Published : 06 Feb 2025 04:59 PM
Last Updated : 06 Feb 2025 04:59 PM
புதுடெல்லி: பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் பேராசிரியர்கள் மற்றும் கல்வி பணியாளர்கள் நியமனம் குறித்த யுஜிசியின் புதிய வரைவு விதி, ‘ஒரு வரலாறு, ஒரு பாரம்பரியம், ஒரு மொழி’ என்பதை திணிக்கும் முயற்சி என்று ராகுல் காந்தி கடுமையாக விமர்சித்துள்ளார்.
பல்கலைக்கழக மானியக் குழுவின் (யுஜிசி) புதிய வரைவுக்கு எதிர்ப்புத் தெரிவித்து திமுக மாணவர் அணி டெல்லி ஜந்தர்மந்தர் மைதானத்தில் போராட்டம் நடத்தியது. அந்தப் போராட்டத்தில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும், காங்கிரஸ் எம்.பி.யுமான ராகுல் காந்தி கலந்து கொண்டார். அவர் கூறுகையில், "ஒவ்வொரு மாநிலத்துக்கும் அதற்கென சொந்தமான பாரம்பரியம், வரலாறு, மொழி உண்டு. அதனால்தான் நமது அரசியலமைப்பு, இந்தியாவை மாநிலங்களின் ஒன்றியம் என்று அழைக்கிறது என்று நான் அடிக்கடி சொல்கிறேன்.
மாநிலங்களின் ஒன்றியம் என்றால், இந்த அனைத்து வரலாறுகள், பாரம்பரியங்கள், மொழிகள் ஒன்றாக இணைந்து இந்தியாவை மாநிலங்களின் ஒன்றியமாக்குகின்றன. நாம் இந்த அனைத்து மொழிகள், கலாச்சாரங்கள், பாரம்பரியங்கள், வரலாறுகளை மதிக்க வேண்டும். அவை எங்கிருந்து வருகின்றன என்பதையும் நாம் உணரவேண்டும். தமிழ் மக்களும் அவர்களுக்கான வரலாறு, மொழி, பாரம்பரியம் உண்டு, அவர்களுக்கான போராட்டங்களும் உண்டு.
நாட்டின் மற்ற அனைத்து வரலாறுகள், கலாச்சாரங்கள் மற்றும் பாரம்பரியங்களை அழிப்பதே ஆர்எஸ்எஸ் அமைப்பின் நோக்கம். அதுதான் அதன் துவக்கப்புள்ளி. அதனைத்தான் அது அடைய விரும்புகிறது. ஆர்எஸ்எஸ் தனது கருத்தான, ஒரு வரலாறு, ஒரு பாரம்பரியம், ஒரு மொழி என்பதை அடைவதற்காக அரசியலமைப்பை தாக்குகிறது. யுஜிசி வரைவு நெறிமுறைகள் வெறும் கல்வி சார்ந்த நகர்வல்ல, அது தமிழகத்தின் வளமான மரபின் மீதும், இந்தியக் கூட்டாட்சியியலின் அடிப்படை மீதும் தொடுக்கப்படும் தாக்குதலாகும்" என்று தெரிவித்தார்.
எதிர்க்கட்சிகளின் இண்டியா கூட்டணிக் கட்சிகளில் ஒன்றான சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், "அவர்கள் அரசியல்வாதிகளை தொழிலதிபர்களின் பணியாளர்களாக மாற்றப்பார்க்கிறார்கள். புதிய கல்வி கொள்கையை நாம் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது. இங்கே இருக்கும் அனைத்து மாணவர்களையும் நீங்கள் எடுத்துள்ள முடிவினையும் நான் ஆதரிக்கிறேன். நான் புதிய கல்விக் கொள்கைக்கு எதிராக உள்ளேன்" என்று தெரிவித்தார்.
காங்கிரஸ் கட்சியின் ஊடகப் பிரிவு பொறுப்பாளர் ஜெய்ராம் ரமேஷ், "கர்நாடகா அமைச்சர் எம்.சி. சுதாகர் தலைமையில் பெங்களூருவில் நடந்த மாநில உயர் கல்வி அமைச்சர்களின் மாநாட்டில், கர்நாடகா, தெலங்கானா, தமிழ்நாடு, இமாச்சலப் பிரதேசம் மற்றும் ஜார்க்கண்ட் (பாஜக ஆளாத மாநிலங்கள்) மாநில அமைச்சரகள் அல்லது அவர்களின் பிரதிநிதிகள், யுஜிசியின் கடுமையான வரைவு விதிகள் குறித்த 15 தீர்மானங்களை ஏற்றுக்கொண்டுள்ளன" என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Loading comments...