Published : 09 Feb 2025 07:02 AM
Last Updated : 09 Feb 2025 07:02 AM

கேஜ்ரிவாலை வீழ்த்திய பர்வேஷ் வர்மா யார்? - சர்ச்சை பேச்சால் பாஜகவில் அதிருப்திக்கு உள்ளானவர்!

புதுடெல்லி: டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் புதுடெல்லி தொகுதியில் போட்டியிட்ட ஆளும் ஆம் ஆத்மி கட்சியின் முன்னாள் முதல்வர் கேஜ்ரிவால் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார். இந்தத் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட முன்னாள் முதல்வர் ஷீலா தீக்சித்தின் மகன் சந்தீப் தீக்சித்தும் தோல்வி அடைந்தார்.

இந்த 2 முக்கிய பிரபலங்களை தோற்கடித்து வெற்றி பெற்றவர் பாஜக வேட்பாளர் பர்வேஷ் வர்மா, ஆனால், பாஜக மேலிடத்தில் இவர் மீது கடும் அதிருப்தி நிலவியது. கடந்த 2014-ம் ஆண்டு மேற்கு டெல்லி மக்களவை தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் வர்மா. அடுத்து 2019-ம் ஆண்டு தேர்தலிலும் 2-வது முறையாக வெற்றி பெற்று எம்.பி.யானார். 2014-ல் ஆம் ஆத்மி வேட்பாளர் ஜர்னைல் சிங், 2019-ம் ஆண்டில் காங்கிரஸ் வேட்பாளர் மகாபால் மிஸ்ரா ஆகியோரை தோற்கடித்து வெற்றி பெற்றவர் வர்மா.

ஆனால், கடந்த 2024-ம் ஆண்டு நடைபெற்ற மக்களவை தேர்தலில் அவருக்கு பாஜக வாய்ப்பு வழங்கவில்லை. இது அரசியல் வட்டாரத்தில் பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

முன்னதாக கடந்த 2020-ம் ஆண்டு குடியுரிமை சட்டத்தை எதிர்த்து டெல்லியில் போராட்டம் நடைபெற்றது. அப்போது சிறுபான்மையினருக்கு எதிராக பர்வேஷ் வர்மா சில கருத்துகளை தெரிவித்திருந்தார். அந்த கருத்துகள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தின. எனினும், ஊடகங்களில் மிகவும் பிரபலமானார். எனினும் பாஜக மேலிடத் தலைவர்கள் கடும் அதிருப்தி அடைந்தனர். அதனால் 2024 தேர்தலில் 'சீட்' வழங்கவில்லை என்று கூறப்பட்டது. ஆனால், தற்போது நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் கேஜ்ரிவாலை எதிர்த்து போட்டியிட பாஜக வாய்ப்பு வழங்கியது.

அதற்கேற்ப தன் மீதான சர்ச்சைகளை எல்லாம் தாண்டி, டெல்லி தேர்தலில் கேஜ்ரிவாலை தோற்கடித்து வெற்றி வாகை சூடியுள்ளார் வர்மா. இந்த வெற்றி குறித்து வர்மா கூறும்போது, “மத்தியிலும் டெல்லி யூனியன் பிரதேசத்திலும் இரட்டை இன்ஜின் ஆட்சி தற்போது உருவாகி உள்ளது. இதன் மூலம் பிரதமர் மோடியின் தொலைநோக்கு திட்டங்கள் டெல்லியை வந்தடையும்” என்றார்.

ஆர்எஸ்எஸ் சித்தாந்தங்கள் மீது பற்று கொண்டு அந்த அமைப்பில் இணைந்து பணியாற்றியவர் வர்மா. பின்னர் பாஜக.வில் இணைந்தார். பின்னர் படிப்படியாக உயர்ந்து பாஜக எம்.பி.யானார். எம்.பி.க்களின் சம்பளம், சலுகைகளை நிர்ணயிப்பது தொடர்பான நாடாளுமன்ற கூட்டுக் குழு உறுப்பினராகவும், நகர்ப்புற மேம்பாட்டு தொடர்பான நிலைக் குழு உறுப்பினராகவும் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை நிர்வாக குழு உறுப்பினராகவும் பணியாற்றினார்.

கடந்த 2013-ம் ஆண்டு டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் மெக்ராலி தொகுதியில் போட்டியிட்டு வர்மா வெற்றி பெற்றார். இவரது தந்தை சாஹிப் சிங் வர்மாவும் பாஜக சார்பில் டெல்லி முதல்வராக இருந்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Loading comments...

 
x