Last Updated : 30 Jul, 2018 02:38 PM

 

Published : 30 Jul 2018 02:38 PM
Last Updated : 30 Jul 2018 02:38 PM

“என் மகனுக்கு நேர்ந்த கதி யாருக்கும் வரக்கூடாது”: சாலையில் ஏற்பட்ட 556 குழிகளை சொந்த செலவில் மூடிய தந்தை

சாலையில் ஏற்பட்ட குழிக்குள் விழுந்து பலியான இளைஞரின் நினைவாக, மும்பையில் 556 குழிகளை மண், கற்களை நிரப்பி மூடியுள்ளார் அந்த இளைஞரின் தந்தை.

சாலைக் குழியில் விழுந்து பலியான என் மகனுக்கு ஏற்பட்ட கதி வேறு யாருக்கும் வரக்கூடாது என்று அந்த இளைஞரின் தந்தை உருக்கமாகத் தெரிவித்துள்ளார்.

மும்பையைச் சேர்ந்தவர் அடாராவ் பில்ஹோர்(வயது48). இவரின் மகன் பிரகாஷ்(வயது16). கடந்த 2015-ம் ஆண்டு, ஜுலை 28-ம் தேதி பிரகாஷ் பைக்கில் செல்லும் போது, ஜோகேஸ்வரி-விக்ரோலி லிங்க் சாலையில் உள்ள குழிக்குள் பைக் சிக்கித் தூக்கிவீசப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

தன் மகன் இறந்து 3-ம் ஆண்டு நினைவு கடந்த 28-ம் தேதி வந்தது. அப்போது, அடாராவ் பில்ஹோர், தனது மகனுக்கு ஏற்பட்ட கதி சாலையில் இரு சக்கர வாகனத்தில் செல்லும் யாருக்கும் வந்துவிடக்கூடாது என்பதற்காக, மும்பையில் சாலையில் இருக்கும் 556 குழிகளைத் தனது செலவில் மண், கற்களைக் கொண்டு பில்ஹோர் நிரப்பினார்.

இது குறித்து அடாராவ் பில்ஹோர் ஏஎன்ஐ நிறுவன நிருபரிடம் கூறுகையில், “ மும்பை சாலையில் ஏற்பட்ட குழிகளால் ஒவ்வொரு ஆண்டும், பருமழை காலத்தில் நூற்றுக்கணக்கானோர் விழுந்து காயமடைகின்றனர், இருசக்கர வாகனத்தில் செல்வோர் விழுந்து சில நேரங்களில் மரணமடைகின்றனர். என் மகனும் இதுபோல் குழிக்குள் விழுந்து இறந்து 3 ஆண்டுகள் ஆகிறது.

என்மகனுக்கு ஏற்பட்ட கதி, அடுத்து யாருக்கும் ஏற்பட்டுவிடக்கூடாது, இருசக்கர வாகனத்தில் செல்வோர் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பதற்காகவே நான் குழிக்குள் கற்கள், மண்ணை நிரப்பி மூடினேன்.

மும்பை சாலையை குழிகள் இல்லாமல் மாற்றும் வரை எனது பணி தொடரும். இதுவரை மும்பையில் 556 குழிகளை எனது சொந்த செலவில் சரி செய்திருக்கிறேன். நம்முடைய நாட்டில் ஒரு லட்சம் மக்கள் இதுபோன்று குழிகளைச் சொந்தமாக செலவு செய்து நிரப்பினால், குழிகள் இல்லாத சாலையாக மாறும்.

மக்களின் கவலையையும், தேவைகளையும் தீர்க்காமல், மும்பை மாநகராட்சியும், மும்பை மெட்ரோபாலிட்டன் மேம்பாட்டு ஆணையும் சாலையை செப்பனிடுவதில் சண்டையிட்டு வருகின்றனர். இந்தக் குழிகள் அனைத்தையும் மக்கள் தாமாக முன்வந்து நிரப்பும்போதுதான், அதைப்பார்த்து இரு அரசுஅமைப்புகளும் சாலையைப் பராமரிக்க முயற்சி எடுப்பார்கள்” எனத் தெரிவித்தார்.

ஆண்டுதோறும் சாலையில் ஏற்பட்ட குழிக்குள் விழுந்து 9 ஆயிரத்து 300 பேர் உயிரிழக்கின்றனர், 23 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் காயமடைகின்றனர் என்று சமீபத்தில் நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

பருவமழை தொடங்கிய பின் மும்பை சாலையில் ஏற்பட்ட குழிக்குள் விழுந்து இதுவரை 6 பேர் உயிரிழந்துள்ளனர், பலர் காயமடைந்துள்ளனர். சாலையை செப்பணிடக்கோரி சிவசேனாக் கட்சியின் சார்பில் அரசுக்கு எதிராகப் போராட்டம் நடத்தியதும் குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x