Published : 15 Jul 2018 01:22 AM
Last Updated : 15 Jul 2018 01:22 AM
திருப்பதி ஏழுமலையான் கோயி லில் பாலாலய மஹா சம்ப்ரோஷணத்தை ஒட்டி ஆகஸ்ட் 9-ம் தேதிமுதல் எட்டு நாட்களுக்கு சுவாமி தரிசனம் முழுமையாக ரத்து செய்யப்படுகிறது என்று அறங்காவலர் குழு அறிவித்துள்ளது. இதற்கு பக்தர்களிடையே கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.
திருமலையில் உள்ள அன்னமைய்யா பவனில் அறங்காவலர் குழுத் தலைவர் புட்டா சுதாகர் யாதவ் தலைமையில் நேற்று அறங்காவலர் குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்குப் பிறகு புட்டா சுதாகர் யாதவ் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
12 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படும் பாலாலய மஹா சம்ப்ரோஷணம் ஆகஸ்ட் 12- ம் தேதி தொடங்கி 16-ம் தேதி வரை நடத்தப்படுகிறது. இதனை முன்னிட்டு வரும் ஆகஸ்ட் 11-ம் தேதி மாலை கோயிலில் அங்குரார்பண நிகழ்ச்சிகள் நடக்கின்றன. இதனால், ஆகஸ்ட் 9-ம் தேதி மாலை 6 மணியில் இருந்து 17-ம் தேதி காலை 6 மணி வரை பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட மாட்டார்கள். இதற்கு தகுந்தவாறு பக்தர்கள் தங்களது திருப்பதி பயணத்தை மாற்றி கொள்ளுமாறு தேவஸ்தானம் கேட்டுக்கொள்கிறது. இவ்வாறு புட்டா சுதாகர் யாதவ் கூறினார்.
கடந்த 2006-ம் ஆண்டில் நடைபெற்ற பாலாலய மஹா சம்ப்ரோஷணத்தின்போது பக்தர்கள் கோயிலுக்குள் அனுமதிக்கப்பட்ட நிலையில், இப்போது ஏன் அனுமதி மறுக்கப்படுகிறது என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதிலளித்த புட்டா சுதாகர் யாதவ், “அப்போது ஒரு நாளைக்கு 25 ஆயிரம் பேர் மட்டுமே ஏழுமலையானை தரிசித்தனர். ஆனால் இப்போது ஒரு நாளைக்கு சுமார் ஒரு லட்சம் பேர் சுவாமி தரிசனத்துக்கு வருவதால் முழுவதுமாக ரத்து செய்ய நேரிட்டது” என பதிலளித்தார்.
கிரகணத்தின்போது தவிர, அரசர் காலம் முதல் தற்போது வரை எந்த நாட்களிலும் திருப் பதி ஏழுமலையான் கோயில் மூடப்பட்டது இல்லை. அப்படி இருக்கையில், கோயில் வரலாற்றிலேயே முதன்முறையாக 8 நாட்கள் வரை பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
கோயில் மடப்பள்ளியில் சுரங் கம் தோண்டி தங்க, வைர நகைகளை அதிகாரிகள் கொண்டு சென்றுவிட்டதாக புகார் எழுந்துள்ள நிலையில், தற்போது பக்தர்களை அனுமதிக்காததும் புதிய சர்ச்சையை எழுப்பியுள் ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT