Published : 06 Feb 2025 01:54 AM
Last Updated : 06 Feb 2025 01:54 AM
இந்துக்கள் அல்லாத, இந்து மதத்தை மதித்து நடக்காத 18 தேவஸ்தான ஊழியர்கள் மீது திருப்பதி தேவஸ்தானம் ஒழுங்கு நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளது.
திருமலை திருப்பதி தேவஸ்தானத்தில் பணியாற்றிக்கொண்டே, இதர மதத்தை ஏற்று, இந்து மதத்திற்கு கேடு விளைவிக்கும் படியான நடவடிக்கைகளில் ஈடுபட்ட 18 தேவஸ்தான ஊழியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கும்படி திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் பிஆர் நாயுடு உத்தரவிட்டுள்ளார்.
கடந்த நவம்பர் மாதம் 18-ம் தேதி, பிஆர் நாயுடு தலைமையில் முதன் முறையாக நடைபெற்ற தேவஸ்தான அறங்காவலர் குழு கூட்டத்தில் இந்து சமய அறநிலைத்துறையின் சட்டப்பிரிவு 1060,1989 படி, இந்து மத சம்பிரதாயங்களை கடைபிடிப்போம் என பிரமாணம் செய்து, அதனை கடைபிடிக்காதது மட்டுமின்றி, திருப்பதி தேவஸ்தானத்தில் பணியில் இருந்து கொண்டே வேற்று மதத்திற்கு ஆதரவு தெரிவித்தும், அதற்கான கூட்டங்களில் பங்கேற்றும் வரும் 18 வேற்று மத ஊழியர்களை கண்டறிந்து, அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க நேற்று தேவஸ்தான அறங்காவலர் பிஆர் நாயுடு உத்தரவிட்டார். அதற்கு முன் இவர்கள் குறித்த அன்றாட நடவடிக்கைகள் ரகசியமாக கண்காணிக்கப்பட்டது. அதன் பிறகே தகுந்த ஆதாரங்களுடன் தற்போது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படுவதுடன், திருமலை திருப்பதி தேவஸ்தானத்திற்கு சொந்தமான எந்தவொரு கோயில்களிலோ, கோயில் சம்பந்தப்பட்ட பணிகளிலோ இவர்கள் பணி செய்ய கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், வேற்று மத ஊழியர்கள் தேவைப்பட்டால் அவர்கள் கட்டாய ஓய்வு எடுத்துக்கொண்டு செல்லலாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்த 18 பேர் தவிர மேலும் பல வேற்று மத ஊழியர்கள் திருப்பதி தேவஸ்தானத்திற்கு உட்பட்ட பள்ளி, கல்லூரி, மருத்துவமனைகளில் பணியாற்றி வருகின்றனர்.
இந்துக்களின் பெயர்களோடு, பொய் சாதி சான்றிதழ் கொடுத்து இவர்கள் பணியாற்றி வருவதையும் தேவஸ்தான கண்காணிப்பு பிரிவினரின் ரகசிய ஆய்வில் தெரியவந்துள்ளது. இது குறித்தும் விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பிஆர் நாயுடு தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Loading comments...