவா என்ற சந்தேகம் எழுகிறது.

இப்படித்தான் நடக்கப் போகிறது என்றால், கூட்டணி அமைக்க வேண்டிய அவசியமில்லை. உங்களுக்குள் சண்டையிட்டுக் கொண்டே இருங்கள்! டெல்லி தேர்தலில் இருந்து யாரும் பாடம் கற்கப் போவதில்லை எனில், சர்வாதிகாரம் அதிகாரம் பெறுவதற்கு உதவிய பெருமையை அவர்கள் பெறலாம். இதுபோன்ற உன்னதமான பணிகளை செய்வதற்காக கங்கை நதியில் குளிக்க வேண்டிய அவசியமில்லை.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Loading comments...

 
x